சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

ஒரு மாட்டை தத்து எடுத்து நாம் வளர்த்தால், ஏழு பிறவி பாவம் தொலைந்து போகும் என்கிறது வேதம்..

   எத்தனை பிறவியின் புண்ணியம் ஒன்று சேர்ந்திருந்தால் 500 க்கும் மேலான மாடுகளை, கடந்த 40 ஆண்டுகளாக தத்து எடுத்து பராமரித்து வருகிறார் டாக்டர் சாதனா ராவ்!!
   என்னை பற்றியோ, என் படிப்பை பற்றியோ எழுத வேண்டாம் என்பதே என் வேண்டுகோள். என் குழந்தைகளை பற்றி எழுதுங்கள். அன்பையும், ஆதரவையும் தேடி திரியும் இந்த வாயில்லா ஜீவன்களை பற்றி எழுதுங்கள் என்று மிக மென்மையாக கூறும் சாதனா ராவின் அன்பு கனிந்த முகம் சுடர் விடுகிறது
   மாடுகளும், கன்றுகளும், நாய்களும், சில பறவைகளும், இளைப்பாறிக் கொண்டிருக்கும் இடத்தின் நடுவில் மேஜையில் அமர்ந்து கொண்டு, நம்முடன் உரையாடிக் கொண்டிருக்கும் சாதனா அம்மாவின், கைகள் மட்டும் வாழைபழங்களை, மாடுகளுக்கு வீசிக் கொண்டே இருக்கிறது.
   உட்காந்திருக்கும் இடத்திற்கு, அடுத்த அறையில் தான் தங்கிருக்கிறார் சாதனா ராவ் அவர்கள்.
   அன்பே கனிந்து சாதனா ராவ் உருவமாக மாறி வந்து விட்டதோ என்று வியக்க வைக்கிறது அவர்களின் ஆத்மார்த்தமான பிணைப்பு.

சாதனா மேடம்: எப்படி நீங்கள் இந்த கோசாலா பராமரிப்புக்கு வந்தீர்கள்!! உங்கள் கதையை சொல்லுங்க ப்ளீஸ்.

என் கதைல என்னம்மா இருக்கு… வேறு இடத்திற்கு கொண்டு செல்ல முடியாத சில குழந்தைகளுக்கு தங்க இடம் தேடி அலைந்து கொண்டு இருக்கிறேன். எல்லோரும் என்னை பேட்டி எடுக்கும் போது என்னுடைய தியாகத்தை பற்றி பேசுவார்கள். நம் மனசுக்கு பிடித்ததை நாம் பண்ணும் போது அது எப்படி தியாகம் ஆகும்??
கோசாலா எங்க ரத்தத்தில் ஊறியது. என் தாத்தா கோசாலா வைத்திருந்தார். அப்போதிலிருந்தே எனக்கு இந்த கோசாலா மீது மாறாத அன்பு தொடங்கி விட்டது.

இப்போது இருக்கும் இந்த நீலாங்கரை கோசாலாவுக்கு என்ன ஆகிவிட்டது??

நாங்கள் 16 வருடங்களுக்கு முன்னர் இங்கு சுமார் 100 மாடுகளுடன் வந்த போது, ஒரு வீடு கூட இல்லை. ஆனால் இன்று நீலாங்கரை கபாலீஸ்வரர் தெரு என்பது பேர் சொல்லக் கூடிய இடமாகி விட்டது.
500 மாடுகளை பராமரித்து வரும் தொழுவம், வீடுகள் மத்தியில் இருப்பதை, அங்கு குடியிருப்பவர்கள் ஆட்சேபிப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது
எனவே நாங்கள் கடந்த 7 வருடங்களாக மெதுவாக நகரத் தொடங்கி விட்டோம். திருவள்ளு£ரிலிருந்து சுமார் 12 கி.மி தள்ளி உள்ள ‘வெங்கடாபுரத்தில்’ 4 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய ‘‘முதியோர் இல்லம்’’ அமைத்து விட்டோம்.
300க்கும் மேலான மாடுகளை இப்போது அங்கு அனுப்பி விட்டோம். அந்த இடத்தை எங்களுக்கு கொடுத்து உதவிய கருணை உள்ளத்திற்கு நன்றி சொல்ல வேண்டும் தினமும்.

இங்கே உள்ள இந்த மாடுகளும், கன்னுக்குட்டிகளும் கூட அங்கு போக உள்ளனவா??

இங்கு இப்போது சுமார் 50க்கும் மேலான மாடும் கன்றுகளும் உள்ளன.
வாய்பேசாத உயிரினங்களுக்கான அன்பு புகலிடம் தான் எங்கள் காப்பகம். முக்கியமாக வயதாகி விட்ட மாடுகளுக்கான முதியோர் இல்லம்.
ஒரு மாடு தனது 3 வயது தொடங்கி கன்று ஈன்று பால் தர துவங்கும். ஒரு மாட்டின் வயது சுமார் 25 வருடங்கள் தான். இதில் 3 முதல் 15 வருடங்கள் வரை பால் கொடுக்கும். 5 கன்றுகள் வரை தரும்.
நன்றி மறந்த மக்கள், பால் தராத, வயதாகி விட்ட மாடுகளை, அடி மாட்டுக்கு, கசாப்பு கடைக்கு விற்று விடுகின்றனர்.
மாடு வதைப்படுவதை தடுக்கும் ஆர்வலர்கள், மாடுகளை கேரளாவிற்கு கடத்தி செல்லும் போது வழி மறித்து, போலிசில் ஒப்படைத்து விடுவார்கள்.
நீதிமன்றம் எங்களைப் போன்ற கோசாலையில் அந்த மாடுகளை பராமரிக்க அனுமதி கொடுக்கும். அப்படி வரும் மாடுகள் தான் இவை.
மேலும் இப்போது இங்குள்ள சில மாடுகள் மற்றும் கன்றுகள், விபத்தில் சிக்கி மருத்துவ உதவி தேவைப்படும் நிலையில் உள்ளன.
சில மாடுகள் மிகவும் முதுமையடைந்து விட்ட நிலையில் மருத்துவ உதவியுடன் வாழ்ந்து வருகின்றன. அதனால் மருத்துவ உதவி அருகில் இருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. எனவே பழகிய இடத்திற்கு அருகிலேயே, சிறிய அளவு இடம் பார்த்து வருகிறோம்.

ஏதேனும் பார்த்து இருக்கிறீர்களா??

பலர் எங்களுக்கு ஆர்வமுடன் கொடுக்க முன்வந்தாலும், மாட்டு தொழுவமா என்று தெருவாசிகள் இடம் கொடுக்க மறுக்கிறார்கள்.
திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோவிலின் அருகே கோவில் நிலம் உள்ளது. இந்து அறநிலையத் துறைக்கு மனு எழுதி கேட்டு கொண்டுள்ளோம்.
முதலமைச்சர் அம்மாவின் கருணைப்பார்வை உலகையே காக்கும் இந்த கோமாதாக்களின் மேல் படவேண்டும் என்று அந்த பெருமாளை வேண்டுகிறேன்.
70 வயதாகி விட்ட போதும், ஒரு நாள் விட்டு ஒரு நாள், நான் திருவள்ளு£ர் கோசாலாவை நேரிடையாக சென்று தான் பராமரித்து வருகிறேன்.

500 மாடுகள் என்றால் எப்படி கட்டுபடி ஆகிறது செலவு?

அன்பே வாழ்நாள் கொள்கையாக கொண்டவர்கள் ஜெயின் சமூகத்தினர். இந்த மாடுகளுக்கு வேண்டிய உணவு, மருத்துவ செலவு, பராமரிப்பு செலவு, சம்பளம் என அனைத்தையும் ஜெயின் சமூகத்தினரின் இரண்டு கோசாலா அமைப்புகள் தான் ஏற்று வந்தன.
ஜெயின் சமூகத்தினரின் மிகப்பெரிய கொடை எது தெரியுமா? அவர்கள் ஏதோ பணத்தை மட்டும் கொடுத்து விட்டு செல்வதில்லை.
   ஞாயிற்று கிழமைகளில், தங்கள் குடும்பத்துடன் வந்து, மாடுகளுக்கு தங்கள் கையால் உணவு கொடுத்து மகிழ்வார்கள். வேறுபல சேவைகளையும் செய்வார்கள்.
நீலாங்கரையில் இருந்து, வெங்கடாபுரம் சென்றவுடன் இந்த ஜெயின் கோசாலா சமிதியினருக்கு 72கி.மி வாராவாரம் வந்து போக முடியாது என்பதால் ஆவடியில் உள்ள ஒரு கோசாலாவுக்கு, சேவை செய்யத் தொடங்கி விட்டனர்.
அதனால் ஒரிரு மாதங்கள் எங்களுக்கு உணவு தட்டுபாடு வந்துள்ளது. இருப்பினும் இன்னுமொரு ஜெயின் சமூக கோசாலா சமிதியான, ஷாம்பவநாத் சேவா மண்டல் எங்களுக்கு உதவி வருகிறது.
இந்த அரசு மூப்படைந்த மாடுகளின் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.
ஒவ்வொரு கோயிலுக்கும் கோசாலா என்பது அவசியம். அதே போல ஒவ்வொரு நகருக்கும், மேய்ச்சல் நிலங்களும் உண்டு.
பெற்ற தாயும், பிறந்த பொன்னாடும் நற்றவை ஆகினும் நனி சிறந்தனவே என்பர்.
நமது தாயை போல, தனது ரத்தத்தை பாலாக்கி நமக்கு தரும் இந்த கோமாதாவை, கொல்வது எவ்வளவு கொடூரமானது!!
பசுக்களை தெய்வமாக கொண்டாடிய நாம் இன்று இந்த கலிகாலத்தில், மாட்டிறைச்சியில் உலகில் முதல் இடத்தில் இருக்கிறோம் என்று கேட்கும் போது என் மனம் இரும்பென கனக்கிறது.
மாட்டின் கழுத்து பகுதி மிகவும் பெரியது. மிகவும் உறுதியானது. அதன் கழுத்தை அறுத்து கொல்வது என்றால், அதற்கு எவ்வளவு வலியும் வேதனையும் இருக்கும் என்று நினைத்து பார்த்தால், எனக்கு கண்ணீர் நிற்பதில்லை.
அந்த கோமாதாக்கள் கடைசி தருணங்களில் என்ன நினைக்கும்?? சே!! நன்றி கெட்ட மாந்தரடா… என்று தானே..!! ஜெயின் சமூகத்தினரை போல மற்றவர்களும் தாங்கள் குழந்தைகளுடன் கோசாலாவிற்கு வந்து சேவை செய்ய வேண்டும். அப்போது மட்டும் தான் இந்த மிருகவதை நிற்கும்.

உங்கள் திட்டங்கள் என்ன?

கோசாலா நடத்துவது பற்றி ஒரு பயிற்சி பள்ளி அவ்வப் போது நடத்த வேண்டும் என்பது என் விருப்பம். ஏனென்றால், இந்த குழந்தைகள் மிகவும் அறிவுள்ளவை, அன்பானவை, நம்மிடம் கருணையை, அன்பை எதிர்பார்த்து தான் நிற்கின்றன. எங்களிடம் இருந்த ஒரு மாட்டை, எங்களின் ஆதரவாளர் ஒருவர் வாங்கி சென்றார். அங்கு சென்றவுடன் அது கண்ணீர் விட்டுக் கொண்டே இருந்ததாம் சுமார் ஒரு மாதம்.
அதனால் சில வேளையில் நான் நினைக்கிறேன். கோசாலா பராமரிப்பு என்பது ஏதோ ஒரு பூர்வ ஜென்ம பிணைப்பு என்று. எனக்கு கடவுள் கொடுத்த வரம் இது. நமக்கு உதவிய மாடுகளின் இறுதி காலம் அன்பும், ஓய்வும், அமைதியும் நிறைந்ததாக இருக்கு வேண்டும். அந்த இடம் தேடி செல்வதே என் பாதை!
ஒரு நாட்டின் மாண்பும் தார்மீக எழுச்சியும் எதில் உள்ளது என்றால், அந்த நாட்டு மக்கள், தங்கள் விலங்குகளை பராமரிக்கும் விதத்தில் தான் என்று அன்று கூறியவர் காந்தி.
தனது கடைசி குந்துமணி தங்கத்தையும் அடகு வைத்து, தன்னுடைய அருமை குழந்தைகளுக்கு உணவு தந்து கொண்டிருக்கும் இந்த அன்பே உருவான அன்னை அடுதது என்ன என்ற கேள்வியை சட்டை கூட செய்யவில்லை.
   சமூக அந்தஸ்துடன், வசதியான நிலையில், நன்கு படித்தும், அன்பே சிவம் என்று, தன் வாழ்நாள் முழுவதும் மாட்டுத் தொழுவத்திலேயே கழித்து, இன்று முதுமை, மிரட்டும் நேரத்திலும், குழந்தையின் நிர்மலமான மனதுடன் தனது முதியோர் இல்ல வாசிகளின் மேல் தீராத அன்புடனும் வாழும் இந்த அரிய வகை அன்பு பெண்மணி, சாதனா ராவ் அவர்களுக்கு எல்லாம் வல்ல அந்த கடவுள், நல்ல ஆரோக்கியத்தையும், உற்சாகத்தையும் அவர் கேட்கும் அனைத்து வரங்களை யும் அருள வேண்டி பிரார்த்திக்கிறேன்.
இந்த கோசாலாவிற்கு உதவ விரும்பும் அன்புள்ளங்கள் தயவு செய்து தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

(Visited 106 times, 2 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *