சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

இரவல் சட்டங்கள்… வக்கீல்கள்… நீதிபதிகள் தீர்ப்புகள்!

பாரதம் உலகத்துக்கே நீதி சொன்ன தேசமாக இருந்தது ஒரு காலம். ஆனால், சமீப நாட்களில் பாரதத்துக்கே நீதித்துறையால் குடைச்சல் ஏற்பட்டுள்ளது கூர்ந்து கவனித்தால் தெரியும். சமீப நாட்களில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய பல தீர்ப்புகள் பாரதத்தின் தனித்துவத்தை மிகவும் பாதிக்கும் வகையில் உள்ளது கவனிக்க வேண்டிய விஷயம்.

இறையாண்மை எதிரான…

ஓரினச் சேர்க்கை இந்தியாவில் தவறில்லை. திருமணத்துக்கு வெளியில் கணவனும், மனைவியும் தங்கள் இஷ்டம்போல் வாழ்வதும் தப்பில்லை. அதேபோல், இந்து மதத்துக்கு பாரம்பரியம் என்று ஏதும் இல்லை. ஆனால், சட்டத்தின் முன்னர் ஆணுக்குப் பெண் சரிநகர் சமம் என்பதால், சபரிமலைக் கோயிலுக்கு பெண்கள் செல்வதிலும் தவறில்லை என்று பல வரலாற்று திருப்பு முனைத் தீர்ப்புகளை சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி தீபக் மிஸ்ரா, தன் ஓய்வுக்கு முன்னர் வழங்கிவிட்டார்.

எதிர்ப்பு குரல்கள்!

இந்தியாவின் பன்முகத் தன்மை, கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றின் மீது நீதித்துறை கடும் தாக்குதல்களை தொடுத்துக் கொண்டிருக்கிறது என்று பல முனைகளிலும் எதிர்ப்புக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கிவிட்டன. ஆனால், இதன் மறுபக்கத்தை யாரும் சிந்திக்க மறந்துவிட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஆம், இந்தியாவின் இரவல் சட்டங்களால் வேறு எப்படிப்பட்ட தீர்ப்புகளை எழுதிட வைக்க முடியும்.

இரவல் சட்டங்கள்!

மேற்கத்திய நாடுகளின் இரவல் சட்டங்களின் தொகுப்புகள், இரவல் வக்கீல்களையும், இரவல் நீதிபதிகளையும் அவர்கள் மூலம் இரவல் தீர்ப்புகளையும் மட்டுமே வழங்கிட முடியும் என்பது கண்கூடாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இன்றைய பாரத்தின் நான்கு தூண்களில் ஒன்றான நீதித்துறை, முழுக்க முழுக்க நமக்காக நம் பண்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக நினைக்கிறீர்களா? முற்றிலும் இல்லை. இன்றைய இந்திய பீனல் கோடு சட்டங்களில் ஒன்றும் கூட இந்தியாவின் பாரம்பரியம் சார்ந்தது அல்ல என்பதே உண்மை.

நமது சட்ட தொகுப்பு!

இன்றைக்கு உலகில் உள்ள நாடுகளில், எழுதப்பட்ட சட்டத் தொகுப்புகளில் மிகவும் நீண்ட தொகுப்பைக் கொண்டது பாரத்தின் பீனல்கோடு சட்டங்கள். மனிதனால் எழுதப்பட்ட மிக நீண்ட அரசியல் அமைப்புச் சட்டமாகும். இதில் மொத்தம் 22 பிரிவுகள் உள்ளன. 12 அட்டவணைகளில் இதுவரை 101 திருத்தங்கள், 465 உட்பிரிவுகள் உள்ளன. நம் பீனல்கோடு சட்டங்களில் உள்ள சொற்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 369 ஆகும். தொடக்கத்தில் இந்த பீனல் கோடு முறையில் எந்த இடத்திலும் மதச்சார்பற்ற என்ற வார்த்தை இல்லை. ஆனால், 1976ம் ஆண்டுக்குப் பின்னர் இந்த மதச்சார்பின்மை திணிக்கப்பட்டது.

பல நாடுகளின் சட்டமும்  நமது சட்ட தொகுப்பும்!

ஆனாலும், ஏன் இரவல் சட்டங்களின் தொகுப்பு என்று நமது பீனல்கோடு நடைமுறையை சுட்டிக் காட்டுகிறோம் என்றால், இதன் பன்முகத் தன்மையானது பல்வேறு நாடுகளிடம் இருந்து பெறப்பட்டு, தொகுக்கப்பட்டுள்ளது என்பதால்தான். இதனால், கூட்டாச்சி முறையை கனடா நாட்டிடம் இருந்தும், அடிப்படை உரிமைகளை அமெரிக்க ஐக்கிய நாடுகளிடம் இருந்தும், அடிப்படைக் கடமைகள் தொகுப்பு சோவியத் யூனியனிடம் இருந்தும், அரசியல் சட்டத்திருத்த முறையை தென்னாப்பிரிக்காவிடம் இருந்தும், மாநிலங்களவை எம்பிக்கள் நியமன முறையை அயர்லாந்திடம் இருந்து பெறப்பட்டுள்ளது. அப்படியே நம்மை ஆட்சி செய்த கிறிஸ்தவர்களின் இங்கிலாந்திடம் இருந்து தாங்கள் கற்ற சட்டங்களையும் இந்தத் தொகுப்பில் சேர்த்துள்ளனர். அம்புட்டுத்தான் நம் அரசியல் சாசனம். இதனால், நமது அரசியல் சாசனத்தை இரவல் சட்டங்களின் தொகுப்பு என்று குறிப்பிடுவதே சாலச் சிறந்தது.

நம்மை அடிமைப்படுத்தியவர்களின்  கை வண்ணம்!  

பாரதத்தை கைப்பற்றி 700 ஆண்டுகளாக ஆட்சி செய்த முஸ்லிம்களும், அதன் பின்னர் 250 ஆண்டுகள் ஆட்சி செய்த கிறிஸ்தவர்களும்
நமக்கென உள்ள பாரம்பரியங்களை அழிக்கத் தொடங்கினர். பாரதம் என்ற ஒரு மாபெரும் பரந்த தேசத்தில், மனிதாபிமானம் மிக்க, மனிதத் தன்மையை மதிக்கத்தக்க சட்டங்கள் இருந்தன என்பதற்கான அடையாளங்கள் இருக்கவே கூடாது என்ற எண்ணத்தில், பல தடைகளை ஏற்படுத்தினர்.

கிராம பஞ்சாயத்துக்கள்!

நம் நாட்டின் பாரம்பரியம் மிக்க கிராம பஞ்சாயத்து முறைகளைக் கூறலாம். சோழர் காலத்தில், பாண்டிய மன்னர்கள் காலத்திலும் சில கிராம பஞ்சாயத்து முறைகள் இருந்தன. அங்கு எழுதப்படாத சட்டங்களே அதிகம் ஆட்சி செய்தன. பெரும்பாலும் இத்தகைய சட்டங்கள் ஏட்டில் இல்லாமல் மக்களின் இதயங்களில் பதிந்திருந்தன.

தண்டனை!

தவறு செய்தால் சிறை தண்டனை, சவுக்கடி உண்டு. இப்போதுள்ள தனிமைச் சிறைபோல், தப்பு செய்தவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் முறைகள், பிறன் மனை கவர்தல் தவறு, பிறன் சொத்து அபகரித்தல் பெருங் குற்றம் என்ற நடைமுறையை நம் மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக யாரும் சொல்லாமல் பின்பற்றியும், தங்கள் அடுத்தடுத்த தலைமுறைக்கும் கற்பித்து வந்தனர்.
இன்று தனிமனித சுதந்திரம் பற்றி பேசப்படும் இதே நாட்டில்தான், பறவை இனங்களுக்கு தன் தேரில் கட்டப்பட்ட மணியின் ஒலியால் சங்கடம் ஏற்படக் கூடாது என்று நினைத்த, அதன் நாவை இழுத்துக் கட்டிய ஆய் அண்டிரன் என்ற மன்னன் வாழ்ந்திருந்தான்.
மண்ணாசையும், பெண்ணாசையும் பெரும் கேடில் முடியும் என்பதை நமது இதிகாசங்கள் உணர்த்தின.

சுதந்திரத்திற்கு முன்!

இந்தியாவை ஆட்சி செய்த கிறிஸ்தவர்கள், தங்களுக்குள் ஏற்பட்ட மோதல்களால் இந்தியாவை வெளியேற வேண்டிய காலகட்டம் வந்ததும், ‘‘நாங்கள் உங்களுக்கு சுதந்திரம் வழங்குகிறோம். ஆனால், உங்களால் அரசுப் பரிபாலனம் செய்ய முடியுமா? அதற்கான நவீனத்துவ சட்டங்கள் உள்ளதா?’’ என்ற கேள்வியை முன்வைத்து, கேள்விகள் எழுப்பினர்.

பாரதத்துக்கு 1946ம் ஆண்டில் வருகை தந்த இங்கிலாந்தின் அமைச்சரவை தூதுக்குழு, அரசியல் நிர்ணய மன்றம் ஏற்படுத்த வேண்டும் என்று கூறியது. இதன்படி, அதே ஆண்டில் ஜூலை மாதத்தில் அரசியல் நிர்ணய மன்றத்துக்கான தேர்தல் நடைபெற்றது. டிசம்பர் 1946ம் ஆண்டில் அரசியல் நிர்ணய மன்றம் கூடியது. இந்த மன்றத்தின் தற்காலிக தலைவராக சச்சித்தானந்த சின்ஹா தேர்வு செய்யப்பட்டார். இதன் பின்னர், அரசியல் நிர்ணய மன்றத்தின் நிரந்தர தலைவராக ராஜேந்திர பிரசாத் அதே ஆண்டில் டிசம்ர்ப 11ம் தேர்வு செய்யப்பட்டார்.

சட்ட வரைவு குழு!

1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரம் வழங்கப்பட்ட பாரத தேசத்துக்காக, சட்டங்கள் தொகுப்பு செய்தி அதே ஆண்டின் ஆகஸ்ட் 29ம் தேதி 7 பேர் கொண்ட அரசியல் அமைப்புச் சட்ட வரைவுக் குழு உருவாக்கப்பட்டது. டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் தலைமையிலான இந்தக் கமிட்டியில் கோபால்சாமி அய்யங்கார், அல்லாடி கிருஷ்ணமூர்த்தி, கே.எம்.முன்ஷி, சையது முகமது சாதுல்லா, மாதவராவ் மற்றும் டி.பி.கேதான் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் பெரும்பாலோர் இங்கிலாந்தின் சட்டங்களில் கை தேர்ந்தவர்கள்.

இடைச் செருகல்கள்!

இந்தியாவுக்கான சட்டங்களை தொகுக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதும், இவர்கள் தாங்கள் கற்றறிருந்த சட்டத்தின் பகுதிகளில் இருந்தும், இதற்கு இணையாக கருதப்பட்ட கனடா, அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா மற்றும் அயர்லாந்தின் சட்டங்களில் இருந்தும் பல்வேறு பிரிவுகளை எடுத்து இடைச்செருகல்கள் செய்து கொண்டனர். அதாவது, கை, கால்கள் என்று பல்வேறு பகுதிகளை பல்வேறு நாடுகளின் சட்டங்களில் இருந்து பிய்த்தெடுத்து, பாரதத்துக்கான சட்டங்களை கொடுத்தனர்.

பாரத பண்பாடு இல்லாத சட்டங்கள்!

அதாவது, பல்வேறு நாடுகளில் இருந்து இரவல் பெற்ற சட்டங்களை ஒரே தொகுப்பின் கீழ், பல்வேறு பிரிவுகளாக தங்கள் வசதிப்படியும், பாரதத்தின் எதிர்கால தேவை கருதியும் ‘இந்தியன் பீனல்கோடு ’ என்று தொகுத்துக் கொடுத்தனர். இதில், கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், மேற்கண்ட சட்டத்தொகுப்புப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு பாரத்தின் பண்பாடு, பாரம்பரியம் என்று அனைத்தும் தெரிந்திருந்தும், அதற்கான முன்மாதிரி சட்டங்களை, பாரம்பரியப்படி பல நூற்றாண்டுகளாக வந்த சட்டங்களைப் பற்றி கண்டு கொள்ளவில்லை.

இந்தியன் பீனல் கோடு?

ஆனாலும், இவர்கள் கொடுத்த இரவல் சட்டங்களின் தொகுப்பு அப்படியே பாரதத்தின் அரசியல் சாசனமாக, 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி அங்கீகரிக்கப்பட்டது. இதன் விளைவை இப்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். ஓரினச் சேர்க்கை தவறு இல்லை என்று நமக்கு இரவல் சட்டங்களை வழங்கிய நாடுகளில் பின்பற்றப்படும் நடைமுறை, அப்படியே கடன் பெற்ற நமக்கும் திணிக்கப்படுகிறது என்பதே உண்மை.

நமது மரபு!

பாரதம் என்பது ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டில் வந்தது. ஒருஇல், ஒருவில் ஒருசொல் என்று ராமன் வாழ்ந்த இந்த தேசத்தில்தான், இப்போது சட்டங்கள் சந்தி சிரிக்கும் தீர்புகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன. மத்திய கிழக்க நாடுகளில் எல்லாம் சுப்ரீம் கோர்ட் விதிவிலக்கு அளித்த ஓரினச் சேர்க்கை, திருமணத்துக்கு வெளியிலான உறவு ஆகியவற்றுக்கு மரண தண்டனை என்பது குறிப்பிடத்தக்கது.

நமது கடமை!

நம் பண்பாட்டை நம் அடுத்தத் தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். இப்போது நடைமுறையில் உள்ள சட்டங்கள் தொழில்நுட்பம் சார்ந்தவை என்றாலும், நம் கால ஓட்டத்தில் இதையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அதேநேரத்தில் பல நாடுகள் தங்கள் பாரம்பரியத்தை நிலை நிறுத்த போராடும்போது, நாம் மட்டும் ஏன் மதச்சார்பின்மை, நடு நிலைமை என்ற போலித் தன்மையால் நம்மை நாம் ஏமாற்றிக் கொண்டிருக்க வேண்டும்.

கட்ஜூவின் உதாரணம்!

சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ ஒரு அருமையான உதாரணத்தை கூறியுள்ளார். ‘‘சபரி மலையில் பெண்களும் தரிசிக்கலாம் என்ற தீர்ப்பின் மூலம், சுப்ரீம் கோர்ட் சர்ச்சைக்குரிய பெட்டியைத் திறந்துள்ளது. இதன்படி இந்து மதத்தின் வழிபாடு மற்றும் பாரம்பரிய உரிமையில் கோர்ட் தலையிட்டுள்ளது. இது இந்து மதத்துக்கு மட்டுமே பொருந்துமா? அல்லது இஸ்லாத்திலும் பெண்கள் மசூதிகளில் போய் தொழுகை நடத்தும் வகையில் சட்டத்தை மாற்றுமா? அல்லது சுப்ரீம் கோர்ட்டுக்கு இந்த தைரியம் உண்டா? அல்லது 7 நீதிபதிகள் கொண்ட சிறப்பு அரசியல் சாசன அமர்வை ஏற்படுத்தி, இந்த சட்டத்தை சீராய்வு செய்து நீக்கிட நடவடிக்கை எடுக்குமா?’ என்ற துணிச்சலான கருத்தை, சுருக்கென சுப்ரீம் கோர்ட்டுக்கு முன் வைத்துள்ளார்.

சுப்ரீம் கோர்ட் ஒரு பக்கம் இருந்தாலும், சட்டம் இயற்றும் கடமையில் உள்ள அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது. இது பாரத தேசத்துக்கான தனித்துவம் மிக்க சட்டங்களை நம் பாரம்பரியத்தின் அடிப்படையிலும், சில நடைமுறைச் சட்டங்களை தற்காலத் தேவையின் அடிப்படையிலும் இயற்க வேண்டிய காலகட்டத்தில் நாம் உள்ளதை இன்றைய சூழல் வெளிப்படுத்திவிட்டது. மக்களே நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? மத்திய அரசு என்ன செய்யப்போகிறது? காலத்தின் கையில் பாரதத்துக்கான எதிர்பார்ப்பு அதிகம் காத்திருக்கிறது.

(Visited 28 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *