சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

‘சங்கட’ பாபு நாயுடு

இந்தியாவின் இப்போது பரபரப்பான அரசியல்வாதி யார்? 5 மாநில சட்டசபைத் தேர்தல்களை சந்திக்கும் பாஜ தலைவர் அமித்ஷா? பிரதமர் மோடி? காங்கிரஸ் தலைவர் ராகுல்? சோனியா? இவர்களில் யாருமே இல்லை. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுதான். நேர்மை மற்றும் டிஜிட்டல் நிர்வாகத்துக்கு பெயர் பெற்றவர் என்று அறியப்பட்ட சந்திரபாபு நாயுடுவின், சமீப நாட்களின் அரசியல் நகர்வுகள் தேசிய அளவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2014ம் ஆண்டு லோக்சபாத் தேர்தலின்போது, பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பிடித்திருந்த சந்திரபாபு நாயுடு, பிரதமர் மோடியிடமும் மற்றும் மத்திய அரசில் அதிக செல்வாக்கு கொண்ட தலைவராக வலம் வந்தார். ஆந்திராவில் இருந்து, தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்படதைத் தொடர்ந்து, ஆந்திராவுக்கான புதிய தலைநகர் அமராவதியை உருவாக்கும் நோக்கில், மத்திய அரசிடம் அதிகளவில் நிதி உதவி பெற்று, கட்டுமானத்தைத் தொடங்கினார்.
தன் மாநிலத்துக்குத் தேவையான நிதி உதவியை பெறும் வரையிலும், அவர் மத்திய அரசிலும், பிரதமர் மோடியிடமும் அதிகளவு இணக்கம் கொண்டிருந்தார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஆதரவு

பிரதமர் மோடி கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி அறிவித்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையை, ‘‘தேசத்தின் வளர்ச்சிக்கான அற்புதமான ஒரு நடவடிக்கை’’ என்று அறிவித்த முதல் முதல்வராக சந்திரபாபு நாயுடு இருந்தார். அத்துடன், மத்திய அரசு 2017ம் ஆண்டு ஜூலையில் ஜிஎஸ்டியை அமல் படுத்தும்போது, அதன் அமலாக்கக் குழுவின் ஒரு அங்கத்தினராகவும் சந்திரபாபு நாயுடு வலம் வந்தார். இப்படி பிரதமர் மோடியின், ஒவ்வொரு நடவடிக்கையின்போது ஆதரவாக குரல் கொடுத்த சந்திரபாபு நாயுடு, அதற்கு தகுந்தார்போல் தன் மாநிலத்துக்கான சிறப்பு நிதியையும் பெற்றுவந்தார்.
ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிந்த நிலையில், ஆந்திராவுக்கான சிறப்பு அந்தஸ்து கேட்டு, கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் போராட்டங்கள் நடந்தது. இதை அறிந்தபோது, ‘‘ஆந்திராவுக்க சிறப்பு அந்தஸ்து வழங்கினால், அது தெலுங்கானா, சட்டீஸ்கர், ஜார்கண்ட், உத்தரகாண்ட் மாநிலங்களின் பிரச்னைக்கு வழி ஏற்படுத்தும். எனவே, சிறப்பு நிதி மட்டும் வழங்கப்படும்’’ என்று அறிவுறுத்தியே நாயுடுவை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைத்தனர்.

ஜெகன்மோகன் ரெட்டியின் குடைச்சல்!

ஆந்திர மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில், முதல்வராக இருந்து மர்மமான முறையில் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த ராஜசேகர ரெட்டியின் மகன், ஜெகன்மோகன் ரெட்டி, தன் தந்தைக்குப் பின்னர் தனக்கு முதல்வர் பதவி வரும் என்று எதிர்பார்த்து ஏமாந்தார். இதனால், ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியை உடைத்து, ஒய்.எஸ்ஆர்ஆர் காங்கிரசை உருவாக்கினார்.
வரும் 2019ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடுவுக்கு பெரும் சவாலாக இருக்கப்போவது காங்கிரஸ் கட்சியோ, பா.ஜ.வோ அல்ல. ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிதான். ஆந்திராவில் 2019ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடுவுக்கு 80 முதல் 95 இடங்களும், ஜெகன்மோகன் ரெட்டிக்கு 45 முதல் 60 இடங்களும் மட்டுமே கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி தீவிரம் காண்பித்தால், ஆந்திராவின் அடுத்த முதல்வராகும் வாய்ப்பதிகம் என்கின்றன சர்வேக்கள்.

வேஷம் கட்டிய நாயுடு

ஜெகன்மோகன் ரெட்டியின் திடீர் அரசியல் எழுச்சி சந்திரபாபு நாயுடுவை சங்கட பாபு நாயுடுவாக மாற்றியது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கிய போராட்டம், அவரது செல்வாக்கை உயர்த்தியது. பதிலடியாக, சந்திரபாபு நாயுடு, தான் இடம் பெற்றுள்ள தேசிய ஜனநாயக
கூட்டணியில் இருந்து கொண்டே, மத்திய அரசுக்கு குடைச்சல் கொடுத்து, சிறப்பு அந்தஸ்து கொடுத்தே தீரவேண்டும் என்றார். இதற்கு அமித்ஷா, மோடி, அருண்ஜெட்லி முட்டுக்கட்டை போட்டனர்.
இதைக் காரணமாக்கி, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியே வந்தார் சந்திரபாபு நாயுடு. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு, வீம்பு செய்ததுடன், பாஜவுக்கு எதிராக தேசிய அளவில் புதிய கூட்டணியை அமைக்கப்போவதாக கூறினார். இதன் ஒரு பகுதியாக 35 ஆண்டுகளாக எதிர்த்து வந்த காங்கிரஸ் கட்சியுடன் கை கோர்த்ததுடன், தலைவர் ராகுலை சந்தித்தார். தென் மாநிலங்களில் பாஜவை வளர விடமாட்டேன் என்று கூறி கர்நாடக முதல்வர் குமாரசாமி, தமிழக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆகியோரை சந்தித்துப் பேசினார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜியுடனும் நாயுடு பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோடீஸ்வரர்களின் கூட்டணி?

சந்திரபாபு நாயுடு அடிப்படையில் பெரும் கோடீஸ்வரர். என்னதான் அவர் தன்னை நேர்மையின் மறு உருவமாக காண்பிக்க முயன்றாலும், ஆந்திராவில் அவரது குடும்பத்தினர் விட்டு வைக்காத தொழில் ஏதும் இல்லை என்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி. சந்திரபாபு நாயுடுவின் சொத்துக்கள், பல்லாயிரம் கோடி ரூபாயாக, அசாதரண வளர்ச்சி கண்டுள்ள நிலையில், மத்திய அரசு இதுகுறித்து கேள்வி எழுப்ப, சங்கட பாபு நாயுடுவாக நெளிந்து கொண்டிருக்கிறார். இவரது சொத்துக்கள் குறித்து சர்ச்சை ஏற்பட, சிபிஐ, அமலாக்கப்பிரிவு தன் மாநிலத்துக்குள் நுழையக் கூடாது என்கிறார் இவர்.
சரி, இவர் சந்தித்து பேசிய மற்ற தலைவர் யார்? நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை பகல் கொள்ளையடித்து, பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதியான ராகுல் வின்சி காண்டி, கர்நாடகாவின் முன்னாள் ஊழல் சக்ரவர்த்தி, இப்போதைய முதல்வர் குமாரசாமி மற்றும் தமிழகத்தின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின். இவை எல்லாவற்றுக்கும் மேலாக மேற்கு வங்க முதல்வர் மம்தா. இவரும் சாரதா சிட்பண்ட் ஊழலில் சிக்கியவர்தான். இப்படி, பொதுமக்களின் சொத்துக்களை கொள்ளையடித்தும், குறுக்கு வழியில் பெரும் கோடீஸ்வரர் என்று மாறியவர்கள், இப்போது மாபெரும் கூட்டணி அமைத்து, கோடிகளை இறைத்து, தேர்தல் வெற்றிக்கு அடித்தளம் போட்டுள்ளனர்.

என்ன காரணம்?

மீண்டும் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தால், சந்திரபாபு நாயுடுவுக்கு சிக்கல். அதாவது, அவரது சொத்துக்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. செம்மரம் கடத்துவதாக கூறி, ஆந்திராவில் ஸ்ரீசைலம் காட்டுக்குள் 20 தமிழர்களை சுட்டுக் கொன்ற சந்திரபாபு நாயுடு, கொஞ்சமும் கூச்சம் இல்லாமல், ஸ்டாலினின் தோள் மீது கை போட்டு பேசுகிறார் என்றால், அதற்கு காரணம் இல்லாமல் இருக்குமா?

காரணம் : தமிழகத்தில் பால் கலப்படப் பிரச்னை ஏற்பட்டபோது, அதில் சந்திரபாபு நாயுடுவின் ஹெரிடேஜ் பால் நிறுவனமும் சிக்கியது. தமிழகத்தில் நடைபெற்ற ஆய்வில் கலப்படம் உறுதி செய்யப்பட்டது. டில்லி ஆய்வகத்தில் இந்தப் பாலை பரிசோதிக்க அனுமதித்தபோது, இதற்கு நாயுடு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், நாயுடுவுக்கு மத்திய அரசு நோ சொல்லிவிட்டது. பால் கலப்படம் அங்கேயும் உறுதியானால், அது நாயுடுவின் ஆந்திர அரசியலுக்கு ஆப்பு வைக்கும் செயலாகிவிடும். பல்லாயிரம் கோடி ரூபாய் வருமானம் இழப்பு ஏற்படும்.

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில், ஜெகன்மோகன் ரெட்டியை மர்ம நபர் கத்தியால் தாக்கினார். அவர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியின் உறுப்பினர் என்பது தெரியவந்தது.

இந்தப் பிரச்னைகளில் சிபிஐ உள்ளே வந்துவிட்டால், தனக்கு சிக்கலாகிவிடும் என்பதற்காக, தென்மாநிலங்களில் பாஜவுக்கு எதிரான கூட்டணியை உறுதியாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அத்துடன் சிபிஐ தன் மாநிலத்துக்குள் நுழையவும் கூடாது என்று கூறியுள்ளார்.

சங்கட பாபு நாயுடுவின் திட்டம் வெற்றிபெறுமா?

என்னதான் சந்திரபாபு நாயுடு தென் மாநிலங்களில் பாஜவுக்கு எதிராக காய் நகர்த்தினாலும், சொந்த மாநிலத்தில் அவரது செல்வாக்கு சரிந்து கொண்டே இருக்கிறது. காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து சட்டமன்றம், லோக்சபா உறுப்பினர்களைப் பெற்றாலும், அது அவரது முதல்வர் பதவியை காப்பாற்றுவதற்கு போதிய அளவில் இருக்காது என்கின்றன தேர்தல் கணிப்புகள். அதேநேரத்தில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், தன் தேர்தல் களத்தில் உறுதியாக நிற்கிறார். வரும் தேர்தலில் அவர் தனித்து நின்றாலும், அல்லது பாஜவுடன் கூட்டணியாக நின்றாலும், மிகப் பெரிய அளவில் வெற்றிபெறுவார் என்கின்றன தேர்தல் கணிப்புகள். எனவே, தமிழகம், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு கூட்டணி அமைக்கும் திட்டத்தில் மிகப் பெரிய பின்னடைவை சந்திக்கப் போகிறார் என்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள்.

உளறிக்கொட்டலாமா?

‘மோடியைவிட ஸ்டாலின் திறமையான தலைவர்’ என்று சந்திரபாபு நாயுடு கூறியது, உண்மையோ, பொய்யோ தெரியாது. ஆனால், இதை வைத்து சமூக வலைத்தளங்களில் 2 வாரங்களாக ஸ்டாலின் வறுபட்டது உண்மை. 3 முறை முதல்வர், 4 ஆண்டுகள் பிரதமர் என்ற நிலையைக் கடந்த பிரதமர் மோடியின் நிர்வாகத்திறமை மற்றும் சீர் திருத்த நடவடிக்கையுடன், எந்தவிதமான அரசியல் மற்றும் நிர்வாக அனுபவம் இல்லாத, கத்துக்குட்டி தலைவர் ஸ்டாலினை ஒப்பிட்டது, சந்திரபாபு நாயுடுவின், நகைச்சுவை உணர்வு என்றுதான் அனைவரும் பார்க்கின்றனர். ஒட்டு மொத்தத்தில், சந்திரபாபு நாயுடுவின் அரசியல் நகர்வு, ஆத்திரத்தில் எடுத்த முடிவாகி, இப்போது மெல்லவும் முடியாமல், துப்பவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.

(Visited 19 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *