சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

உங்கள் எண்ணெய் எந்தத் தரம்?

உலகில் சமையல் எண்ணெய் தயாரிப்பு மற்றும் நுகர்வில் முன்னணியில் உள்ள நாடு நம் பாரத நாடு. ஜிஜிஎன் இன்டர்நேஷனல் என்ற அமைப்பின் ஆய்வுப்படி இந்தியாவில் கடந்த 2017 -& 18ம் நிதியாண்டில் அதாவது, 2017 நவம்பர் முதல் 2018 அக்டோபர் வரையிலான மாதங்களில் 7.66 மில்லியின் டன் சமையல் எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 0.61 மில்லயன் டன் எண்ணெய் உற்பத்தி
அதிகம் ஆகும்.

இறக்குமதிதான் இந்தியாவின் நம்பிக்கை?

இதுதான் அதிகபட்ச உற்பத்தி என்றபோதும், சோயா எண்ணெய், பாமாயில் எண்ணெய் ஆகியவை அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால், அதிகப்படியான எண்ணெய் தேவையானது இறக்குமதியின் மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. உற்பத்தி 7.66 மில்லியன் டன் உற்பத்தி என்றாலும், நுகர்வின் மொத்த அளவு 22.75 மில்லியன் டன்களாகும். அப்படியானால், பற்றாக்குறையாக உள்ள 15.12 மில்லியன் டன் எண்ணெய்? நிச்சயம் இறக்குமதி மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. இதுதான் உண்மையும் கூட.
15 மில்லியன் டன் சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு நாம் செலவிடும் தொகை ஆண்டுக்கு 65 ஆயிரம் கோடி ரூபாயாகும். இதில், இந்தோனேஷியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து கச்சா பாமாயில் இறக்குமதி செய்யப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட சோயாபீன் எண்ணெய் அர்ஜென்டினா மற்றும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதில், 3ம் இடத்தில் உள்ளது சன்பிளவர் எனப்படும் சூரிய காந்தி எண்ணெய். இது ரஷ்யாவிடம் இருந்து பிரிந்த ஊக்ரைன் நாட்டில் இருந்து அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது.

கண்டு பிடிக்க முடியாத கலப்படம்?

பெரும் அளவில் பணம் புரளும் துறையாகவும், கோடிக்கணக்கான குடும்பங்களை வாடிக்கையாளர்களாகவும் கொண்ட துறை என்பதுடன், மக்களின் ஆரோக்கியம் சார்ந்தும் உள்ளதால், இது மிகவும் கவனமாக கையாள வேண்டிய ஒரு வர்த்தகத்துறையாக உள்ளது. இதற்குக்காரணம், நம்பிக்கை.
நீங்கள் வாங்கும் சமையல் எண்ணெயின் தரம் எப்படிப்பட்டது? நிச்சயமாக யாருக்கும் தெரியாது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள உணவுத்தர பரிசோதனை மையங்களில் ஆய்வு செய்தால் மட்டுமே எதையும் உறுதியாக சொல்ல முடியும் என்பதால், சமையல் எண்ணெயில் கலப்படம் கொடிகட்டிப் பறக்கிறது.
உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளால் மட்டுமே எதுவும் சாத்தியம் என்ற நிலையில், போதிய அதிகாரிகள் ஆய்வுக்கு இல்லாதபோது, கலப்படத்தைப் பற்றி கேட்கவா வேண்டும்? கார்பைடு கல் வைத்து மாம்பழம் பழுக்க வைப்பதை தடுப்பது, கலப்பட சவ்வரிசி உற்பத்தியைத் தடுப்பது என்று பரபரப்பாக இருக்கும் உணவுப் பாதுகாப்பு அதிகளின் பார்வை, சமையல் எண்ணை பக்கம் திரும்புவது சொற்பமே.
எண்ணெய் உற்பத்தி விலையை தெரிந்து கொள்ளுங்கள்
சரி, நீங்கள் இப்போது சமையலுக்குப் பயன்படுத்தும் எண்ணெயின் ஒரு கிலோ விலை? உற்பத்தி செலவு எவ்வளவு என்று தெரியுமா? உதாரணமாக கடலை எண்ணெயை எடுத்துக் கொள்ளலாம்.
கடலை எண்ணெய்க்கு அடிப்படை, கடலைப்பருப்பு. இவை 80 கிலோ எடை கொண்ட மூட்டைகளாக வரும். மணிலாவில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட, எண்ணெய் பிழிதிறன் அதிகம் கொண்ட பருப்பு மூட்டை 5 ஆயிரத்து 600 ரூபாய்க்கு கிடைக்கும். இதை செக்கில் இட்டு ஆட்டும்போது 33 கிலோ முதல் 36 கிலோ வரை கடலை எண்ணெய் கிடைக்கும். இதில் 33 கிலோ எண்ணெய் என்றால் 47 கிலோ புண்ணாக்கு கிடைக்கும். 36 கிலோ கடலை எண்ணெய் எடுக்கப்பட்டால், 44 கிலோ புண்ணாக்கு கிடைக்கும்.
ஒட்டு மொத்தமாக தயாரிப்பு செலவு எல்லாம் சேர்த்து கிலோவுக்கு 140 ரூபாய் வீதம் கடலை எண்ணெய் மொத்த விலைக்கு சந்தைக்கு வரும். மீதம் உள்ள புண்ணாக்கு கிலோ 35 அல்லது 36 ரூபாய் வீதம் விற்பனைக்கு அனுப்பப்படும். இதனால், புண்ணாக்கு லாபத்தை,எண்ணெய் விலையில் கழித்துவிடுவதால், ஓரளவு குறைந்த விலைக்கு எண்ணெய் கிடைக்கிறது. இதெல்லாம் மனக் கணக்கு இல்லீங்க. ஒரு பிரபலமான எண்ணெய் உற்பத்தி நிறுவனத்தினர் சொன்னக் கணக்கு. கடலை எண்ணெய் நம் கண் முன்னால் தயாரிக்கப்படுகிறது.

சூரிய காந்தி எண்ணெய்?

மற்ற எண்ணெய் ரகங்கள்? குறிப்பாக சூரிய காந்தி எண்ணெய், தேங்காய் எண்ணெய்?
மற்றும் பாமாயில் ஆகியவை? முதலில் சொன்னபடி பாமாயில், சோயா எண்ணெய் இறக்குமதிதான். பின்னர் இன்றைக்கு சந்தையில் கிடைக்கும் சூரிய காந்தி எண்ணெய்? இறக்குமதிதான் பெரும்பாலும். ஆனால், பல நிறுவனங்கள் தாங்களே சொந்தமாக மில் வைத்து எண்ணெய் பிழிவதாக படம் காட்டுகின்றனர். ஒரு லிட்டர் தரமான சூரிய காந்தி எண்ணெய் தயாரிக்க, எவ்வளவு சூரிய காந்தி தேவைப்படும்? சுமாராக ஆயிரத்து 450 கிராம் சூரிய காந்தி விதை (எண்ணெய் பிழிதிறன் அதிகம் கொண்டது) வேண்டும். 16 கிலோ சூரிய காந்தி விதையில், 11.5 கிலோ எண்ணெய் எடுக்கலாம் என்கின்றனர் எண்ணெய் உற்பத்தியாளர்கள். தரமான சூரியகாந்தி விதை கிலோ 50 முதல் 60 ரூபாய்க்கு சந்தையில் கிடைக்கிறது. 40 ரூபாய்க்கு கிடைக்கும் விதையின் எண்ணைப் பிழிதிறன் குறைவாகவே இருக்கும். எனவே, கடலை எண்ணெயில் புண்ணாக்கு மீதான லாபத்தை, எண்ணெய் விலையில் கழித்ததுபோல், இதில் செய்திட முடியாது. இதனால், சந்தையில் சூரியகாந்தி எண்ணெய் கிடைப்பது அளவுக்கு அதிகமாக இருந்தாலும், அவற்றின் தரத்தை உறுதிப்படுத்த வேண்டியது அரசின் கடமையாக உள்ளது.

தேங்காய் எண்ணெயும் தப்பிடவில்லை?

எண்ணெய் கலப்படங்களில் சர்ச்சை சமீபத்தில் வெடித்தது கேரளாவின் கெடுபிடியால்தான். கேரளாவில் சமையல் முதல் அனைத்துப் பயன்பாடுகளுக்கும் தேங்காய் எண்ணெயை அதிகம் பயன்படுத்துவார்கள். கேரளா மற்றும் தமிழகத்துக்குத் தேவையான தேங்காய் எண்ணெயை உற்பத்தி செய்வதற்காகவே திருப்பூர் மாவட்டம் காங்கயம் பகுதியில் 135க்கும் அதிகான தேங்காய் எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் தயாரிக்கப்படும் எண்ணெய், அப்படியே கேரளாவுக்கு பார்சல் செய்யப்பட்டது.
இதில், தேங்காய் எண்ணெயின் தரம் குறித்து சந்தேகம் ஏற்பட்டதால், கேரளாவில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதில், தேங்காய் எண்ணெயில் கலப்படம் இருப்பது தெரியவந்தது. குறிப்பாக மினரல் ஆயில் எனப்படும் (லிக்விட் பாரபின்) நிறம், மணம் இல்லாத எண்ணெய் கலப்படம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதனால், காங்கயத்தின் பல எண்ணெய் நிறுவனங்கள் வர்த்தக வாய்ப்பை இழந்தன. இதன் பின்னர், ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் தயாரிப்பின் மீது உறுதி சான்றிதழ் அளித்தால் மட்டுமே தேங்காய் எண்ணெயை வாங்குவோம் என்றது கேரளா. இதனால், தேங்காய் எண்ணெய் நிறுவனங்கள் இப்போது அடக்கி வாசித்துக் கொண்டிருக்கின்றன.

கலப்படம் என்பது சாத்தியமா?

நீங்கள் கேட்பது சந்தேகத்துக்கு உரிய கேள்விதான். ஆனால், தேயிலையில் மஞ்சனத்தி மரத்தின் இலை மற்றும் சாயப்பவுடரை கலந்து, உங்கள் கண் முன்னே டீக்கடையில் விற்பனை செய்கின்றனர். கிலோ 140 ரூபாய்க்கு கிடைக்கும் தேயிலையின் தரம் இப்படித்தான் இருக்கும். அதேபோல், எண்ணையில் கலப்படம் சாத்தியமே. கிலோ 140 ரூபாய்க்கு விற்பனையாகும், கடலை எண்ணெய், லிட்டர் 200 ரூபாய்க்கு விற்பனையாகும் நல்லெண்ணை, 250 ரூபாய்க்கு விற்பனையாகும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றில் கலப்படம் சாத்தியமே.
25 ஆண்டுகளுக்கு முன்னர் தேங்காய் எண்ணெயை சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். ஆனால், இப்போது பல பிரபல பிராண்டுகள் சந்தைப்படுத்தும் தேங்காய் எண்ணெய் பாட்டில்களில், வெளிப்பிரயோகம் மட்டும். உணவில் சேர்க்க வேண்டாம்’ என்று கட்டம் கட்டி விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள். இயற்கை கொடுத்த வரப்பிரசாதமான தேங்காய் எண்ணெயின் மீது, ஏன் இப்படியொரு விளம்பரம். அப்படியானால், அதில் என்ன ரசாயனங்கள் சேர்த்திருப்பார்கள்? இது ஒரு சின்ன சாம்பிள்தான்.

பல்வேறு எண்ணெகளாக பரிணமிக்கும் மினரல் ஆயில்?

இன்று சந்தையில் கிடைக்கும் மலிவான எண்ணெகளில் மினரல் ஆயில் முதல் இடத்தில் உள்ளது. நிறமற்றது, மணமற்றது, சுவையற்றது. ஆனால், உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியது. எதனால் தீங்கு விளைவிக்கிறது. உலகில் பெட்ரோலியம் தயாரிக்கும் அனைத்து நாடுகளிலும் நீக்கமற நிறைந்திருப்பது இந்த மினரல் ஆயில், கச்சா எண்ணெயை காய்ச்சி பகுக்கும்போது, கிடைக்கும் ஒரு உபபொருள் இந்த மினரல் ஆயில். இதை லிக்விட் பாரபின் என்றும் குறிப்பிடுவார்கள். நிறம், மணம் இல்லாத நிலையில், இது தண்ணீரைப் போன்ற தன்மை கொண்டது.
அதாவது, தண்ணீர் தான் இருக்கும் பாத்திரத்தின் தன்மையை, வடிவத்தைக் கொண்டுள்ளதுபோல், இந்த மினரல் ஆயில் இருக்கும். அதாவது, ஒரு லிட்டர் கடலை எண்ணெய்/ ஒரு லிட்டர் சூரிய காந்தி எண்ணெய்/ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் மற்றும் ஒரு லிட்டர் பாமாயில் என்று எதனுடன் இதைக் கலந்தாலும், அப்படியே அந்த எண்ணெயாகவே மணம், சுவை பெற்றுவிடும். ஆனால், தரம் இருக்காது. இதுதான் எண்ணெய் கலப்படத்தின் அடிப்படையாக இருப்பதாக கூறுகின்றனர் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள். இதில் என்ன ஒரு சிக்கல் என்றால், இந்தக் கலப்படங்களை நீங்களோ, நானே உடனடியாக கண்டு பிடிக்க முடியாது என்பதுதான்.

கொள்ளை லாபம் தரும் மினரல் ஆயில்!

எண்ணெய் இறக்குமதி 65 ஆயிரம் கோடி என்றால், விற்பனை சந்தை ஒரு லட்சத்து 25 ஆயிரம் கோடிகளை விஞ்சுகிறது. எனவே, பெரும் பணம் புரளும் இந்தத் துறையில் நிறைய நிறுவனங்கள் குறுக்கு வழியில் லாபம் சம்பாதிப்பதற்காக இந்த மினரல் ஆயிலை தங்கள் வசம் எடுத்துக் கொள்கின்றனர். சில நிறுவனங்கள் 25 சதவீதம் மினரல் ஆயிலை உணவுப் பதார்த்த எண்ணெகளில் கலப்படம் செய்வதாகவும், வேறு சில நிறுவனங்கள் 50:50 என்ற விகிதத்தில் கலப்படத்தில் ஈடுபடுதாகவும் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஒரு லிட்டர் கடலை எண்ணெய்/ ஒரு லிட்டர் சூரிய காந்தி எண்ணெய்/ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் மற்றும் ஒரு லிட்டர் பாமாயில் என்று எதனுடன் இதைக் கலந்தாலும், அப்படியே அந்த எண்ணெயாகவே மணம், சுவை பெற்றுவிடும். ஆனால், தரம் இருக்காது. இதுதான் எண்ணெய் கலப்படத்தின் அடிப்படையாக இருப்பதாக கூறுகின்றனர் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள்.

அந்தளவுக்கு மினரல் எண்ணெய் மலிவாக கிடைக்கிறதா? என்று நீங்கள் கேட்கலாம். இன்று தரமான மினரல் எண்ணெய் ஒரு லிட்டர் 40 ரூபாயில் இருந்து 45 ரூபாய்க்குள் ஆன் லைன் சந்தையில் கிடைக்கிறது. பெட்ரோலிய இறக்குமதியாளர்கள் ஒப்பந்தம் செய்து கொண்டால், லாரிகளில் கொண்டு வந்து இறக்கிவிடுவார்கள். அந்தளவுக்கு மலிவு என்பதால், கலப்படம் என்பது சாத்தியமாகிறது. சத்தம் இல்லாமல் சம்பாத்தியம் அதிகரிக்கிறது.

கடலை எண்ணெயும் தப்பிடவில்லை!

சில மாதங்களுக்கு முன்னர் ஒரு பிரபல நிறுவனம் பாக்கெட் கடலை எண்ணெயை சந்தைப்படுத்தியது. அந்த எண்ணெய் பாக்கெட்டின் மேல் பகுதியில் நிலக்கடலை (மணிலா) படம் அச்சிடப்பட்டு இருக்கும்.

பாமாயில் 50% கெட்ட கொழுப்பு சத்து இருக்கிறது. இனியும் உடலுக்கு
தேவையான சில வைட்டமின்களும் உள்ளன என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதய நோய் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்றும் கருத்துகள் உள்ளன.

வியாபாரம் செழிப்பதால் பல காடுகள் தீயினை தீயினால் அழிக்கப்பட்டு
இந்த வகை மரங்கள் வளர்க்கப்படுவதால் உலகளவில் சுற்றுச்சுழலுக்கு
பெரும் கேடு விளைகிறது.

அதன் பின் பகுதியில் சிறிய வடிவத்தில் நட்சத்திர குறியீட்டுடன், ‘இது தாவர எண்ணெய்’ என்று குறிப்பிடப்பட்டு இருக்கும். இதுகுறித்து விசாரித்தபோது 50:50 என்ற விகிதத்தில் கடலை எண்ணெயுடன், பாமாயில் சேர்க்கப்பட்டது என்பது தெரியவந்தது. நூறு சதவீதம் கடலை எண்ணெய் வேண்டும் என்றால், நீங்கள் எண்ணெய் ஆட்டி விற்பனை செய்யும் இடத்துக்கே செல்ல
வேண்டியிருக்கும்.

பெட்ரோலின் கடைசி அவதாரம் தான் மினரல் எண்ணெய், அல்லது சீம எண்ணெய், லிக்விட் பாரஃவின் என்றும் கூறுவார்கள். பல பெயர்கள் என்று இருந்தாலும் உடலுக்கு கேடு விளைவிப்பது மட்டுமே உண்மை. இது நிறமில்லாதது. சுவை இல்லாதது. எளிதில் கலப்படும் செய்ய ஏதுவானது. நாம் இன்று வாங்கும் பெரும்பாலான எண்ணெய்களில் சரி பாதி இதுதான் என்பதே தேவையான உண்மை.

கலப்படத்தை தவிர்க்க என்ன வழி?

நீங்களும் நானும் ஜீபூம்பா பூதத்தை வைத்து சமையல் எண்ணெயின் தரத்தை பிரித்துப் பார்க்க முடியாது. அதற்கென தரமான உணவுத்துறை ஆய்வகங்கள் வேண்டும். புனே, டில்லி ஆகிய பெருநகரங்களில் இதுபோன்ற ஆய்வகங்கள் உள்ளன. சென்னையில் சில ஆய்வகங்கள் உள்ளன. இங்கெல்லாம் சென்று இந்த எண்ணெயை ஆய்வு செய்வதற்குள், பயன்படுத்தியவரின் வயிற்றில் இருந்து இந்த எண்ணெய் பிசுக்குகள் கழிவுகளாக வெளியேறிவிடும். ஆனால், புற்றுநோய், குடல் அழற்சி, தோல்நோய் பாதிப்பு உட்பட பல்வேறு பிரச்னைகளுக்கான விதைகளை உடம்பினுள் ஆழ ஊன்றிவிட்டுச் செல்லும். 130 கோடி மக்கள் தொகை கொண்ட தேசத்தின் ஒவ்வொரு குடிமகனின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதும், உறுதி செய்வதும் மத்திய, மாநில அரசுகளின் கடமையாகும்.
இறக்குமதியை முறைப்படுத்துவதும், சந்தையில் எண்ணெயின் தரத்தை மாதம்தோறும் ஆய்வுகள் செய்து, உறுதிப்படுத்துவதும் அரசின் கடமை. தவறு செய்யும் எண்ணை நிறுவனங்கள் உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கலப்படத்தை தடுப்பது சாத்தியம்.
மக்கள் தங்கள் உடல்நலத்தை தொலைத்து விட்டு யோசிப்பதைவிட, இப்போதே அரசுடன் மல்லுகட்டி, உணவு பாதுகாப்பு ஆய்வகங்கள் அவரசத் தேவை என்பதை உறுதிபடுத்த வேண்டும்.
நாம் வாங்கும் ஒவ்வொரு பாக்கெட் எண்ணெயிலும் அரசின் தரச்சின்னம் இருக்க வேண்டும்.

(Visited 169 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *