
காவிரி நதிக்கரையில் கவி பாடும் கல் நாதஸ்வரம்!
சாதாரண மர நாதஸ்வரத்தை போல் சுமார் ஆறு மடங்கு எடையுடையது. (மரத்தால் ஆனா நாதஸ்வரத்தின் எடை சுமார் 600 கிராம் )3.600 கிலோ கிராம் எடையுள்ள இந்த நாதஸ்வரம் சுமார் இரண்டடி நீளமுடையதாகவும் வட இந்தியக் குழல் இசைக்கருவியான ஷெனாய் மாதிரி அமைப்பில் உள்ளதாகும்.
மூவாயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட தமிழர் இசையானது அதிகாலை துயில் எழுப்புவதில் தொடங்கி, நள்ளிரவு உறங்கும் காலம் வரை தமிழர் மரபாகும். பருவத்துக்கு ஏற்ற கருவிகளை உருவாக்கி அதில் உருவாகும் இசையினை இசைத்து இறைவனை வணங்கினர் ஆதி தமிழர்கள் என்பது வரலாறு. அவற்றில் முதன்மையானது
ஆதி இசைக்கருவியான இந்த நாதஸ்வரம், ஆச்சா என்ற மரத்தில் செய்யப்படுகிறது. இம்மரம் மிகவும் பழய மரமாக இருப்பது அவசியம் அப்படி பல்லாண்டுகள் ஆன ஆச்சா மரமே நாதஸ்வரம் செய்யத் தகுந்தது. மரத்தின் உடலில் உள்ள ஈரம் உலர்ந்தால் மட்டுமே ஆச்சா மரம் உறுதிப்படும். சுருக்கமாக சொன்னால் வைரம் பாய்ந்த பாறையை போன்ற இறுகிய தன்மையுடையதாக இருக்க வேண்டும். மரத்தில் செய்வதற்கும் முந்தைய ஆதிகாலத்தில் இக்கருவியை கருங்கல்லில் செதுக்கி வாசித்திருக்கலாம் என்பது இசை ஆராய்ச்சியாளர்களின் கணிப்பு. இதற்குச் சான்றாக, ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் கல் நாதஸ்வரங்கள் கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் ஆலயத்திலும் மற்றொரு கல் நாதஸ்வரம் தூத்துக்குடி மாவட்டம் நவ திருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார் திருநகரியில் உள்ள ஆதிநாதர் ஆழ்வார் கோயிலிலும் ஒரு கல் நாதஸ்வரம் உண்டு. இது சுமார் 350 ஆண்டு களுக்கு முன் அரசாண்ட கிருஷ்ணப்ப நாயக்கர் என்ற மன்னரால் இக்கோயிலுக்கு வழங்கப்பட்ட இந்த கல் நாதஸ்வரம் இப்போது வெறும் காட்சிப்பொருளாக மட்டுமே இசைக் காமல் பாதுகாக்கபட்டு வருகிறது.
கல் நாதஸ்வரத்தின் உடல்
அமைப்பு பாகங்கள்
முகப்பில் உள்ள முக்கிய பாகமான சீவாளி, காவிரிக்கரையில் விளையும் ஒரு நாணல் புல்லில் செய்யப்படுகிறது. கல் நாதஸ்வரத்தில், உலவுப்பகுதி மூன்று உறுதியான கருங்கற்களால் தனித்தனியாகச் செய்யப்பட்டு வெண்கலப்பூணல் இணைக்கப்பட்டு வெங்கல அனசுடன் மிக நேர்த்தியாக உருவாகி உள்ளது இந்த கல் நாதஸ்வரம்.
கல் நாதஸ்வர ஸ்வரங்கள்
மரத்தால் செய்யப்படும் நாதஸ்வரங்களில் ஏழு ஸ்வரங்கள் இருக்கும் கல் நாதஸ்வரத்தில் 6 ஸ்வரங்கள் மட்டுமே இருக்கும். அதனால் சண்முகப்ரியா ராகத்தில் விளையாட இது நேரமா எனும் கீர்த்தனையும் கல்யாணி போன்ற பிரதி மத்திம ராகங்கள் மட்டுமே வாசிக்க முடியும். இதில் 3முதல் 3- 1/2 கட்டை சுருதியில் வாசிக்க இயலும் மேலும் சங்கராபரணம், கரகரப்பிரியா, தோடி போன்ற சுத்த மத்திம ராகங்களை இந்த நாதஸ்வரத்தால் வாசிக்க முடியாது எனவும் முழுமையாகவும் அடர்த்தியாகவும் மூச்சை உள்ளே செலுத்தினால் மட்டுமே இதில் நல்இசை கிடைக்கும் எனவும் பயிற்சி இருந்தால் மட்டுமே இதை வாசிக்க முடியும் என்கிறார் வித்வான் சாமிநாதன் பிள்ளை.
குடந்தையில் வாழ்ந்து மறைந்த நாதஸ்வர மேதை கும்பகோணம் பக்கிரி சாமி பிள்ளை சுமார் 60 வருடங்களுக்கு முன் கும்பேஸ்வரர் ஆலய முக்கிய விழாக்களில் இந்த கல் நாதஸ்வரத்தை வாசித்துள்ளார். அவருக்கு பின் திருக்கோவில் நாதஸ்வர வித்வானாக குஞ்சுதபாதம் பிள்ளை 30 வருடங்களுக்கு மேல் வாசித்து வந்துள்ளார் அவருக்கு பின் இப்போது வரை வாசித்து வருபவர் சுவாமிநாதன் பிள்ளை ஆவார்.
இக்கோயிலில் ஆஸ்தான நாதஸ்வர கலைஞராக 27 வருடங்களாக இறை பணியாற்றி வரும் திரு. சுவாமிநாதன் பிள்ளை 45 வருடங்களாக நாதஸ்வரம் வாசித்து வருகிறார். இவர், நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் சிங்கார வேலன் திருத்தல தேவஸ்தான இசைப் பள்ளியில் பணியாற்றி வந்த புகழ் பெற்ற நாதஸ்வர வித்வான் கலைமாமணி கோட்டூர் என்.ராஜரத்தினம் பிள்ளையின் சிஷ்யர் ஆவர்.
சுமார் 15 வருடங்களுக்கு முன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மனைவி திருமதி. கமலா அவர்கள் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்திற்கு வந்த போது கல் நாதஸ்வரத்தினை இசைக்க சொல்லி கேட்டு சென்றார் என்பதையும் அதன் பின் ஒரு விழா காலத்தில் நடைபெற்ற சப்தாவர்ணம் எனும் திருநாள் விழாவில் திருக்கோவில் இசைக்கலைஞர் திரு என். சாமிநாதன் இதனை வாசித்தார்.
அவரே மறுபடியும் 29 செப்டம்பர் 2017 அன்று ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு கல் நாதஸ்வரத்தில் அம்சநாதம் ராகத்தில் பண்டுரோதி கீர்த்தனை சண்முகபிரியா ராகத்தில் விளையாட இது நேரமா தர்மவதி ராகத்தில் பரந்தவாதி எனும் கீர்த்தனை ஹேமாவதி ராகத்தில் ஸ்ரீ காந்திமதி கீர்த்தனை ஆகிய கீர்த்தனைகளை ஒரு மணி நேரம் வாசித்தார் என்று திருக்கோவில் நிர்வாக அதிகாரி திருமதி.கவிதா தெரிவித்தார்.
நாதஸ்வரத்தின் பிறப்பின் தடம்
தென்னிந்தியாவில் இது ஒரு மங்கலமான இசைக்கருவியாகக் கருதப்படுவதனால், பொதுவாக எல்லாவகையான நன் நிகழ்வுகளிலும் இதற்கு ஒரு இடம் உண்டு.
இவ்வாத்தியம் முன்பு தென்னிந்தியாவிலுள்ள நாகூர், நாகபட்டிணம் முதலிய ஊர்களில் உள்ள வர்களான, நாகசர்பத்தைத் தெய்வமாகப் பூசித்த நாகர் என்ற இனத்தவரால் வாசிக்கப்பட்டு வந்தது. நாகத்தினை போன்ற உருவத்தைப் போல் நீண்டிருந்ததின் காரணமாகவும் நாதசுவரம் என்னும் பெயர் ஏற்பட்டது. இதனுடைய இனிமையான நாதம் காரணமாக பிற்காலத்தில் இது நாதஸ்வரம் என அழைக்கப்பட்டது என்பது வரலாறு.
17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாத சங்கிரகம் என்னும் இசை நூல் துளைக் கருவிகள் பற்றிக் கூறுகின்ற போது இக் கருவியையும் நாகசுரம் என்ற பெயரில் பட்டியல் இடுகின்றது. இதுவே தற்போதைய நிலையில், கிடைக்கின்ற முதல் வரலாற்றுக் குறிப்பு எனலாம்.
இதனின் அமைப்பு
இது வட இந்தியக் குழல் இசைக்கருவியான ஷெனாய்போன்றது ஆகும். எனினும் இது ஷெனாயை விட அளவில் பெரியது. இது நாதசுவரத்தின் நீளம் சுமார் 2.5 அடி.
இக்கருவியின் மேல் பகுதியை உளவு என்றும், கீழ்ப்பகுதியை அணசு என்றும் கூறுவர். உளவுப் பகுதியில் 12 துளைகள் அமைக்கப்படும். இக்கருவியின் அளவிற்கேற்ப, முகவீணை, திமிரி நாயனம், பாரி நாயனம், இடைப்பாரி நாயனம், மத்திம சுருதி நயனம் என்ற பெயர்களுடன் வழங்கி வருகின்றனர்.
நாதசுவரம் குழல், திமிரு மற்றும் அனசு எனும் மூன்றுநடமாட்டம் பாகங்களைக் கொண்டது. இது ஏறத்தாழ கூம்பு வடிவிலான மரமாகும். கீழ் பகுதியிலிருந்து மேல் நோக்கி சிறிது சிறிதாக குறைந்து இவ் வடிவத்தினை இது பெறுகின்றது. மேல் பகுதி வாய் வைத்து ஊதுவதற்கு ஏற்ற உலோக உருண்டை அமையப்பெற்று இருக்கும். பல ஓய்வு நாணல்களும் நாதஸ்வரத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும்.
அவற்றுடன் சிறு தந்தத்தினாலான கூம்பு இருக்கும் இவை நாணலினில் உள்ள எச்சில் மற்றும் தூசு குப்பைகளை நீக்கி சரியான காற்று போகும் அளவுக்கு திருத்த கொடுக்கப்பட்டிருக்கும். இவற்றுடன் ஒரு உலோக மணியும் பொருத்தப்பட்டிருக்கும். பாரம்பரியமாக நாதஸ்வரத்தின் உடல் வன்மரத்தினால் செய்யப்பட்டது.
ஆனால் தற்போது மூங்கில், சந்தனமரம், தாமிரம், பித்தளை, கருங்காலி மற்றும் ஐவரி ஆகியவற்றிலும் செய்து பயன்படுத்தப்படுகின்றன. நாதஸ்வரத்தில் ஏழு விரல் துளைகளும், ஐந்து கூடுதல் ஓட்டைகளும் போடப்பட்டிருக்கும். ஐந்து கூடுதல் ஓட்டைகளையும் தேவையானபொழுது பயன்படுத்திக்கொள்ள மெழுகு கொண்டு அடைத்திருப்பர். பான்சூரி புல்லாங்குழல் போன்று இரண்டரை எல்லை ஓட்டைகளும் போடப்பட்டு இருக்கும்.
சீவாளி
நாதசுவரத்தின் மேல் பகுதியில் சீவாளி என்ற கருவி பொருத்தப்படும். ஜீவ வளி என்பதுதான் சீவாளியாகியிருக்கிறது. ஜீவன் என்றால் உயிர். வளி என்றால் காற்று. உடலாகிய நாதஸ்வரத்திற்கு காற்றின் மூலம் சீவாளி உயிர் கொடுக்கிறது
சாம வேதமே இசையின் அடிப்படை என்று வேத விற்பன்னர்கள் கூறுவர். ஸ,ரிக,ம,ப, த,நி ஆகிய ஏழு ஸ்வரங்களும் ஆகாயத்திலிருந்து ஒலிக்கக் கேட்டு பூமியில் இசையின் ஆதாரமாக வடிவெடுத்தது என்று மஹாபாரதம் கூறும்.ஒவ்வொரு ராகத்திற்கும் ஒரு தேவதை இருப்பதாக நமது பண்டைய இசை நூல்கள் கூறுகின்றன.