சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

அவசரம்… அவசியம்… அத்தியாவசியம்

தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறை!

வங்கதேசம்… இந்தியப் பிரிவினையின் போது, பாகிஸ்தானுடன் சேர்ந்திருந்த பகுதி. கிழக்குப் பாகிஸ்தான் என்று அந்தப் பிராந்தியத்தை பாகிஸ்தான் அறிவித்தது. அதே நேரத்தில் வங்கதேசத்தில் இருந்த சிறுபான்மை இந்துக்கள் மீதான கொடுமை அங்கு அதிகரித்தது. பாகிஸ்தான் ஆட்சியாளர்களாக அங்கிருந்த பிரதிநிதிகள், வங்கதேசத்தின் பூர்வீககுடிகளை கொடுமைப்படுத்தினர். இதனால், இந்தியாவுக்கு வந்த லட்சக் கணக்கான அகதிகளால், இந்தியா – பாகிஸ்தான் போர் வெடித்தது. கிழக்கு பாகிஸ்தான் என்ற பெயர் மாறி, வங்கதேசம் என்ற தனிநாடு உருவானது.
கிழக்கு பாகிஸ்தானாக இருந்த வரை தலைவலி தரும் பகுதியாக இருந்த பகுதி, வங்கதேசம் என்று உருவான பின்னர் வங்கதேசம் என்ற பெயரில் திருகுவலியை கொடுக்கத் தொடங்கியது. பாகிஸ்தான் வசம் இருந்தபோது, போர் அகதிகளாக வந்து தஞ்சம் அடைந்தவர்கள், வங்கதேசம் என்ற தனிநாடு உருவான பின்னர் குடியேற்ற அகதிகளாக வரத் தொடங்கினர். அதாவது, சுதந்திரத்துக்குப் பின்னர் ஏறக்குறைய இந்தியாவில் ஊடுருவல் செய்வதையே அவர்கள் தங்கள் தேசிய கொள்கையின் ஒரு பகுதியாக வைத்துள்ளனர். இதில் கிழக்கு பாகிஸ்தான், வங்கதேசம் என்ற பெயர்கள் மட்டுமே வேறுபாடு. பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை.

ஊடுருவலால் என்ன பிரச்னை?

தொடக்கத்தில் அரசியல் அகதிகளாக வரும் வரை பிரச்னை இல்லை. அதாவது, இலங்கைப் போரின்போது, தமிழகத்தில் தஞ்சமடைந்த இலங்கைத் தமிழர்களைப் போல். அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட வசிப்பிடம் அமைத்துக் கொடுத்து, தொழில்களுக்கு அனுமதி வழங்கலாம். ஏறக்குறைய வங்கதேசத்தினர் தொடக்கத்தில் அப்படித்தான் வந்தனர். நூறு ஆயிரமாகவும், ஆயிரம் லட்சமாகவும் ஆனது. இதில், தொடக்கத்தில் அதாவது 1948ம் ஆண்டுக்குப் பின்னர் வந்தவர்கள் எப்படியோ, உள்ளூர் குடிமக்களாக மேற்கு வங்கம், அசாம் உட்பட வடகிழக்கு மாநிலங்களில் குடியேறிவிட்டனர்.
இப்படி சாரை சாரையாய் குடியேறி மக்களால், அப்பகுதியைச் சேர்ந்த மக்களின் வேலை வாய்ப்பு உரிமை பறிபோனது. உள்ளூர் மக்களுக்கும், அவர்களுக்கும் இடையே திடீர் திடீரென மோதல்கள் அதிகரித்தது. இதனால், பொது அமைதிக்கு பாதிப்பும், பிரச்னையும் ஏற்பட்டது.

கள்ளநோட்டுப் புழக்கம்!

எல்லை தாண்டி அத்து மீறி ஊடுருவல் செய்யும் வங்கதேசிகள், இந்தியாவில் பெரும் தலைவலியான கள்ள நோட்டுப் பிரச்னைக்கும் ஒரு காரணமாக இருக்கின்றனர். என்னதான், வங்கதேசம் என்ற நாட்டை இந்தியா உருவாக்கிக் கொடுத்தாலும், முஸ்லிம் என்ற பாசம் அவர்களை பாகிஸ்தானுக்கு ஆதரவாகவே செயல்பட வைத்துக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தானில் இருந்து நேபாளத்துக்கும், நேபாளத்தில் இருந்து வங்கதேசத்துக்கும் இன்றைக்கும் கள்ள நோட்டுகள், போதை மருந்துகள், தங்கம் ஆகியவை சட்ட விரோதமாக கொண்டு செல்லப்படுகின்றன. இவை அப்படியே ஊடுருவல் காரர்கள் உதவியுடன் இந்தியாவுக்குள் கடத்தப்படுகின்றன. இந்தியாவின் எல்லைப் பகுதியில் நிலவும் மெத்தன்போக்கால், வங்கதேச ஊடுருவல்காரர்கள் சர்வ சாதாரணமாக கள்ளநோட்டுகளை இந்தியாவில் புழக்கத்தில் விட்டுக் கொண்டிருக்கின்றனர்.

பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

வங்கதேசத்தில் இருந்தும் ஊடுவும் வங்கதேசிகள், இந்தியாவுக்குள் வந்ததும் குறிப்பாக மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் வந்ததும் உள்ளூரில் உள்ள முஸ்லிம்கள் உதவியுடன் போலியான வாக்காளர் அடையாள அட்டையைத் தயாரிக்கின்றனர். அதை வைத்துக் கொண்டு இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் செல்கின்றனர். சிம்கார்டுகள் வாங்குவது, வங்கிக் கணக்குகளைத் தொடங்குவது என்று பல்வேறு விஷயங்களில் ஈடுபடுகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிக்கும் பயணம் செய்யும் இவர்கள், பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுவிட்டு, தங்கள் எல்லைக்குள் ஓடி ஒளிந்து விடுகின்றனர்.

கொங்கு மண்டலமும் தப்பவில்லை!

வங்கதேசிகளால் என்ன பாதிப்பு ஏற்பட்டது? நேரடியாக உங்களால் நிரூபிக்க முடியுமா? என்று நீங்கள் கேட்கலாம். ஒரு கதை சொல்லட்டுமா… திருப்பூர் மாவட்டத்தில் ஆட்டயம்பாளையம் என்ற கிராமத்தில் முருகானந்தம் என்ற ஒரு அப்பாவி இருந்தார்.
அவரது மகள் பூர்ணா தேவி. 18 வயது முடிந்ததும் றெக்கை முளைத்தது. திருப்பூரில் பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்ற இடத்தில் அங்கே ரிமுஷேக் என்ற ஒரு முஸ்லிம் பையனை காதலித்தாள்.
தான், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவன் என்று கதை சொன்னான். கதையை நம்ப வைக்க வாக்காளர் அடையாள அட்டையைக் காண்பித்தான். அந்த அட்டையைக் கொண்டே திருப்பூரில் சிம்கார்டு வாங்கியது உட்பட பல்வேறு சாகசங்களில் ஈடுபட்டான். அப்படியே பூர்ணா தேவியை ரகசிய திருமணம் செய்து கொண்டான். அலைபாயுதே ஸ்டைலில் சிலா நாட்கள் வாழ்ந்தனர்.

திடீர் மாயம்…

கடந்த 2016ம் ஆண்டு ஜூலை மாதம் வேலைக்குச் சென்ற பூர்ணாதேவியிடம் இருந்து எந்த ஒரு பதிலும் இல்லை. அவரது தந்தை முருகானந்தம் தேடாத இடம் இல்லை. போலீசில் போய் புகார் கொடுத்தார். போலீசாரும் தேடிப்பார்த்தனர். வழக்கை விசாரணையில், கிடப்பில் போட்டனர். மகளைக் காணாத தந்தை பைத்தியக்காரனாக அலைந்து திரிந்தார். ஊர் ஊராகத் தேடத் தொடங்கினார். ஆனாலும், பூர்ணாவை காணாமல் நடை பிணமானார்.

அம்பலப்படுத்திய வங்கதேச மீடியாக்கள்!

கடந்த பிப்ரவரி மாதத்தில் வங்கதேச மீடியா ஒன்று, ‘‘இந்தியாவைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் மர்ம சாவு. அரசு விசாரணை’’ என்ற தகவலை செய்தியாக்கிது. இந்த செய்தியை எப்படியோ கண்டு பிடித்த, இந்திய ஊடகம் ஒன்று அப்படியே ஆங்கிலத்தில் பதிவேற்றியது. ஆங்கிலத்தில் இருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட, செய்தியின் சுருக்கம் இதுதான்…‘‘இந்திய நாட்டின் மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பூர்ணாதேவி என்ற இளம் பெண், வங்கதேசத்தைச் சேர்ந்த ரிமு ஷேக் என்பவனை காதல் திருமணம் செய்து கொண்டார். பெற்றோருக்குத் தெரியாமல் வங்கதேசத்துக்கு பூர்ணாதேடவி கடத்திவரப்பட்டார். ரிமு ஷேக் குடும்பத்தினர் பூர்ணாதேவியை அடித்துக் கொன்றதாக கூறப்படுகிறது’’ என்பதுதான். தன் மகள் உடலை வங்கதேசத்தில் இருந்து கொண்டு வருவதற்காக முருகானந்தம் நடத்திய போராட்டங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல. ஆனாலும், கடைசிவரை பூர்ணாதேவி அனாதைப் பிணமாக வங்கதேச மண்ணில் புதைக்கப்பட்டாள்.

எத்தனை எத்தனை சிக்கல்கள்?

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று சொல்வார்கள். இன்று வங்கதேசத்தவர்களால் இந்தியா சந்திக்கும் பல நூறு பிரச்னைகளுக்கு இது ஒன்றே ஆதாரம். ஒரே பிரச்னைதான். இதில் எத்தனைவிதமான பரிணாமங்களை எடுக்க முடியும்? ஒன்று ஆட்களை கடத்திச் செல்வது. 2வது சட்ட விரோத குடியேற்றம். 3வது உள்ளூர் மக்களின் வேலை வாய்ப்பை பறிப்பது. 4வது சட்ட விரோத ஊடுருவல். 5வது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல். 6வது கள்ள நோட்டுச் சந்தை. 7வது போதைப் பொருட்கள் கடத்தல் என்று வங்கதேசத்தினர் செய்யும் செயல்களை பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம்.

கடிவாளம் போடுகிறது அரசு!

அண்டை நாடாக இருந்தாலும், அச்சுறுத்தல் இல்லாதவரையில் எல்லாம் நட்பு நாடுகளே. இந்திய இறையாண்மைக்கு ஆபத்தென்றால், நட்பு 2ம் பட்சம். பாதுகாப்பே முக்கியம். இந்த வகையில், வங்கதேசத்தில் இருந்து சுதந்திரத்துக்குப் பின்னர் சட்ட விரோதமாக குடியேறியவர்களை அடையாளம் கண்டு, அவர்களை சொந்த நாட்டுக்கு அனுப்பும் முயற்சியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஈடுபட்டுள்ளது. இதற்கு வங்கதேச அரசும் ஒப்புக் கொண்டுள்ளது.
இதற்காக என்.ஆர்.சி. எனப்படும் நேஷனல் ரெஜிஸ்டர் ஆப் இந்தியன் சிட்டிசன் அடிப்படையில் அசாமுக்கான இந்திய குடிமக்கள் தேசிய பதிவுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதாவது ரேஷன் கார்டு, ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் அடிப்படையில், பதிவு செய்யப்பட்ட குடிமக்களைத் தவிர, மற்றவர்கள் அசாமில் இருந்து வெளியேற வேண்டும் என்பது உத்தரவு. இதைத்தான் பிரதமர் மோடி தலைமையிலான அரசு செய்ய முடிவு செய்துள்ளது.

மனநிலை பாதிப்பில் மம்தா?

அசாமில் தேசிய குடிமக்கள் பதிவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், உள்நாட்டுச் சண்டை ஏற்பட்டு ரத்த ஆறு ஓடும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காமெடி செய்து கொண்டிருக்கிறர். மேற்கு வங்க மாநிலத்தில் கம்யூனிஸ்ட்கள் ஆட்சியில் இருந்தபோது, இதே பிரச்னைக்காக, அன்றைக்கு வங்கதேசிகளுக்கு எதிராக சட்டமன்றத்தில் குரல் கொடுத்தார். அத்துடன், தன் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில், தன்னிடம் இருந்த வங்கதேச சட்டவிரோத குடியேறிகள் தொடர்பான அறிக்கையை சபாநாயகர் மீது வீசியெறிந்தவர் இந்த மம்தா பானர்ஜி. இப்போது, அரசியல் ஆதாயத்துக்காக அப்படியே கதையைத் திருப்புகிறார்.

வடகிழக்கில் மட்டுமோ பிரச்னை?

சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசிகளால் மேற்குவங்கம், அசாம், திரிபுரா, நாகாலந்து மாநிலங்களில் மட்டுமே பிரச்னை என்று நீங்கள் நினைத்தால் தவறு. அவர்கள் இப்போது உங்களிடமும், என்னிடமும் பேசிக் கொண்டிருக்கும் நபர்களில் ஒருவராக இருக்கலாம். உதாரணமாக, நமது கொங்கு மண்டலத்தில் உள்ள திருப்பூரில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான வங்தேசிகளும், கோவையில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான வங்கதேசிகளும் சட்டவிரோதமாக குடியேறியுள்ளனர். கோவையில் பெரும்பாலும் நகைத் தொழிலாளர்களாக இவர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். திருப்பூரில் பனியன் தொழிலாளர்கள், நூற்பாலைத் தொழிலாளர்கள். சென்னை, பெங்களூரில் நிலைமை இன்னும் மோசம். பெங்களூரில் 10 லட்சத்துக்கும் அதிகமான வங்க தேசத்தினர் ஊடுருவியுள்ளதாக கூறுகின்றனர் உளவுப்போலீசார். எனவே, அசாமில் கொண்டு வந்ததுபோல், எல்லா மாநிலத்திலும் குடிமக்கள் பதிவேடு கொண்டு வந்தால், ஒட்டு மொத்தமாக ஊடுருவியுள்ள வங்கதேசத்தினர் உட்பட வெளிநாடுகளின் குடிமக்களை அடையாளம் கண்டு, அவர்களை தங்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க முடியும்.

இது புதிய நடவடிக்கை இல்லையே?

வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய மக்களை வெளியேற்றக் கோரியும், அசாம் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் பன்னெடுங்காலமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் உச்சமாக, 1979ம் ஆண்டு அசாம் மாணவர்கள் அமைப்பினர் ஒன்று திரண்டனர். ஆல் அசாம் ஸ்டூடன்ட் யூனியன் மற்றும் அசாம் கன பரிஷத் என்ற அமைப்புகள் உருவாகி, போராட முடிவு செய்தனர். இந்தக் குழுவுடன் மற்ற குழுக்களும் இணைந்தன. இதனால், அசாமிகள் அடிப்படை இனவாத குழுக்கள் உருவாக்கி, ரத்தக் களறியானது.
இதையடுத்து, 1985ம் ஆண்டு, அப்போது பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி தலைமையில், அசாம் கனபரிஷத் மற்றும் போராட்ட அமைப்புகளை அழைத்துப் பேசினார். மாணவர்களின் கோரிக்கையில் இருந்த நியாயத்தைப் புரிந்து கொண்ட ராஜீவ் காந்தி, அவற்றை நிறைவேற்றுவதாக கூறி அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ஆனால், அந்த ஒப்பந்தம் இன்று வரை தூங்கிக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

1966 அடிப்படை ஆண்டாக நிர்ணயம்…

அசாம் மாநிலத்தில் 1966ம் ஆண்டுக்கு முன்னர் குடியேறியவர்களை விடுத்து, அதன் பின்னர் குடியேறிய அத்தனை பேரையும் குடிமக்கள் பட்டியலில் இருந்து நீக்குவதும், சட்டவிரோத குடியேறிகளை அவர்களது சொந்த நாட்டுக்கு அனுப்புவதும் மட்டுமே 1985ம் ஆண்டு ராஜீவ் காந்தி ஏற்படுத்திய ஒப்பந்தத்தின் சாராம்சம். ஆனால், இதில் ஒரு சில நிபந்தனைகளை நிறைவேற்றினாலும், ஒப்பந்தத்தை கிடப்பில் போட்டது காங்கிரஸ் தலைமையிலான அரசு. அந்த ஒப்பந்தத்தை எடுத்து பிரதமர் மோடி தலைமையிலான அரசு தூசு தட்டியுள்ளது.

அரசியல் லாபம்!

அசாம் மாநிலத்தில் மட்டுமன்றி நாடு முழுவதும் இப்போது சட்ட விரோதிகளின் குடியேற்றம் அதிகரித்துவிட்டது. காஷ்மீர் மண்ணின் பூர்வ குடிகளான பண்டிட்கள் விரட்டப்பட்டு, இப்போது மியான்மரில் இருந்து விரட்டப்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்கள் மற்றும் வங்கதேசத்தினர் அங்கு குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். எனவே, இப்போது மத்திய அரசு கையில் எடுத்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை சிறிதும் தாமதம் இல்லாமல் நிறைவேற்ற வேண்டும். இதில் மம்தா போன்ற கோமாளிகளின் அரசியல் ஆதாயத்தை ஒதுக்கித்தள்ளிவிட்டு, தேசத்தின் பாதுகாப்பையும், இந்தியர்களின் அமைதியான வாழ்க்கையையும் அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

(Visited 36 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *