சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

எம்.ஜி.ஆர் மட்டும் இருந்திருந்தால்…

தமிழ்நாடு இந்து அறநிலையத் துறையினர் ஏன் உங்களுக்கு எதிராக உள்ளனர்?

நான் அவர்களிடம் என்ன கேட்கிறேன் என்று தெரியுமா?
மதுரை உயர்நீதிமன்றம் 12-2-2018ம் தேதி கொடுத்துள்ள உத்தரவின்படி நடக்கத்தான் கோருகிறேன். நீதிபதி திரு.மகாதேவன் கொடுத்துள்ள தீர்ப்பின் முக்கிய அம்சங்களை நிறைவேற்றுமாறு தான் கேட்கிறேன்.
தமிழ்நாட்டில் இந்து கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்களின் பட்டியல். இவை அந்த அறநிலையத் துறையினர் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.
* 38,646 கோவில்கள்.
*4,78,000 ஏக்கர் நிலங்கள்
*22,600 கட்டிடங்கள்
*33,675 அணை கட்டுகள்
மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, இந்த கோயில் நிலங்கள் மற்றும் சொத்துகள் அந்தந்த கோயிலின் பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும்.
அந்த நிலங்கள், மற்றும் கட்டிடங்கள் தற்போது யார் வசம் உள்ளன என்று தெரிவிக்கப்பட வேண்டும்.
யார் வசம் இருந்தாலும், இன்றைய மார்கெட் நிலவரப்படி மட்டுமே வாடகை வசூலிக்கப்பட வேண்டும்.
தற்போது இருப்பவர்கள், இந்த புதிய மார்கெட் நிலவர வாடகைக்கு ஒத்துவரவில்லை என்றால் அவர்கள் வெளியேற்ற பட வேண்டும்.
கோயில் நிலங்களை விற்று, பட்டா போட்டு கொடுத்த அதிகாரிகளின் பெயர்களை வெளியிட வேண்டும்.
இவை 6 வாரத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இதனை செயல்படுத்துமாறு தான் கோரிக்கை வைத்து உண்ணாவிரதம் நடத்துகிறோம். இதில் யார் பக்கம் நியாயம் உள்ளது என்று நீங்களே சொல்லுங்கள்.

உங்களது இந்த முயற்சி எப்படி ஏற்பட்டது?

எங்களது இந்து ஆலயங்கள் மீட்பு இயக்கம் கோயில் சொத்துக்கள் மீட்டு போராட்டம் சமீபத்தில் தான் தொடங்கப்பட்டது என்றாலும் எனது கோயில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என்ற கொள்கை வெகு காலமாகவே இருக்கிறது.

ஜெயலலிதாவின் அதிரடி!

2003ம் ஆண்டு சட்டமன்றத்தில் நான் ஜெயலலிதா அம்மையாரை சந்தித்தேன். உடனடியாக கூறினேன். ‘‘இல்லாத கோயிலுக்கு E.O வேலை கொடுத்த முதல் அரசு உங்களுடையதுதான்’’ என்றேன்.
உங்களுக்கு அவருடைய இயல்பு தெரியுமே! இதனை விளக்கமாக சொல்ல முடியுமா என்று கேட்டார்.
திருவண்ணாமலையில் உள்ள இடும்பனார் கோயில், இளையனார் கோயில் மற்றும் வால்மீகி கோயில் இருந்திருக்க வேண்டும். ஆனால் இப்போது இல்லை. அங்கு ஒரு ஹோட்டலும், ஷாப்பிங் காம்பௌக்ஸ் மட்டுமே உள்ளது.
ஆனால் உங்கள் அரசு அங்கு ஒரு E.Oவை வேலைக்கு அமர்த்தியுள்ளது என்று சொன்னேன்.
ஆல்ரைட் என்று சொல்லி விட்டு சென்றார்.

செயல் திறன்!

மறுநாள் காலை சட்டமன்றத்தில் என்னை சந்தித்த ஜெயலலிதா, நீங்கள் கூறியது சரி. அங்கு கோயில்கள் இல்லை. உடனடியாக அந்த கோயில்களை கட்டுமாறு உத்தரவிட்டுள்ளேன். மகிழ்ச்சியா என்று கேட்டார். அவர் கூறிய கோவில் இன்னும் கட்டப்படவில்லை என்பது தான் வருத்தம். இனி யாருக்கு அவரது ஆளுமை வரும்.
அதனால் நான் சொல்வது இதுதான். ஒவ்வொரு இந்துவின் மனதிலும் தனது கோயில் சுத்தமாக இருக்க வேண்டும். ஆறு கால பூஜைகள் நடக்க வேண்டும். ஆகம விதிகள் காப்பாற்றபட வேண்டும். அப்போதுதான் நாடு சுபிட்சமாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
கோயில் என்றால் கதாகாலட்சேபம், பாட்டு கச்சேரி, ஓதுவார், நாதஸ்வரம், தவில், தாரை தப்பட்டை திருவிழா என்றிருக்க வேண்டும் எனும் தாபம் உள்ளது.
ஆனால் நம்பி வாக்களித்த திராவிட அரசு, இந்துக்களுக்கு பரிசாக ஏமாற்றத்தையும், வஞ்சகத்தையுமே அளித்துள்ளனர்.
இனியும் பொறுப்பதில்லை என்று எண்ணியே ‘‘இந்து ஆலயங்கள் மீட்பு’’ என்ற இயக்கத்தை ஆரம்பித்துள்ளேன்.

இந்த இயக்கத்தின் மூலமாக என்ன  சாதிக்க முயல்கிறீர்கள்?

உண்மையை மறைக்காமல் கூறுகிறேன். இப்போது மட்டும் எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்திருந்தால், இந்நேரம் என்னை கூப்பிட்டு பேசியிருப்பார்.
ஒத்த சிந்தனை உள்ளவர். ஆன்மீகவாதி, தெய்வசக்தியை உணர்ந்தவர்.

குன்றகுடி அடிகளார் குழு

1977ம் ஆண்டில் எம்.ஜி.ஆர் இந்து கோயில் சொத்துக்களை முறையாக பராமரிக்க வேண்டி குன்றகுடி அடிகளார் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார்.
ஆன்றோர்களும், சான்றோர்களும் கொண்ட ஒரு வாரியம் தான் இந்து கோயில் சொத்துக்களை பராமரிக்க வேண்டும் என முடிவும் எடுக்கப்பட்டது. ஆனால் துரதிருஷ்டவசமாக அது நடக்க முடியாமல் எம்.ஜி.ஆர் மீண்டு வரவேயில்லை.

எங்கள் கோரிக்கையும் இந்து  அறநிலையத் துறை சட்டமும்!

இந்து கோயில் சொத்துக்களாகிய நிலங்கள், நகைகள், கடவுள் சிலைகள், நவரத்தினங்கள், உண்டியல் பணம் என அனைத்தும் முறையாக ஒவ்வொரு கோயிலிலும் பதிவேட்டில் ஏற்றப்பட வேண்டும்.
இதனையே அறநிலைய சட்டம் 29 சொல்கிறது.
முறையாக பராமரிக்கப்பட்டால் நமது இந்து கோயில் வருமானம் வருடம் 8000 கோடிகளை தாண்டும். எவ்வளவு இந்து குடும்பங்களுக்கு நம்மால் உதவ முடியும். ஏன் இந்து மக்கள் அநாதைகள் போல பிறரிடம் கையேந்தி மதம் மாறி வாழ வேண்டும்.
கோயில் வருவாயில் 18% மேல் இந்து அறநிலையத் துறையினர் சம்பளமாகவோ இதர செலவுகளுக்காகவோ எடுத்துக் கொள்ள கூடாது.
அறநிலைய சட்டம் 34ன்படி, எந்த ஒரு கோயில் சொத்தையும் எந்த அதிகாரியும் 5 வருடத்திற்குமேல் குத்தகைக்கு விட முடியாது. 5 வருடங்களுக்கு மேல் என்றால் அரசு அனுமதி தேவை.
இவை தான் எங்கள் கோரிக்கைகளும்! இந்து கடவுள் நம்பிக்கை கொண்ட நாணயமான அறநிலையத் துறையை தான் தேவை என்கிறோம்.

நமது நாடு ‘செக்யூலர்’ அதாவது மதசார்பற்ற நாடு எனும்போது, ஏன் இந்து கோயில்களில் மட்டும் அரசுக்கு அதிகாரம்?!

1925ம் ஆண்டு முதலாகவே இந்து கோயில் சொத்துக்கள் அரசு வசம் போய்விட்டன.
2000 வருடங்களாக தங்க மயில் என்று அழைக்கப்பட்ட இந்தியாவை சுரண்டி தின்ற இஸ்லாமியரும், கிறிஸ்துவ ஆங்கிலேயரும் நமது கோயில்களை தான் கொள்ளையடித்தனர். இப்போது இருப்பதும் எஞ்சியவை தான்.
உச்சநீதிமன்றம் கூறுகையில் இந்து அறநிலையத் துறை என்பது அரசியல் சாஸனத்திற்கு எதிரானது. இது மாநில உரிமையாகவே பார்க்கபடுகிறது. அரசுக்கு ஆகமவிதிகளில் நுழைய அதிகாரமே கிடையாது. பராமரிப்பில் குறைபாடு இருந்தால் மட்டுமே உள்ளே செல்ல முடியும். அதனை சீர்படுத்தி 3 ஆண்டுகளுக்குள் திருப்பி கொடுத்து விடவேண்டும்.
முக்கியமாக E.O எனப்படும் ஆபிசரை நியமிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு கிடையாது என விளக்கமாகவே உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

தற்போது கிளம்பியுள்ள கோயில் சிலை கடத்தல் விவகாரம் பற்றிய உங்கள் கருத்து?

நான் என்ன சொல்ல முடியும். பக்தர்கள் எங்கள் உள்ளம் புண்பட்டிருக்கிறது.
அரியலூக்கு அருகே உள்ள சுதாமல்லி நடராஜர் சிலையும், சுதாமல்லி சிவகாமி சிலையும் நியூயார்க் மியூசியமில் எப்படி வந்தது? அதன் மதிப்பு சுமார் 60 கோடிகள்! திருட்டு போயுள்ள பெரும்பாலான சிலைகள் கருவூலத்திலிருந்து களவாடப்பட்ட உற்சவர் சிலைகள் தான்.
கோயில் சிதிலமடைந்த நிலையிலும் யாருமே பூஜை பண்ணாத கோயிலிலும், கோயிலே இல்லாத இடங்களிலும் உள்ள மூலவர் சிலைகள் சிலவும் இப்படி களவாடப்பட்டுள்ளன.
ஒரு கூட்டத்தில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறுகையில் ‘‘சில கடவுள் சிலைகள் மீட்கப்பட்டாலும், அது எந்த கோயிலைச் சார்ந்தது என்ற விவரம் தெரியாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. கோயில் பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்பட்டு இருந்தால் இந்த அவலம் இருக்காது அல்லவா?’’ என்று கூறியுள்ளார்.

இந்து அறநிலையத் துறையினர் உங்களுக்கு எதிராக உண்ணவிரதம் இருந்தது குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

தமிழ்நாடு அறநிலையத்துறை என்று தானே பேனர் வைத்திருந்தனர். அதில் ‘இந்து’ என்ற வார்த்தையே இல்லையே!
பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் ஆலயத்தின் 300 கோடி மதிப்புடைய கடவுள் சிலைகளை கடத்திய வழக்கில், இந்து அறநிலைய அதிகாரி கஜேந்திரனை கைது செய்தது போலீஸ்.
உடனடியாக இந்த அறமற்ற துறையினர் தர்ணா செய்தார்கள்.
பழனிகோவில் ஐம்பொன் சிலை மோசடி வழக்கில் ஸ்தபதி முத்தையா மற்றும் அறநிலைய துறை அதிகாரி ராஜாவும் கைது செய்யப்பட்டபோதும், இதே அறநிலையத் துறையினர் ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா செய்தார்கள்.இந்து அறநிலையத் துறை அதிகாரி கவிதா கைது செய்யப்பட்டபோது தர்ணா, ஆர்ப்பாட்டம்!
தற்போது அறநிலையத் துறை உயர்அதிகாரி திருமதி.ஜெயா அவர்கள் நீக்கப்பட்டு திரு.ராமச்சந்திரன் அவர்கள் வந்துள்ளார். ஆனால் இந்த அறநிலைய ஊழியர்கள் அவரை ‘கேரோ’ செய்து விரட்டி உள்ளனர். தற்போது அறநிலைய துறை, தலைவர் இல்லாமல்தான் இருக்கிறது!

இந்து அறநிலையத் துறை போராட்டத்தில் சுப.வீரபாண்டியனுக்கும், தி.க வழக்கறிஞர் அருள்மொழிக்கும் என்ன வேலை?

அதைதான் பொதுமக்களும் கேட்கிறார்கள். இந்து அறநிலைய சட்டம் 10ன் படி இந்து அறநிலைய துறையில் வேலை செய்யும் கீழ்மட்ட பணியாளர் முதல் உயர்மட்ட அதிகாரி வரை, முழு இந்துவாக, கடவுளை கும்பிடுபவராக இருக்க வேண்டும் என்று சொல்லுகிறது.
ஆனால் ஏனோ கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்களுக்கு கோயில் சொத்துக்களுக்கு கணக்கு, கோயில் சொத்துக்களுக்கு பாதுகாப்பு என்றவுடன் பொத்துக் கொண்டு வருகிறது.
ஆசை வெட்கமறியாது என்பதை நீங்கள் அவர்கள் பேசியுள்ள பேச்சிலிருந்து அறியலாம்.
இந்து மக்கள் இனி ஏமாறத் தயாராக இல்லை என்பதை அரசு புரிந்து கொண்டு விரைந்து செயல்பட்டு, நமது தமிழகத்தின் ஆன்மீக பாரம்பரியத்தை காக்கும்படி கேட்கிறேன்.
உங்களது இந்த அரிய சேவையில் தமிழக மக்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்பதை மக்களிடையே உங்களுக்கான வரவேற்பிலிருந்தும், எழுச்சியிலிருந்தும் தெரிகிறது. சுதேசியின் வாழ்த்துக்கள்!

(Visited 56 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *