சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

அ(ல)ற(ல்) நிலையத்துறை!

தர்மம் காக்க, பக்தி தழைக்க வேண்டுமெனில் கோயில் வேண்டும். மன்னர்கள் ஆட்சக் காலத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்ட கோயில்களும், அந்தக் கோயில்களைப் பராமரிக்க ஒதுக்கப்பட்ட கிராம மானியங்களும் இன்றும் நடைமுறையில் உள்ளன. இவற்றில் மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்டப் கோயில்களில் சிற்பங்கள் அனைத்தும் கலைநயம் கொண்டவை. உயிரோட்டம் உள்ளவை. சில குறிப்பிட்ட வாஸ்து சாஸ்திரங்களின்படி அமைக்கப்பட்டவை.

கோயில்கள் மட்டுமல்ல, அங்குள்ள சிற்பங்களும் வாஸ்து சாஸ்திரத்தின்படி உருவாக்கப்பட்டவை என்பதால், அவற்றின் சக்தி அதிகம். காரணம், சிற்ப சாஸ்திரத்தின் அடிப்படையில், வாஸ்து முறைப்படி உருவாக்கப்படும் தெய்வ சிற்பங்களுக்கு உயிர் கொடுப்பவை எந்திரங்கள்தான். இந்த எந்திரங்களை சிலைகளுக்கு கீழ் அமைக்கப்படும் பட்டியல் கற்களில் ஸ்தாபித்து, அதன் மீது தெய்வத்தின் சிலைகளை நிறுத்தும்போது, நிச்சயம் அவற்றுக்கு உயிரோட்டம் ஏற்பட்டுவிடும்.

அதனால்தான், சில குறிப்பிட்ட கோயில்களுக்குச் சென்று வேண்டிக் கொண்டால், வேண்டுதல்கள் நிறைவேறுகின்றன என்பது மரபு வழி செய்திமட்டுமல்ல, இந்தக் கலிகாலத்திலும் கண்கூடான உண்மை. இந்த வகையில் கோயில்கள் உயிரோட்டத்துடன், காந்த அதிர்வுடன் இருக்க வேண்டுமெனில், அவற்றுக்கு நித்திய பூஜைகள் நடைபெற்றாக வேண்டும். ஐந்து காலம் அல்லது 3 கால பூஜைகள் கட்டாயம். குறைந்நத்பட்சம் ஒரு கால பூஜையாவது நடைபெற்றால்தான் கோயிலின் தெய்வீகத்தன்மையும், நல் அதிர்வுகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

இதை நம் முன்னோர்களும், கோயிலை கட்டிய ஸ்தபதிகள் மட்டுமின்றி, இவற்றுக்கு உத்தரவிட்ட மன்னர்களும் புரிந்து கொண்டிருந்தனர். இதற்காகவே, கோயில்களின் நித்திய பூஜைகளை உறுதிப்படுத்துவதற்காக கிராம மானியங்களை அள்ளி வழங்கியிருந்தனர். ஒரு பெரிய கோயில் இருந்தால், அந்தக் கோயிலை நிர்வாகம் செய்வதற்காக கிராம மானியங்கள் வழங்கப்பட்டிருந்தன. இதன்படி, அந்தக் குறிப்பிட்ட கிராமத்தில் செய்யும் அறுவடையில் அரசுக்கு கொடுக்கப்பட வேண்டிய வரி, நிலவரி உட்பட அனைத்தும் கிராமத்தின் தலைவரால் வசூலிக்கப்பட்டு, அது கோயில் நலனுக்கு வழங்கப்பட வேண்டும்.

இது முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இந்தியாவை கொள்ளையடித்த காலத்திலும், ஓரளவு நியாயமாகவே நடைபெற்றுக் கொண்டிருந்தன. காரணம், இவை குறித்த முழுமையான விபரங்கள் அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. இதுவே, பெரிய ஆறுதலான விஷயம். நாடு சுதந்திரம் பெற்ற பின்னர், அதாவது 1970ம் ஆண்டு நம் அரசியல் சாசனத்தில் மதச்சார்பின்மை என்ற வார்த்தை புகுத்தப்படும் முன்னர், குறிப்பாக 1960ம் ஆண்டில் இந்து கோயில்கள் பராமரிப்புக்காக இந்து சமய அறநிலையத்துறை உருவாக்கப்பட்டது.

இந்தத்துறை உருவாக்கப்பட்டபோது காமராஜர் ஆட்சிக் காலம். நேர்மையான மனிதர்களின் கீழ் இந்தத்துறை இருந்தது என்று மகிழ்ந்திருந்தனர். அறநிலையத்துறை தலைமையகம் சென்னை நுங்கம்பாக்கம் ரோட்டில் இருந்தாலும், சேலம், கோவை, நெல்லை, திருச்சி, மதுரை, சிவகங்கை, சென்னை, மயிலாடுதுறை, தஞ்சாவூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 10 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த மண்டலங்ளில் உள்ள கோயில்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 488 என்றும், இதுதவிர 56 திருமடங்களுடன் இணைந்த கோயில்களாக 58 கோயில்களும் உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை பட்டியலிட்டு இருந்தது.

சரி, இவ்வளவு கோயில்களையும் பராமரிக்க அந்தக் காலத்தில் வழங்கப்பட்ட கிராம மானியங்கள், ஜமீன்தார்கள், பண்ணையாளர்கள் தர்ம சிந்தனையுடன் வழங்கிய நஞ்செய், புஞ்செய் நிலங்கள் இருக்க வேண்டுமே, அதன் மதிப்பு எவ்வளவு என்று கேட்கிறீர்களா? தமிழகத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்கள் மட்டும் 4 லட்சத்து 78 ஆயிரத்து 347 ஏக்கர். இந்த சொத்துக்களில் இருந்து ஆண்டு 100 கோடி ரூபாய்க்குள்ளான வருமானம் மட்டுமே வருவதாக அற நிலையத்துறை அதிகாரிகள் வருத்தப்படுகின்றனர்.

வசூலிக்கப்படாத வருவாய்கள்!

இந்த வருத்தம் நியாயமானதா? நிச்சயமாக இல்லை. பேர்தான் இந்து சமய அறிநிலையத்துறை. அங்கு நடப்பது எல்லாம் அறத்துக்கு அப்பாற்பட்ட செயல்கள்தான். இணையத்தில் சிதறி கிடக்கும் சில தகவல்களில் இருந்து…

* சென்னை கபாலீஸ்வரர் கோயிலுக்கு பிரபலமான அமிர்தாஞ்சன் நிறுவனம் 2011ம் ஆண்டு வரை செலுத்தாமல் வைத்துள்ள வாடகை நிலுவை 6 கோடியே 45 லட்சம் ரூபாய்.

* சென்னை சென்ன மல்லீஸ்வரர் கோயிலுக்கு வர வேண்டிய வாடகை பாக்கி ஒரு கோடி ரூபாய்.

* காஞ்சிபுரம் குமரக்கோட்டம் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு காங்கிரஸ் பிரமுகர் அரங்கநாதன் செலுத்த பாக்கி 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகம்.

* தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து சென்னை கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 180 கோடி ரூபாய் நிலம் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து பல போராட்டங்களுக்குப் பின்னர் மீட்கப்பட்டது.

* கொடைக்கானலைச் சேர்ந்த வி.என்.ஏ.எஸ். சந்திரன் என்ற பக்தர், கடந்த 2003ம் ஆண்டில் தன் சொத்தில் ஒரு பெரிய தொகையை பழனி முருகன் கோயிலுக்கு உயில் எழுதிவைத்தார். இந்த உயில் நகல் அறநிலையத்துறை கமிஷனருக்கு அனுப்பப்பட்டது. வால்பாறை, மூணாறு ஆகிய இடங்களில் உள்ள இந்த பிரமுகரின் தேயிலைத் தோட்டங்களில் பெரும்பாலானவை இந்த உயிலில் வந்துவிட்டன. இதன் மதிப்பு மட்டும் ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டும் என்கின்றனர் மதிப்பீட்டாளர்கள்.

மேற்கண்டவை எல்லாம் அறநிலையத்துறையின் செயல்பாடுகளுக்கு ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் என்பதற்கான உதாரணங்கள்தான். கோயிலுக்கு வர வேண்டிய குறைந்தபட்ச நியாயமான வருமானத்தை கூட வசூலிக்க முடியாத நிர்வாகங்கள் இருப்பது ஏன்? என்ற சர்ச்சை வெடிக்கத் தொடங்கியுள்ளது. கோயிலின் வருமானத்தில் சம்பளம் பெறும் ஊழியர்கள் தங்கள் சம்பளத்துக்கு விசுவாசம் காண்பிப்பது இல்லை என்பது வேதனையான விஷயம்.

நிலங்களின் அவலம்

திருக்கோயில்களுக்கு 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இருப்பதாக கணக்குக் காண்பித்துள்ளார்களே? அவற்றின் வருமானம் என்பது எவ்வளவு இருக்கும்? அறநிலையத்துறை அதிகாரிகள் சிலரிடம் பேசும்போது சொன்ன ரகசியம் இது…‘‘நிலம் இருக்கு. வருமானமும் இருக்கு. ஒவ்வொரு கோயிலுக்கும் எவ்வளவு நிலம் இருக்கிறது என்று கோயில் கணக்குப் பிள்ளைகளுக்கு அந்தக் காலத்தில் இருந்து அத்துப்படி. அந்த நிலங்களை எல்லாம் அவர்கள் தங்கள் உறவினர்கள் பலரது பெரியல் குத்தகைக்கு எடுத்து அனுபவித்து வருகின்றனர். வருமானத்தை ஒழுங்காக கொடுப்பது இல்லை. வாடகை பாக்கி. கோயில் நிர்வாகத்தில் உள்ளவர்களே, கோயில் நிலத்தில் மோசடி செய்து பிழைத்து வருகின்றனர். இதனால், வாடகை பாக்கி உயர்ந்து கொண்டே செல்கிறது. வசூக்கவும் முடிவதில்லை’’ என்கின்றனர்.

இதாவது பரவாயில்லை, சிலர் நிலங்களை போலி ஆவணங்கள் மூலம் தங்கள் சொத்துக்களாக பதிவு செய்து கொண்டுள்ளனர். எங்கே தைரியம் இருந்தால், இந்த நிலங்களை இப்போதுள்ள அதிகாரிகள் மீட்கட்டும் பார்க்ககலாம் என்று தங்கள் உயர் அதிகாரிகளின் லட்சணம் குறித்து அங்கலாய்க்கின்றனர். ஆம், உண்மையும் அப்படித்தான் உள்ளது. கோயிலுக்குச் சொந்தமான நிலம் எது என்பது அதிகாரிகளைவிட, அந்தந்த ஊரின் அரசியல் பிரமுகர்களுக்கு அத்துபடி. முடிந்தால், அதை அவர்கள் ஆக்கிரமிக்கிறார்கள். இல்லாவிட்டால், அரசு திட்டங்களான மருத்துவமனை கட்டுதல், பஸ் நிலையங்கள், பஞ்சாயத்து கட்டிடங்கள் கட்டுதல், சமத்துவபுரங்கள் கட்டுவது ஆகியவற்றுக்கு தாரை வார்க்கின்றனர். இதனால், கோயில் நிலங்களின் எண்ணிக்கை சரிந்து கொண்டே இருக்கிறது.

குத்தகை குளறுபடிகள்

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையில் கடந்த 2008ம் ஆண்டில் ஒரு சட்டம் அவசர அவசரமாக கொண்டு வரப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை அரசாணை எண் 25 (2008)ன்படி, தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில் நிலங்களை விற்பனை செய்யவோ அல்லது நீண்ட கால குத்தகைக்கு விடவோ தடை விதிக்கப்பட்டது. அதேநேரத்தில், 2010ம் ஆண்டு திமுக ஆட்சியில், இந்தத் தடை உத்தரவு நீக்கப்பட்டது. வணிக நிறுவனங்கள், அறக்கட்டளைகளுக்கு நீண்ட கால குத்தகைகளுக்கு நிலங்களை வழங்கிட ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன் மூலம் அரசியல் விஐபிக்கள் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு வேண்டப்பட்ட நபர்கள் பலன் அடைந்தனர். கோயில் நிலங்களில் குத்தகை ஒப்பந்தம் எவ்வளவு இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? 99 ஆண்டுகள் குத்தகை என்றால், ஆண்டு குத்தகை 500 ரூபாய்க்கும் அதிகமாக இருந்தால், அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.

இந்த அரசாணையின் படி தமிழகத்தில் உள்ள திருக்கோயில் நிலங்களை விற்கவோ,​​ நீண்ட கால குத்தகைக்கு விடவோ தடைஉள்ளது.ஆனால் இந்த தடையை விலக்கி வணிக நிறுவனங்களுக்கும் அறக்கட்டளைகளுக்கும் நீண்டகாலக் குத்தகைக்கு விட இந்து அறநிலையத்துறை தமிழக அரசுக்கு 2010 ஆம் ஆண்டு பரிந்துரைத்தது. இச்செயல் விமர்சிக்கப்பட்டது

மாயமான சிலைகள்

தமிழகத்தில் உள்ள கோயில்களில் அமைந்துள்ள சிலைகளின் தொன்மையும், அவற்றின் சக்திகளையும் அறிந்த மேற்கத்தியர்கள் என்ன விலை கொடுத்தும் சிலைகளை வாங்கத் தயாராக இருக்கின்றனர் என்கின்றனர் சிலைக் கடத்தல் மாபியாக்கள். தமிழகத்தில் உள்ள கோயில்களில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான சிலைகள் கடத்தப்பட்டு, அவற்றுக்கு பதில் போலி சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாக சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரித்து வரும் ஐஜி பொன் மாணிக்க வேல் குற்றம்சாட்டியிருப்பது அதிர்ச்சியின் உச்சம்.

சிலைக் கடத்தல் வழக்கில் திராவிட கட்சிகளின் பிரமுகர்களுக்கும், முன்னாள் அமைச்சர்கள் சிலர், அற நிலையத்துறை உயர் அதிகாரிகள் உட்பட பலருக்கும் தொடர்பு இருப்பதாக ஐஜி பொன் மாணிக்கவேல் உறுதிபட கூறினார். கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்றபோதும், பாலாலயம் செய்யும்போதும் சிலைகள் அகற்றப்பட்டபோது, கடத்தப்பட்டவை அதிகம். கோயில் சிலைகள் என்பது லட்சக் கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இடத்தில் இருக்கும் சொத்து.

இவற்றை பொது மக்கள் கண்களுக்குத் தெரியாமல் அகற்றுவதாக இருந்தால், கோயில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் சாத்தியமே இல்லை என்பது சிலைக்கடத்தல் வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளின் ஆணித்தரமான வாதம் என்பதால், ஐஜி பொன் மாணிக்கவேலிடம் இருந்து இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க தமிழக அரசே எத்தனித்தது என்பது, இந்த சிலைக் கடத்தல் தீவிரத்தின் தன்மையை உணர்த்தும்.

கடைசியாக சென்னையைச் சேர்ந்த துணிக்கடை அதிபர் ரன்வீர்ஷா வீட்டில் இருந்து 80க்கும் அதிகமான பழங்கால சிலைகளை மீட்டது ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர்.

கோர்ட் தலையீடு

தமிழகத்தில் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்களை அடையாளம் கண்டு அவற்றை மீட்க வேண்டும். ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை கையகப்படுத்த வேண்டும். குத்தகை பாக்கிகளை வசூலிக்க வேண்டும். அத்துடன் குத்தகையில் உள்ள நிலங்களை மீட்டு, அவற்றை இன்றைய மார்க்கெட் நிலவரம் அடிப்படையில் ஏலத்துக்குவிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு நடைமுறைகளை குறிப்பிட்டு கடந்த பிப்ரவரி மாதம் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. இத்தனைக்கும் கோயில் நடைமுறையில் இருந்த குளறுபடிகளை தீர ஆய்வு செய்த பின்னரே கோர்ட் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

என்ன செய்தது அறநிலையத்துறை?

கோர்ட் உத்தரவு எல்லாம் சாமானியத்துக்குத்தான். அறநிலையத்துறை போன்ற அரசுத்துறைகளுக்கு அல்ல, என்பதை அதன் அதிகாரிகள் மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர். கோர்ட் உத்தரவிட்டு 7 மாதங்கள் முடிவடைந்த பின்னரும், அந்த
உத்தரவை செயல்படுத்துவதற்கு துரும்புகூட கிள்ளிப்போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காரணம், அறநிலையத்துறை :ஊழல் புரையோடி, அறமற்ற நிலையத்துறையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தர்மம், பக்தி என்பதெல்லாம் இங்கே 2ம் நிலைதான். எவ்வளவு வருமானம் வருகிறது? இதில் எனக்கு பங்கெவ்வளவு, உனக்கு எவ்வவு வேண்டும் என்ற பாகம் பிரிப்புதான் எடுபடுகிறது.

அறநிலையத்துறையில் கிரிப்டோ கிறிஸ்தவர்கள்?

தமிழகத்தில் உள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான வக்ப் போர்டுகள், அல்லது திருச்சபைகளுக்கு சொந்தமான நிர்வாகங்களில் இந்துக்கள் நுழைய முடியாது. ஆனால், இந்து சமய அறநிலையத்துறையில் இதற்கு விதவிலக்குண்டு. இங்கு யார் வேண்டுமானாலும் நிர்வாகத்துக்கு வரமுடியும். அவர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதியிருந்தால் போதும். பக்தி தேவையில்லை, வாங்கும் சம்பளத்துக்கு நேர்மையாக செயல்படத் தேவையில்லை. கோயில் நிர்வாகம் சிறப்பாக நடக்கிறதா என்று கண்காணிக்கவும் தேவையில்லை.

இந்த வகையில் அறநிலையத்துறையை ஒழித்துக்கட்டி, கோயில்களை அழிக்க துணைபோகும் கிரிப்டோ கிறிஸ்தவர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும், அவர்களை பணியில் இருந்து நீக்கிட வேண்டும் என்று குரல்கள் எழும்பத் தொடங்கியுள்ளன. இந்தக் குரல்களை ஒடுக்கும் வகையில் பல கிறிஸ்தவ அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அதுசரி, உங்கள் குரல் நியாயமானதாக இருக்கட்டும், தப்பில்லை. இந்து சமய அறநிலையத்துறையில் கிறிஸ்தவர்களுக்கு என்ன வேலை என்ற நியாயமான கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை.

எச்.ராஜா மீது கோபம் ஏன்?

தமிழகத்தில் அறநிலையத்துறை வசம் இருந்த 38 ஆயிரத்துக்கும் அதிகமான கோயில்களில், 2 ஆயிரத்துக்கும் அதிகமான கோயில்கள் மாயமாகிவிட்டது. கோயில்கள் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டுவிட்டன. அந்தக் கோயில்களின் சொத்துக்களும் மாயமாகிவிட்டன. கோயிலில் இருந்த சிலைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. இவற்றை எல்லாம் மீட்கும் வகையில், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, இந்து ஆலய மீட்பு இயக்கத்தைத் தொடங்கி, மிகவும் தீரவிமாக செயல்படத் தொடங்கினார்.

ஒவ்வொரு ஊரிலும் நடைபெற்ற கூட்டங்களில் அறநிலையத்துறை அதிகாரிகளின் மெத்தனப்போக்கு, ஊழல், நிலங்களை விற்பனை செய்வதில் செய்த குளறுபடிகள் என்று ஒவ்வொரு விஷயமாக பட்டியல்போட்டு விளாசத் தொடங்கினார். கடந்த பிப்ரவரி மாதம் கோயில் சொத்துக்கள் மீட்பு மற்றும் அவற்றை மறு கட்டமைப்பு செய்து, புதிதாக ஏலம் விடுவது தொடர்பாக ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை நடைமுறைக்கு கொண்டு வரக்கோரி சென்னையில் செப்டம்பர் 2ம் தேதி உண்ணாவிரதப்போராட்டத்தை நடத்தினார்.

திணறும் அறநிலையத்துறை அதிகாரிகள்!

சிலைக் கடத்தல், கோயில் நிலங்கள் ஆக்கிரப்பு, கோயில் சொத்துக்கள் விற்பனை என்று ஏகப்பட்ட சிக்கல்களில் இப்போது அறநிலையத்துறை சிக்கித் தவிக்கிறது. சிலைக் கடத்தல் வழக்கில் பெண் உயர் அதிகாரி ஒருவரே கைதாகி இருப்பதால், அந்தத்துறையில் உள்ள பலருக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. போதாக்குறைக்கு தமிழகத்தில் உள்ள கோயில்களின் சொத்துக்களை மீட்க வேண்டும், சிலைகளை சரி பார்க்க வேண்டும் என்று கோரிக்கையை ராஜா முன்வைத்து போராட்டங்களை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

இதனால் அறநிலையத்துறை அதிகாரிகள் திணறத் தொடங்கியுள்ளனர். கைதுகள் தொடரலாம் என்ற சூழ்நிலை வலுவாகும்போது, அதில் இருந்து தப்பித்துக் கொள்ள வழிதேடி தடுமாறிக் கொண்டிருந்தனர். இந்த சூழ்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற இந்து முன்னணி கூட்டத்தில் பேசிய ராஜா, அறநிலையத்துறை ஊழியர்களை ஒரு பிடிபிடித்தார். அறநிலையத்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு கோயில் நிலங்களை குத்தகைக்கு விடுத்து வருகின்றனர் என்று குற்றம் சாட்டினார். இது நிதர்சனமான உண்மை. ஐகோர்ட் கிளையில் நிரூபிக்கப்பட்ட உண்மை.

இந்த உண்மையை ராஜா தொடர்ந்து பேசி வருவதால், அறநிலையத்துறையினருக்கு கடும் நெருக்கடியும் அச்சமும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஐகோர்ட் கிளை உத்தரவிட்டு 7 மாதங்ளாகியும், கோயில் சொத்துக்களை மீட்பது தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில், ராஜாவின் பேச்சு ஈட்டியாக எட்டிப்பாய, இப்போது தங்கள் மீதான களங்கத்தை துடைப்பதற்கு பதில், ராஜாவை கைது செய்ய வேண்டும் என்று கொந்தளிக்கின்றனர்.

சம்பளம் பெறும் அதிகாரிகளே நியாயமா?

பக்தர்களின் நம்பிக்கை ஒரு சதவீதம் என்றால், கோயில் நிர்வாகத்தில் உள்ள உங்கள் நம்பிக்கை 99 சதவீதம் இருக்க வேண்டும். அவ்வளவு வேண்டாம், ,நீங்கள் மாதம் தோறும் சம்பளம் பெறும் பக்தர்களின் காணிக்கை நிதி. கோயில்களின் நிரந்தர வருமானத்தில் இருந்து. உங்களுக்கு மனம் உருத்தியது என்றால், ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்து பல மாதங்களாகியும் அந்த உத்தரவுகளை அமல்படுத்த தாமதம் செய்வது ஏன்?

இப்போது ராஜா அப்படி பேசிவிட்டார், இப்படி பேசிவிட்டார் என்று போராட்டம் நடத்தும் நீங்கள், அந்த சொத்துக்களை மீட்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து துளியும் வாய் திறக்காதது ஏன்? சரி, கடந்த வாரம் சென்னையில் ராஜாவை கண்டித்து உண்ணாவிரதம் நடத்தினீர்களே? அது உங்கள் மனசாட்சிப்படி நடந்ததா? அறநிலையத்துறை அதிகாரிகள் நடத்தினார்களா? அல்லது கிரிப்டோ கிறிஸ்தவர்கள் நடத்தினார்களா?

அறநிலையத்துறை அதிகாரிகள் நடத்திய இந்தப் போராட்டத்தில் இந்துக்களையும், கோயில்களையும், கோயில் நடைமுறைகள், தெய்வங்களை விமர்சித்துக் கொண்டிருக்கும் திராவிடர் கழகத்துக்கும், அதன் தலைவர்களுக்கும் என்ன வேலை? வக்கில் அருள்மொழி, பேராசிரியர் வீரபாண்டியன், வேல்முருகன் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய அவசியம் என்ன?

உங்களுக்கு கோபம் வந்தால், கோர்ட் உத்தரவை செயல்படுத்துவதில் காண்பித்திருக்க வேண்டும். உண்ணாவிரதத்தை விடுத்து, கோர்ட் படியேறி இருக்க வேண்டும். ‘உங்கள் உத்தரவை நாங்கள் எந்தளவுக்கு நிறைவேற்றி இருக்கிறோம். ஆனாலும், ராஜா எங்கள் மீது பழிபோடுகிறார். எங்களை அவமதிக்கிறார்’ என்று நிரூபித்திருக்க வேண்டும். அதைச் செய்தீர்களா? முடியவில்லை. காரணம், நீங்கள் உங்கள் மனசாட்சிப்படி வேலை செய்யவில்லை.

ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால், அரசியல், லஞ்சம், ஊழல் ஆகியவற்றின் பிடியில் சிக்கி, அறநிலையத்துறையில் இருந்து சம்பளம் பெற்றுக் கொண்டே, அதை அறமற்ற நிலையத்துறையாக்கி விட்டீர்கள். போராட்டம் உங்களுக்கு ஒரு தற்காப்பு ஆயுதம்… அவ்வளவே… தெய்வம் உண்டு. விடியும் ஒரு நாள்.

(Visited 26 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *