சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

என்னதான் ஆச்சு நம்ம ரூபாய்க்கு

லோக்சபா தேர்தலை பாரதிய ஜனதா கட்சி எதிர்கொண்டு காத்திருக்கும் இந்நேரத்தில், எதிர்பாராத ஒரு பிரச்னை ஏற்பட்டு, அது எதிர் கட்சிகளின் பகடைக் காயாக உருட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆம், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ந்து கொண்டிருக்கிறது என்பது எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டு. இன்னும் சொல்லப்போனால், இது மோடி அரசின் திறமையற்ற நிர்வாகத்தின் வெளிப்பாடு என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர்களாக உள்ள நடிகைகள் வரை பேசப்படும் விஷயமாகிவிட்டது. ஆனால், உண்மையில் சர்வதேச அளவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது வாய்க்கு வந்ததைப் பேசும் இவர்களுக்கு சுத்தமாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சர்வதேச அளவில் நம்மை நிலைப்படுத்திக் கொள்வதற்காக மோடி அரசு, எந்தளவுக்கு அமெரிக்காவை எதிர்க்கவும் துணிந்துவிட்டது என்பதை இங்கே விரிவாகப் பார்க்கலாம்.

உலக சந்தையை ஆட்டிப் படைக்கும் அமெரிக்கா!

சர்வதேச அளவில் முதலீட்டாளர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் முதலீடு செய்ய விரும்பும் பொருட்களில் முதல் 3 இடத்தில் இருப்பது தங்கம், பெட்ரோலியம் அடுத்ததாக அமெரிக்க டாலர். இப்போது சொல்லாமல் புரிந்திருக்கும். ஆம், நீங்கள் வாங்கும் தங்கம், பெட்ரோலியம் உட்பட எந்த ஒரு பொருளுக்கும் சர்வதேச சந்தையில் எளிதில் மாற்றக் கூடிய பண மதிப்பு மிக்க பொருளாக அமெரிக்க டாலர் உள்ளது. சர்வதேச நாணய நிதியம், உலகவங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றின் கரன்சி பரிவர்த்தனையில் டாலருக்கென தனியாக மரியாதை உள்ளது. அவ்வளவு ஏன், நம் பாரதநாடே முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 400 பில்லியன் டாலர் அளவுக்கு அமெரிக்க டாலரை ரிசர்வ் நிதியாக இப்போதைக்கு வைத்துள்ளது. நம்ம இந்திய மதிப்பில் சொல்வதானால் 27 லட்சத்து 83 ஆயிரம் கோடி ரூபாய், ரிசர்வ் மதிப்பாக உள்ளது.

அமெரிக்காவின் மிரட்டலும், ஈரானின் பதிலடியும்!

சர்வதேச அணுஆயுதப் பரவல் ஒப்பந்தத்தை மீறி, ஈரான் நாடு தொடர்ந்து அணுஆயுத உற்பத்தியில் ஈடுபடுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. இதனால், ஈரான் நாட்டிடம் இருந்து எந்த ஒரு நாடும் கச்சா எண்ணையை இறக்குமதி செய்யக்கூடாது என்று அமெரிக்கா மிரட்டிக் கொண்டிருக்கிறது. இந்த மிரட்டல் காரணமாக, ஈரானிடம் இருந்து கச்சா எண்ணை இறக்குமதி செய்த குட்டி நாடுகள், தங்கள் இறக்குமதியை நிறுத்திக் கொண்டன. இதற்குபதில், அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்களிடம் இருந்து கச்சா எண்ணையை இறக்குமதி செய்து கொண்டிருக்கின்றன. இதனால், பல்வேறு நாடுகளும் அமெரிக்க டாலர்களை தங்கள் எண்ணை இறக்குமதிக்கான தொகையாக செலுத்திக் கொண்டிருப்பதால், அமெரிக்க டாலரின் மதிப்பும், தேவையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

பாரதத்துக்கு எந்த இடத்தில் பாதிப்பு ஏற்படுகிறது?

நம் பாரத நாட்டின் மொத்த பெட்ரோலியத் தேவை நூறு சதவீதம் என்றால், இதில் அதிகப்படியான தேவையை இறக்குமதி மூலம்தான் பூர்த்தி செய்து கொள்கிறோம். எந்தளவுக்கு என்றால், 82 சதவீதம் அளவுக்கு. நமது பிரதான கச்சா எண்ணை வழங்கும் நாடுகளாக சவுதி அரேபியா, அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகள் உள்ளன. இன்னும் சொல்லப்போனால், பாரதத்துக்கு அதிகளவு கச்சா எண்ணை வழங்கும் நாடுகளின் பட்டியிலில் ஈரான் 2ம் இடத்தில் உள்ளது. அமெரிக்காவின் மிரட்டலுக்குப் பயந்து கொண்டு, மற்ற நாடுகளைப் போல் நாமும் அமெரிக்காவிடம் அதிகளவு கொள்முதல் செய்யும்போது, அமெரிக்க டாலர்களில் கச்சா எண்ணைக்கான பணத்தைத் திரும்பக் கொடுக்க வேண்டியிருக்கும். இதனால், அமெரிக்க டாலரின் மதிப்பு இயல்பாகவே உயரத் தொடங்கும். இதனால், பாரதத்தின் பணத்தின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடையும் ஆபத்துள்ளது.

ஈரானுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்தியா!

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணை இறக்குமதி செய்வதற்கு அமெரிக்காத் தடை விதித்துள்ள நிலையில், இந்தியாவுக்கான இறக்குமதி சலுகைகளை ஈரான் நீட்டித்துள்ளது. ஈரானிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணையை மட்டுமே அதிகளவு இறக்குமதி செய்கிறது. இதற்கு பதிலாக இந்தியாவிடம் இருந்து பாசுமதி அரிசி, வேளாண் உற்பத்திப் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், ரசாயனம், பொறியியல் இயந்திரங்கள், மின்சாதன பொருட்கள், கட்டிட கட்டுமானத்துக்குத் தேவையான அடிப்படை கட்டுமானப் பொருட்கள், ஜவுளி உற்பத்தி, பஞ்சு, வனஸ்பதி, நெய், எண்ணை வித்துக்கள், உயிர்காக்கும் மருந்துகள் உட்பட பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது.
இவற்றுக்கான தொகையை இந்தியா – ஈரான் நாடுகள் இணைந்து, இந்திய மதிப்பிலேயே பங்கிட்டுக் கொள்கின்றன. அதாவது, ஈரான் தான் வழங்கும் கச்சா எண்ணைக்கான தொகையை இந்தியாவிடம் இருந்து, இந்திய ரூபாய் மதிப்பில் பெறுகிறது. பின்னர் அதே பணத்தை தான் இறக்குமதி செய்து கொள்வதற்கான தொகையாக வழங்குகிறது. இந்த வர்த்தகத்தின் இடையே, அமெரிக்க டாலருக்கு வேலையில்லை. இதனால், தேவையின்றி
அமெரிக்க டாலர்களை இழக்க வேண்டியிருக்காது என்பது இந்தியாவின் திட்டம். ஆனால், சவுதி மற்றும் அமெரிக்காவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணைக்கு டாலர்களில் செலுத்தல் இருக்க வேண்டும் என்பது அடிப்படை நிபந்தனையாகும்.

எரிபொருளுக்கு அதிக செலவு

இந்தியாவின் அன்னியசெலாவணி கையிருப்புக்கு வேட்டு வைக்கும் முதல் காரணி, கச்சா எண்ணை இறக்குமதிதான். கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் கச்சா எண்ணையின் மிதமிஞ்சிய இறக்குமதியால் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 18 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. மொத்த இறக்கு மதியில் 42 சதவீதம் கச்சா எண்ணைக்கு செலவிட வேண்டியுள்ளது. இதனால், சர்வதேச பரிவர்த்தனையின் பொருட்டு, இந்தியாவும் கச்சா எண்ணைக்காக டாலர்களில் செலுத்திட வேண்டியுள்ளது. இப்போது, கச்சா எண்ணை மற்றும் தங்கம் மீதான முதலீடுகளைக் குறைத்துக் கொண்டுள்ள சர்வதேச முதலீட்டாளர்கள் டாலர்கள் மீது தங்கள் கவனத்தைத் திருப்பத் தொடங்கியுள்ளனர். அதிகளவு டாலர்களை முதலீட்டாளர்கள் வாங்கிக் குவிப்பதால், டாலர் தேவை உயர்ந்துள்ளது.
அதேநேரத்தில் துருக்கியின் நாணயமான லிரா, அதன் மதிப்பில் 45 சதவீதம் இழந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 70 ரூபாயை எட்டியிருக்கும் நிலையில், பிற நாடுகளுடனான நமது நாணயத்தின் மதிப்பு நிலையாகவே உள்ளது. இன்னும் சொல்லப்போனால், ஒரு அமெரிக்க டாலருக்கு எதிரான ஈரான் ரியாலின் மதிப்பு 42 ஆயிரம் (அரசு நிர்ணயம்) என்றால், அங்கு எந்தளவுக்கு பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை சொல்லாமல் புரிந்து கொள்ள முடியும்.

தாக்குப் பிடிக்குமா இந்தியா?

சர்வதேச அளவில் இவ்வளவு பிரச்னைகள் ஓடிக் கொண்டிருக்க, ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு கருத்துச் சொல்லும் அரசியல் கட்சிகளின் பிரகஸ்பதிகளுக்கு சொல்லிக் கொள்வது ஒன்றுதான். கவலைப்பட வேண்டாம். இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பாக 410 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகை உள்ளது. சர்வதேச நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில், 8 முதல் 10 சதவீதம் டாலர்களை களத்தில் இறக்குவதற்குத் தயாராக உள்ளது. அதாவது 40 பில்லியன் டாலர்களை ரிசர்வ் வங்கி களப்படுத்தத் தயாராகவுள்ளது. இதன்மூலம் இந்திய ரூபாயின் மதிப்பைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

சரி, நீங்கள் என்ன செய்யலாம்?

இந்திய ரூபாயின் மதிப்பு சரிகிறது என்று கவலைப்படும் நீங்களும், நானும் நம் நாட்டைக் காப்பாற்ற விரும்பினால் ஒரே ஒரு வேலையைச் செய்தால் போதும். எதற்கெடுத்தாலும் இரு சக்கர வாகனத்தை பயன்படுத்த வேண்டாம். காரணம், பெட்ரோல், டீசல் உட்பட கச்சா எண்ணை இறக்குமதிக்கே இந்த ஆண்டு இறுதிக்குள் நமது நாடு 7 லட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு செலவிட வேண்டியுள்ளது என்பது உங்களின் கவனத்துக்கு தெரிவித்துக் கொள்கிறோம். 5:23 கச்சா எண்ணை இறக்குமதியை குறைத்தால், நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்புத் தப்பிக்கும். நம் பண மதிப்பும் சிறப்பாகவே இருக்கும். இப்போதைக்கு நம் பணத்தின் மதிப்பு சிங்கம்போல் கம்பீரமாகவே உள்ளது. அதை மேலும் வலுப்படுத்த வேண்டியது நம் கடமையும் கூட! செய்வீர்களா!!

(Visited 15 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *