சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

என்னவாகும் திமுக இனி….

வாழ்க்கை மட்டுமல்ல அரசியலும் ஒரு வட்டம்தான். இங்கே ஓட்டுச் சக்கரத்தின் சுழற்சிதான் அரசியல் கட்சிகளின் எதிர்காலத்தை இறுதி செய்யும் அச்சாணி. பல்லாண்டுகளாக இருந்த காங்கிரசை திமுக தேர்தலில் வீழ்த்தியதும், அதே திமுகவில் இருந்து பிரிந்த அதிமுக, 1977 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வீழ்த்தியதும், இதன் பின்னர் இரு கட்சிகளும் மாறிமாறி ஆட்சியை கைப்பற்றுவதும் ஓட்டுக்களின் சுழற்சியில் ஏற்படும் மாறுதலாலேயே தவிர, புதிதாக எதுவும் இல்லை.

என்ன ஒரு சின்ன வித்தியாசம், துட்டுக்கு ஓட்டு என்ற நிலை வந்த பின்னர், யார் அதிகம் பணம் கொடுக்கிறார்களோ, அவர்கள் மட்டுமே பெரும் அளவில் வெற்றிபெருகின்றனர் என்பது உண்மை. ஆனால், அதையும் மீறி 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வீழ்த்திய அதிமுக 150க்கும் அதிகமான இடங்களில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது. இதன் தொடர்ச்சியாக 2016ம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் திமுகவை மண்ணைக் கவ்வ வைத்தது அதிமுக.

திடீர் வெற்றிடம்

அதிமுகவின் தலைமையான ஜெயலலிதாவும், திமுகவின் தலைமையான கருணாநிதியும் ஒரே காலத்தில் அரசியல் வாழ்வில் அஸ்தமனத்தை சந்தித்துள்ளனர். இதனால், இப்போது இந்த இரு கட்சிகளுக்கும் சரியான தலைமை இல்லை. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுக பிளவுபட்டு, இணைந்து, ஒட்டுப்போட்டு, ஓட்டுக்கேட்டு கடைசியில் தினகரன் பணமழைக்கு முன்னர் திகிலடித்துக் கிடக்கிறது.

ஆனால், திமுக?

வாரிசு அரசியலால் அல்லோல்பட்டு, அவதிப்பட்டு, இப்போது அடுத்தக்கட்ட நகர்வு என்ன என்பது தெரியாமலேயே திகைத்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. 2009ம்ஆண்டு நடைபெற்ற திருமங்கலம் இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட லதா அதியமானைப் வெற்றிபெறச் செய்வதற்காக, மதுரையில் திமுகவின் நிழல் முதல்வராக செயல் பட்ட அழகிரி, தன் முழு பலத்தையும் அரசியல் களத்தில் இறக்கினார். திருமங்கலம் இடைத்தேர்தலில் வெற்றிபெறுவதற்காக அழகிரி தலைமையிலான திமுகவினர் அப்போது அறிமுகப்படுத்திய துட்டுக்கு ஓட்டு எனப்படும் திருமங்கலம் பார்முலா, ‘எங்கள் வேட் பாளர் 40 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார்’ என்று அழகிரியை முன் கூட்டியே பேட்டி கொடுக்கும்படிச் செய்தது. இந்த வெற்றி அழகிரிக்கு திமுகவின் தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியை பெற்றுத் தந்தது. அதே சூட்டுடன் அவர் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு மத்திய அமைச்சரும் ஆனார்.

பனிப்போர்

இதையடுத்து, திமுகவில் கருணாநிதிக்குப் பின்னர் தலைமைப் பதவிக்கு வரக் கூடிய அரசியல் ஆளுமை யாரிடம் உள்ளது என்ற பலப்பரீட்சையும், பனிப்போரும் ஏற்பட்டது. ஸ்டாலின் துணை முதல்வர், அழகிரி மத்திய அமைச்சர் என்ற வலுகாட்ட, 3வது வாரிசான கனிமொழி, 2ஜி பிரச்னையில் சிக்கி தடுமாறி, கரைசேர முடியாமல் தத்தளித்துக் கொண்டார். எனவே, கிடைத்த வாய்ப்பை ஸ்டாலினும், அழகிரியும் தங்களை முழுமையாக பயன்படுத்தத் தொடங்கினர். ஏறக்குறைய 2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் திமுக, அதிமுகவுக்கு ஒரு அக்னி பரீட்சை களமாகவே இருந்தது.
அழகிரி மத்திய அமைச்சராக இருந்தபோதே, மதுரைக்கு வந்த ஜெயலலிதா, மிகமிக பிரமாண்ட பொதுக் கூட்டத்தைத் திரட்டி, திமுகவை திக்குமுக்காடச் செய்தார். பின்னாளில், அதிமுக ஆட்சிக்கு வந்ததும் போக்குவரத்துத்துறை அமைச்சராக செந்தில்பாலாஜி வந்ததற்கு, மதுரை பொதுக் கூட்டத்துக்கு தனியார் பஸ்களில் பெரும் அளவில் அவர் ஆட்களைத் திரட்டி வந்து, ஜெயலலிதாவை திகைக்க வைத்ததும் ஒரு காரணமாக இருந்தது என்பதே உண்மை.

விரிசல்

மதுரையில் ஜெயலலிதா நடத்திய பொதுக் கூட்டமும், அதன் பின்னர் நடைபெற்றத் தேர்தலில் திமுகவின் படுதோல்வியும், ஸ்டாலின் – அழகிரி இடையே மெல்ல மெல்ல விரிசலை அதிகரித்தது. ஒரு கட்டத்தில் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசில் கூட்டணிக் கட்சியாக இருந்தாலும், பெரியாறு அணைப் பிரச்னையில் கருணாநிதி மதுரையில் நடத்துவதாக கூறிய உண்ணாவிரதப் ள பாராட்டமும், அதைத் தொடர்ந்து மத்திய அரசு கொடுத்த நெருக்கடியும் திமுகவை எரிச்சலில் ஆழ்த்தியது.
இதனால், கடுப்பான திமுக தலைவர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.

வெளியேறிய அழகிரி

மத்திய அமைச்சராக உள்ள தன்னிடம் ஒரு வார்த்தை கூட கூறாமல், மத்திய அரசில் இருந்து வெளியேறியதால், அழகிரி தன் தந்தை கருணாநிதி மீதும், தம்பி ஸ்டாலின் மீதும் மிகுந்த கோபத்தில் இருந்தார். தொடர்ந்து தென் மாவட்டங்களில் தனக்கென ஒரு படையை அவர் அணிதிரட்ட, ‘கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டார்’ என்று கூறி அவரிடம் இரு ந்த தென் மாவட்ட அமைப்புச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் திமுக நிர்வாகம் இப்போதைய செயல் தலைவர் ஸ்டாலின் வசம் வந்தது. அதுவும் சும்மா வரவில்லை. 2014 லோக்சபா தேர்தலில் அழகிரியை சந்தித்து பல்வேறு கட்சியினரும் ஆதரவு கேட்க, அவரும் ‘திமுக தொண்டர்கள் மனசாட்சிப்படி ஓட்டுப்போடுவார்கள்’ என்று பேட்டிக் கொடுக்க, அதுவரை கொஞ்ச நஞ்சம் இருந்த திமுக – அழகிரி உறவு அத்துடன் அம்பேலானது. அழகிரியை அடியோடு ஒதுக்கிய நிலையில்தான் 2016ம் ஆண்டு திமுக சட்டமன்றத் தேர்தலை சந்தித்தது.

அதிரடி அரசியல்

‘திமுகவில் உண்மையான விசுவாசிகளுக்கு இடம் இல்லை. காசு இருந்தால் சீட் கொடுப்பார்கள்’ என்ற அழகிரியின் அதிரடி பேச்சு, திமுக தொண்டர்களையும், அதன் தலைவர்களையும் கொஞ்சம் அசைத்துப் பார்த்தது. எதிர்பார்த்தது போல் அதிமுக 135க்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெற்று ஆளுங் கட்சியானது. திமுக 90 + இடங்களில் வென்று, எதிர் கட்சியானது. அதிமுகவில் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த அதே காலத்தில், உடல் நலக்குறைவால் சக்கர நாற்காலியில் வலம் வந்த கருணாநிதியும் முடங்கினார்.

செயல் தலைவர் ஸ்டாலின்

காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் கருணாநிதி இருந்தபோதே, திமுகவின் செயல் தலைவராக ஸ்டாலின் தேர்வு செ ய்யப்பட்டார். உண்மையில் அவர் செயல் தலைவரா? செயல்படாத தலைவரா? என்பதை கட்சியினருக்கும், தலைமைக்கும் நிரூபிக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளானார். முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்த பின்னர் அதிமுக தடுமாற, அந்த் நேரத்தில் அரசி யல் நடத்த வேண்டிய ஸ்டாலின் அமைதி காத்துக் கொண்டிருந்தார்.

கலைஞர் இருந்திருந்தால்…

‘தலைவர் மட்டும் இப்போது நல்ல செயல்படும் நிலையில் இருந்தால், இவ்வளவு எம்எல்ஏக்கள் இருப்பதற்கு திமுக ஆட்சி மலர் ந்திருக்கும்’ என்று சொந்தக் கட்சியின் தொண்டர்களே புலம்பும் அளவுக்கு திமுக செயல்தலைவர் கருணாநிதியின் செயல்பாடு இருந்தது. செயல் தலைவர் பதவியில் தன்னை அலங்கரித்துக் கொண்டு, அழகு பார்க்க முடிந்த ஸ்டாலினால், அவரது தந்தை கருணா நிதியின் அளவுக்கு அரசியல் செய்து, காய் நகர்த்திக் கொண்டிருக்க முடிய வில்லை.

ஆர்.கே.நகர் தேர்தல்

இந்த நேரத்தில்தான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஸ்டாலினுக்கு ஒரு அக்னி பரீட்சையாக அமைந்தது. ஜெயலலிதா 2015ம் ஆண்டு அங்கு இடைத்தேர்தலில் போட்டியிட்டு ஒன்றரை லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். மறுபடியும் 2016ம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஜெயலலிதா ஆர்.கே.நகரில் போட்டியிட்டபோது, அவரை எதிர்த்து சற்குணபாண்டியனின் மருமகள் சிம்லா முத்துச்சோழன் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் ஜெயலலிதா 97,218 ஓட்டுகள் பெற, சிம்லா முத்துச்சோழன் 57,673 ஓட்டுகள் பெற்றார்.

சோக முடிவு

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுக பிளவு பட்டாலும், ஓட்டுகள் சிதறவில்லை. ஆனால், திமுகவின் நிலைமை எப் படியுள்ளது? அதன் தலைமை செயல்பாடு எப்படியுள்ளது? என்பதை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெளிச்சம்போட்டுக் காட்டிவிட்டது. தேர்தல் ஓட்டுப்பதிவு நாளான டிசம்பர் 21ம் தேதி 2ஜி வழக்கில் இருந்து கனிமொழி, முன்னாள் அமைச்சர் ராசா ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். காலை 11 மணிக்கு வெளியான தீர்ப்பு, ஆர்.கே.நகரில் திமுகவின் வெற்றியை உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். வாக்குப்பதிவும் அப்படித்தான் இருந்தது.
ஆனால், தேர்தல் முடிவுகளோ, திமுகவின் செல்வாக்கு அதள பாதாளத்துக்கு சரிந்ததைக் காண்பித்தது. 2016 தேர்தலில் மொத்தம் பதிவான ஓட்டுகளில் ஜெயலலிதா 55.87 ஓட்டுகளும், சிம்லா முத்துச்சோழன் 33.14 சதவீத ஓட்டுகளும் பெற்றிருந்தனர். ஆனால், சமீபத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் மொத்தம் பதிவான ஓட்டுகளில் திமுக 13.94 சதவீதம் ஓட்டுகள் மட்டுமே பெற்றது. அதாவது, பொதுத் தேர்தலின்போது 100 ஓட்டுகள் பெற்ற திமுக, இடைத்தேர்தலில் 44 ஓட்டுகளை மட்டுமே பெற்றிருந்தது குறிப் பிடத்தக்கது. ஆனால், அதிமுக 27.13 ஓட்டுகளும், அதிமுகு ஓட்டுகளைப் பிரித்த சுயேட்சை தினகரன் 50.32 சதவீத ஓட்டுகளும் பிரித்துள்ளார். எப்படிப் பார்த்தாலும், அதிமுகவின் ஓட்டு வங்கி சரியவில்லை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

கூட்டணி கட்சிகள் இருந்தும்!

ஆனால், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம்லிக் உட்பட 20 அரசியல் கட்சிகள் முட்டுக் கொடுத்தும், திமுகவின் ஓட்டு வங்கி சரிந்தது, உண்மையிலேயே அக்கட்சியினரை திகைப்பிலும், அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது என் பதே உண்மை. இதன் மூலம் அரசியல் சதுரங்கத்தில் திமுகவின் காய் நகர்த்தல்கள், தோல்வியில் முடிந்துள்ளன என்று ஒப்புக் கொண்டுள்ளனர் அக்கட்சியின் மூத்தத் தலைவர்கள்.

செய்வாரா ஸ்டாலின்?

‘திமுகவின் செயல் தலைவராக ஸ்டாலின் இருக்கும்வரை அக்கட்சி தேர்தல்களில் வெற்றிபெற முடியாது’ என்ற அழகிரியின் சா பத்துக்கு இந்த ஓட்டு வங்கி சரிவுதான் காரணம். திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலின் தன் தந்தை கருணாநிதியின் நிழலில் இருந்து தன்னை வளர்த்துக் கொண்டாரே தவிர, தன் தந்தையிடம் இருந்து அரசியல் கற்றுக் கொள்ளவில்லை. 2004ம் ஆண்டு திமுக அமைத்தது போன்ற பிரமாண்ட கூட்டணியை அமைத்தும், இடைத்தேர்தலில் தன் கட்சியை வெற்றிபெறச் செய்ய அவரால் முடியவில்லை. இத்தனைக்கும் சென்னை திமுகவின் கோட்டை. தலைநகரில் தொகுதியை கோட்டைவிட்டுள்ளார்.
சாணக்கியத்தனம் இல்லாத அரசியல் நடத்தும் அச்சம் ஸ்டாலினைவிட, அவரை அரசியலில் தூக்கிப்பிடித்துக் கொண்டிருக்கும் 2ம்கட்டத் தலைவர்களுக்கு இருப்பது உண்மை. ஆனால் பதவி ஆசையில் அவர்கள் தொடர்ந்து ஸ்டாலினை தவறாக வழி நடத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த இடைவெளியில், 2ஜி வழக்கில் இருந்து விடுதலைப் பெற்ற கனிமொழியும் திமுகவில் தனக்கென ஒரு அணியை உருவாக்கும் களப் பணியில் கால் வைத்துவிட்டார்.
திமுகவில் தன் செயல் தலைவர் பதவியை, தலைவர் பதவியாக உயர்த்தும் ஆர்வத்தில் ஸ்டாலின் உள்ளாரே, கட்சியைப் பலப்படுத்தும் நோக்கிலோ, அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கிலோ ஸ்டாலினின் எண்ணம் இல்லை. கட்சியில் தன்னை வீழ்த்தும் கோஷ்டிகள் எங்காவது உருவாகியுள்ளதா என்று பார்ப்பதில் காட்டும் ஆர்வத்தை, கட்சியை அடுத்தக்கட்ட நகர்வுக்கு கொண்டு செல்வதில் காண்பிக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார். இதுவே ஸ்டாலின் மிகப் பெரிய பலவீனம். இந்த பலவீனமும், முடிவெடுக்க முடியாத கையறு நிலையும் திமுகவின் இருண்ட எதிர்காலத்தையே காண்பிக்கின்றன.

(Visited 36 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *