சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

தீபாவளி மீட்க வேண்டிய மகிழ்ச்சி!

இந்த இதழ் உங்கள் கரங்களில் தவழும் நேரத்தில் தீபாவளிக் கொண்டாட்டங்கள் தொடங்கியிருக்கும். பண்டிகை என்றதும் நம் நினைவுக்கு சட்டென வந்துவிட்டுப் போவது, நம் கடந்த கால மகிழ்ச்சிகளும்தான். என்னதான், இன்றைய நவீன யுகத்துக்கு ஏற்ப கொண்டாட்டங்கள் அப்டேட் ஆகியிருந்தாலும், மகிழ்ச்சிகளும், பண்டிகைக்கான பாரம்பரிய அடையாளங்களும் இன்னமும் அப்டேட் ஆகவில்லை! இன்னும் சொல்லப்போனால், பண்டிகைகள் எல்லாம் தங்கள் வழக்கமான அடையாளங்களை இழந்து கொண்டே செல்கின்றன என்பதுதான் உண்மை.

உங்கள் பண்டிகைகால மகிழ்ச்சியை, நட்பு நாடுதலை, மகிழ்ச்சி பரிவர்த்தனைகள் கடந்த 20 ஆண்டுகளில் உங்களுக்கேத் தெரியாமல் களவாடப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று தெரியுமா?

உங்கள் பண்டிகைக்கால சந்தோஷ அளவை, மகிழ்ச்சியின் எல்லையை நிர்ணயிப்பது யார் தெரியுமா? சாட்சாத் டிவி பெட்டிகள்தான்.

டிவி எனும் ஓர் மாயவலை!

தீபாவளி நாளில் காலை 5 மணிக்கு மங்கல நிகழ்ச்சிகளில் நாதஸ்வரம் தவில் வாசிப்பதில் தொடங்கி இரவு 11 மணி வரை உங்கள் கண்களுக்கு ஓய்வு என்பது இல்லாமல், மனதுக்கு நிறைவான மகிழ்ச்சி என்பது ஏதும் இல்லாமல், உங்களைக் கட்டிவைத்து, ஒரு மகிழ்ச்சியான நாளை, திட்டமிட்டே இழக்க வைத்துக் கொண்டிருக்கின்றன இந்த டிவி நிகழ்ச்சிகள்.

குடும்ப குதூகலம்!

1990களில் அதாவது இந்த டிவிக்களின் இடையூறுகள் இல்லாத காலகட்டங்களில் பண்டிகை கொண்டாட்டம் என்பது தனிநபர் மற்றும் குடும்பத் திட்டமிடல் என்று இரண்டு வகைகளாக இருந்தது. இதில் இரண்டும் சுவாரஸ்யம் மற்றும் மகிழ்ச்சிக்கு குறைவில்லாத வகையில் இருந்தன.

தீபாவளிக்கு ஒரு மாதத்துக்கு முன்னரே தனிநபர் கொண்டாட்டங்கள், திட்டமிடல் தொடங்கிவிடும். அப்பாவுக்கு வரும் போனஸ் எவ்வளவு? இதில் நமக்கும், நம் தம்பிக்கும், தங்கைக்கும் என்னென்ன உடைகள் எடுத்துக் கொடுக்க முடியும் என்பது தனிநபர் கொண்டாட்டமாக இருந்தது.

குடும்ப கொண்டாட்டம்!

தனிநபர் கொண்டாட்டங்கள் இப்படியென்றால், குடும்பத்துக்கான கொண்டாட்டங்கள் மினி பட்ஜெட்டில் மிகச் சிறப்பாக இருக்கும். என்னென்ன பட்சணங்கள் செய்வது என்று பெரிய பட்டியல் போடுவார்கள். கொஞ்சம் வசதியான குடும்பங்களில் தேன்குழல், ஜாங்கிரி, மைசூர்பாகு என்று விரிந்தால், நடுத்தர குடும்பங்களில் ரவை பணியாரம் என்பது பொது. மிகக் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில் முறுக்கு என்பது இயல்பானது.

பட்டாசு!

தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் பட்டாசுகளின் படையெடுப்புகள் அதிகரிக்கத் தொடங்கும். எந்தக் கட்டுப்பாடும் இல்லாத அன்றைய காலகட்டத்தில், தெருவுக்கு தெரு பணக்கார வீடுகளில் வெடிகளின் அணிவகுப்பு அதிகமாக இருக்கும். அவர்கள் வெடிக்க, பார்த்து மகிழ்ந்த தலைமுறையினர் உண்டு. காரணம், அன்றைய காலகட்டத்தில் வருமானங்கள், போனஸ்கள் குறைவு. ஆனால், மகிழ்ச்சிக்கு எந்தக் குறையும் இல்லாமல் இருந்தது.

தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்னர் தயாரிக்கப்படும் பட்சணங்கள், தீபாவளி நாளில் படும் பாடு இருக்கிறதே? அப்பப்பா… யார் சுட்ட பட்சணம் பெஸ்ட் என்பதை நிரூபிப்பதற்காக நம் வீட்டில் இருந்து 10 சொந்தங்கள் வீட்டுக்கு பலகாரங்கள் பறந்தால், அத்தனை வீடுகளில் இருந்தும் பதில் விருந்தோம்பலுக்கு நம் வீட்டுக்கு வரும் பட்சணங்களின் படையெடுப்பு அதிகம்.

தீபாவளி நாளில் பிரம்ம முகூர்த்தத்தில் எண்ணெய் முழுக்காட்டில் தொடங்கி, குல தெய்வத்தை வணங்கி, குபேரனை வணங்கி, தீப ஒளியேற்றி புத்தாடைகள், பொன் வைத்து இறைவழிபாட்டை செய்த காலங்கள் தித்திக்கின்றன.

இப்போதெல்லாம் யார் அதிக நேயர்களை கட்டி வைப்பது என்ற போட்டியில் டிவி நிகழ்ச்சிகள் இருப்பதால், பலர் உண்மையான கொண்டாட்டங்களை மறந்துவிட்டனர்.

வீடை சிறை, டிவிப் பெட்டிகளே கதி என்றாகிவிட்டனர். பண்டிகை என்பது உறவுகளை புதுப்பிக்கவும், நட்புகளை பலப்படுத்தவும், பெரியோர் ஆசிகளைப் பெறுவதற்குமான ஒரு நன்னாள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் வாசகர்களே. உழைக்கும் மக்களுக்கு 365 நாட்களும் தீபாவளி போன்றவைதான் என்று தத்துவம் பேசலாம். ஆனால், தீபாவளி என்ற பண்டிகைக்கு இந்த 365 நாட்களும் ஈடாகாது.

உறவுகளை காப்போம்!

காரணம், ஆண்டின் எல்லா நாட்களிலும் நீங்கள் எல்லா உறவினர்களின் வீடுகளுக்கும் செல்லப்போவது இல்லை. ஆனால், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் நெருங்கிய நட்புகளின், உறவுகளின் வீட்டுக்குச் சென்று உறவுகளைப் புதுப்பிக்க மறந்துவிடாதீர்கள். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடிகளும் உறவுகளின் புதுப்பித்தல் தொடர வேண்டியது அவசியம். ஆனால், அது எல்லா நேரங்களிலும் சாத்தியம் இல்லை என்பதால், இதுபோன்ற கொண்டாட்டங்களை நம் முன்னோர்கள் தொடங்கி வைத்தனர். அதனால், இந்த தீபாவளியை டிவிப் பெட்டிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, உறவினர்கள், நண்பர்களுடன் கொண்டாடுவதற்குத் திட்டமிடுங்கள். மகிழ்ச்சியான தருணங்களில் உறவுகளின் புதுப்பித்தல் என்பது எளிமையான ஒன்றாகிவிடும்.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நம் பாரம்பரிய தீபாவளி கொண்டாட்டங்களை மீட்டெடுப்போம். உற்றார், உறவினர்கள், நண்பர்கள் படை சூழ தீபாவளியைக் கொண்டாடி மகிழ்வோம் வாருங்கள்.

(Visited 20 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *