சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

தேவி ஸ்ரீதேவி

அன்று

அருணாச்சல சித்தரின் அழுத்தமான கருத்தைக் கேட்டு கேள்வி கேட்ட மனிதர் விக்கித்துப் போனார்.

சொல்பவர் காலஞானியான ஒரு சித்தர்! அதில் கற்பனை இருப்பதாக கருத அவரால் முடியவில்லை. இருந்தாலும் அவருக்குள் இன்னமும் சந்தேகங்கள்.

‘‘சாமி… சாகும் போது என்ன நினைக்கறோம்கறத வெச்சு தான் உயிரோட போக்கு இருக்கும்னு சொன்னீங்க. நான் புரிஞ்சிக்கறதுக்காக கேக்கறேன்… காலம் பூரா ஆட்டம் போட்டுட்டு சாகற சமயம் கிருஷ்ணா ராமான்னா எல்லா பாவமும் போய் சாமிகிட்ட போயிடுவாங்களே சாமி… அப்ப அவங்க தப்புக்கு தண்டனையே இல்லாம போயிடாத சாமி?’’

‘‘நல்ல கேள்விய தான் கேட்ருக்கே… காலம் பூரா ஒருத்தன் எல்லா பாவத்தையும் பண்ணிட்டு சாகும் போது கிருஷ்ணா ராமான்னுல்லாம் சொல்லிட முடியாதுப்பா. உயிர் போற நேரம் வந்துட்டா உடம்பு அடங்க ஆரம்பிச்சிடும். உணர்வும் சுருங்கும்… ஞாபக சக்தியும் வேலை செய்யாது. அப்ப செஞ்ச பாவம் தான் ஞாபகத்துக்கு வரும்…’’

‘‘ஒருவேளை பக்கத்துல யாராவது இருந்து ஞாபகப்படுத்தினா?’’
‘‘அப்படி ஞாபகப்படுத்தறது நமக்கு ஒண்ணும் புதுசு இல்லப்பா… காதுல கர்ணமந்திரம் சொல்றதுன்னு ஒரு பழக்கம் நம்ம மதத்துல காலகாலமாவே இருக்கும். நீ என்ன தான் சாகக்கிடக்கறவன் காதுகிட்ட கிருஷ்ணா ராமான்னாலும் அவன் காதுல அது விழணும். விழறதுக்கு புண்ணியம் பண்ணியிருக்கணும்…’’

‘‘அப்ப காலம் பூரா பக்தியோட இருந்தா மட்டும் தான் சாகும்போதும் சாமி நினைப்பு இருக்குமா?’’
‘‘சத்தியமா அதுதான் உண்மை’’

‘‘ஒரு பேச்சுக்கு கேக்கறேன்… சாகும்போது நான் அடுத்த பிறப்புல ராஜாவா பிறக்கணும்னு ஆசைப்பட்டுகிட்டே செத்தா ராஜாவா பிறப்பேனா?’’

‘‘நிச்சயமா பிறப்பே… அது தான் மனோ சக்தி! மனோ சக்தி ஒருத்தருக்கு சாகும் போது எப்படி இருக்குங்கறதுல தான் அவரோட மறுஜென்மமும், முக்தியும் இருக்கு…’’

‘‘நீங்க இப்படி சொல்றீங்க… ஆனா நம்ப ஒரு மதத்தை தவிர மற்ற எந்த மதமும் மறு பிறப்பை பற்றி பேசலியே?… பாவ மன்னிப்பு கேட்டுட்டா சொர்கம்தான்னு கிறித்துவ மதம் சொல்லுது. தப்போ சரியோ அதுக்கு தகுந்ததை அனுபவிச்சே தீரணும்னு இஸ்லாமும் சொல்லுது.
இந்த உலகத்துல நம்ப மதத்தை விடவே இந்த மதங்கள்ளாம் தான் பெரிய மதங்கள். மக்கள் தொகைலயும் சரி, நிலப்பரப்புலயும் சரி… அந்த வழி நடப்பவங்க அப்ப என்ன ஆவாங்க?’’

‘‘நீ இப்ப இருக்கற எண்ணிக்கையை சொல்றே? நம்ப மதமோ யுகங்கள் கடந்த மதம். அப்படி பாத்தா முதல் மதம், மூத்த மதம் பெரிய மதம் நம்ப மதம் தான். துலாபரயுகம், சதுர்யுகம், திரேதாயுகம், கலியுகம்னு… நம்ப காலக் கணக்கு லட்சக்கணக்கான வருஷங்களப்பா…’’

‘‘அதெல்லாம் பொய் கற்பனைன்னு சொல்றாங்களே…?’’

‘‘அப்படிச் சொல்றவனை நினைச்சு கோபப்படாதே, பரிதாபப்படு…’’

‘‘ஏன் அப்படி சொல்றீங்க?’’

‘‘ஒரு உண்மையை பொய்யின்னும் கற்பனைன்னும் நினைக்கறவனை வேற எப்படி நினைக்க?’’

‘‘நாம நினைக்கறத விடுங்க… அதுக்கு என்ன ஆதாரம்…?’’

‘‘ராமாயணகாலம் ஒரு உண்மைங்கறதுக்கு ஒரு சேது பாலம் போதும். இப்பவும் கடலுக்குள்ள அழியாத சாட்சியா அப்படியே இருக்கு. இதை உலகத்தோட பெரிய விஞ்ஞானிங்கற நாசாங்கற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமே ஒத்துகிட்டு போட்டோ படமெல்லாமும் வெளியிட்டுருக்காங்களே…’’

‘‘அப்ப மறுபிறப்பு பொய்னு நினைக்கறவங்க நிலை?’’

‘‘மறுபிறப்பை எடுத்து அவங்களே தெரிஞ்சிக்கு வாங்கப்பா…’’

‘‘சாமி கடைசியா ஒரு கேள்வி… மறுபிறப்பு உண்டு, கர்மவினை சும்மா விடாதுங்கறதுக்கு எதாவது ஆதாரம் இருக்கா சாமி?’’

‘‘நாம எல்லாருமே கூட ஆதாரங்கள் தான். முன் ஜென்மத்துல நம்ப பாவங்கள் மன்னிக்கப்பட்டுருந்தா நாம பிறந்துருக்கவே மாட்டோம். பிறந்திருந்தாலும் ஏழையா பணக்காரனா வெள்ளையா கருப்பான்னு ஏற்றதாழ்வோடையா பிறந்திருப்போம்…?
கடவுள் மன்னிக்கறவனா இருந்தா அவர் படைப்புல ஏற்றதாழ்வே இருக்கக் கூடாதே…? ஆனா இங்க குழந்தையா பிறக்கும் போதே எவ்வளவு ஏற்றதாழ்வுகள்…?’’

‘‘பளிச்னு சொன்னீங்க… இப்ப எனக்கு நல்லாவும் புரிஞ்சிடிச்சி, அப்ப நம்ப மறுஜென்மத்துக்கும், நம்ப நல்லது கெட்டதுக்கும் கடவுளுக்கும் ஒரு சம்மந்தமும் இல்லையா? நம்ப வாழ்க்கைல கடவுளோட பங்குதான் என்ன?’’

‘‘கடவுள் வேதத்தை கொடுத்துருக்கார்… இப்படித்தான் ஒரு மனுஷன் வாழணும்னு வழிமுறைகளை கொடுத்துருக்கார். பாவம் செய்தா தண்டனை, புண்ணியம் செய்தா அதற்குரிய பயன்னு வழிமுறைகளை உருவாக்கியிருக்கார்.

பாவமோ புண்ணியமோ எல்லாமே உன்னைச் சேர்ந்ததுன்னு ஒருத்தன் எந்த ஆசையுமில்லாம என்னப் போல சன்யாசியா வாழும் போதுதான் அவனுக்கு சொர்கத்துல இடம் கிடைக்குது. இல்லைன்னா செய்த நல்லது கெட்டதுக்கேற்ப புல்லாவோ பூண்டாவோ இல்லை மனுஷனாவோ பிறந்து அனுபவிச்சே தீரணும், இதுல யாருக்குமே விதி விலக்கில்லை..’’

– ஒரு பெரும் கால ரகசியத்தை அருணாசல சித்தர் சொல்லி முடித்தார். அவரிடம் வந்து தேவி பற்றியும் அமுதன் பற்றியும் சொன்னவருக்கு ஒருபுறம் பிரமிப்பு. மறுபுறம் வருத்தம்….!
அமுதனுக்கு எந்த உதவியையும் தன்னாலோ தங்களாலோ செய்ய முடியவில்லையே என்கிற வருத்தம்! சமூகம் என்பது எல்லா காலங்களிலும் இப்படித்தான் இருக்கிறது. அது ஒரு ரொட்டித்துண்டு கூட கிடைக்காத போதுதான் புரட்சியில் ஒன்றுபட்டு இறங்கும். மற்ற நேரங்களில் நமக்கெதற்கு ஊர் வம்பு என்று தான் இருக்கும்.

இது தான் எப்போதுமே சமூக தர்மம்! இதில் எப்போதாவது காந்திபோல் சிலர் வரும் போது சில நல்ல மாற்றங்களும் ஏற்படும். ஆனால் எப்போதாவது தான்…! பெரும்பாலும் சமூகம் என்பது சுயநலத்தோடும் பயத்தோடும்தான் இருந்திருக்கிறது. இனியும் இருக்கும்.
இப்படி ஒரு சமூகத்தில் நல்லவர்களை விட தீயவர்கள் எண்ணிக்கை தான் அதிகமிருக்கும். அப்படித்தான் இப்போதும் இருக்கிறது. அப்படி இருப்பதன் காரணமும் அவருக்கு தெரிந்தது… அதை நினைத்து பிரமித்தபடியும் வருந்திய படியும் அவர் அங்கிருந்து விலகிப் போனார்…
போகும் வழியில் ஒரு குப்பை மேட்டில் பல நாள் தாடியோடு அமுதன் கிடப்பதையும் பார்த்தார்.
அமுதனின் உறவினர்கள் கூட அவனை அழைத்துப்போய் ஆஸ்பத்திரியில் சேர்த்து அவனை குணப்படுத்த நினைக்கவில்லை.

ஒரு பாளையக்காரனின் தவறு, தவறான ஒரு பெண்ணைத் தொட்ட பாவம் முதலில் அவன் மகளை பாதித்து, மகள் மூலமாக மருமகனையும் பாதித்து அவன் குடும்பத்தையே அழித்துவிட்டது.
பாவத்துக்கு துணைபோனால் இது தான் நிலை என்பது போல் தான் அமுதன் குப்பை மேட்டில் கிடந்தான்…

ஒருநாளல்ல… இருநாளல்ல… பல மாதங்கள்! ஒரு சந்தர்ப்பத்தில் அவனைக் கொண்டு போய் வடநாட்டில் ஏதோ ஒரு ரயில்வே ஸ்டேஷனில் இறக்கிவிட்டு வந்து விட்டார்கள்.
இங்கே தேவிக்கும் மாதங்கி பிறந்தாள்! தேவிக்கு குழந்தை பிறக்கவுமே வசியம் லேசாக கலைந்து அமுதன் ஞாபகம் வந்தது. தன்னைச் சுற்றி நடக்கக் கூடாததெல்லாம் நடந்து விட்டதும் தெரிந்தது. இதனால் காளியம்மாளுக்கும், ஜீவாவுக்கும் தெரியாமல் அமுதனைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினாள். அங்கே வேலை பார்ப்பவர்களில் அவனை ஒரு பிச்சைக்காரனைப் போல் இறக்கி விட்டுவிட்ட செயலைச் சொல்லவும் பகிரைன்றது!

குழந்தைக்கு ஆறுமாதமாகி தவழத் தொடங்கிவிட்ட நிலையில் அமுதனை தேடிக் கொண்டு தனியாக ஒரு நாள் தேவி வட நாட்டிற்கு புறப்பட்டு விட்டாள். கூடவே அந்த வேலைக் காரியும் சென்றாள். ஒருமாதத்துக்கும் மேல் எல்லா ரயில் நிலையங்களிலும் அதன் சுற்று வட்டாரத்திலும் தேடியதில், இறுதியாக அமுதன் காசியில் கண்ணில் பட்டான். அங்கும் போதைக்கு அடிமையாகவே இருந்தான். பிச்சை எடுத்து அந்த காசில் காசியில் திரியும் அகோரிகளோடு சேர்ந்து கொண்டு கஞ்சா குடித்தபடி இருந்தான். அவனை அங்கிருந்து அழைத்து வருதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. தேவி இப்படி வீட்டை விட்டு ஒடிப் போகவும் காளியம்மாளும் போலீஸ் ஸ்டேஷனில் காணாமல் போன புகாரை தன் வக்கீலை வைத்து கார்டியன் சர்டிபிகேட்டை வாங்கி விட்டாள்.

ஆனால் அவள் எதிர் பாராத விதமாக புருஷனோடு தேவி திரும்பி வந்து நிற்கவும் ஆடிப் போனாள். அமுதன் தாடியும் மீசையுமாக மசமசவென்று நின்றான். தேவி மட்டும் தெளிவாக இருந்தாள்.

‘‘சொத்துக்காக என் வாழ்க்கையோடு ரொம்பவே விளையாடிட்டீங்க சித்தி. இனியும் நான் ஏமாறத்தயாரா இல்லை’’ என்று பேசவும் செய்தாள்.

காளியம்மாளுக்கு அவள் விழிப்பு அதிர்ச்சியைத்தான் அளித்தது. இருந்தும் அவளுக்கு அப்போதும் ஒரு யுக்தி தோன்றியது. குழந்தை அவள் வசம் தான் இருந்தது. அதற்கு விஷம் கொடுக்க தேவியின் கண் எதிரில் ஏற்பாடு செய்தாள்.

தேவி அதை எதிர் பார்க்கவில்லை ‘‘ஐயோ வேண்டாம் சித்தி’’ என்று கதறினாள்.

‘‘இந்த குழந்தை உயிரோட இருக்கணும்னா என் தம்பி சொல்றபடி கேள் – இல்லை நான் கொஞ்சமும் யோசிக்கமாட்டேன் என்று வெறி பிடித்தவள்போல கத்தினாள்.
ஜீவாவும் அவர்கள் இருவரையும் தள்ளிக் கொண்டு போனான். காளியம்மாள் அவன் காதில் ஏதோ சொன்னாள். அதன் பின்னும் தேவியையும் அமுதனையும் ஒரு ஜோடி மாடுகளை ஒரு விவசாயி ஒட்டிச் செல்வதைப் போல் ஒட்டிச் சென்றான்.

வெளியே கார் காத்திருந்தது. அதில் இருவரையும் ஏற்றினான்.
காரும் வேகமாய் புறப்பட்டது. திருப்பரங்குன்ற கிரி வலச்சாலையில் புழுதி பறக்கச் சென்ற அந்த கார் ஆளரவமேயில்லாத இடத்தில் நின்றது. இருவரையும் அங்கே இறங்க வைத்தவன்.
‘நடங்கமேல…’ என்றான். ‘எதுக்கு?’ என்ற கேட்ட தேவியின் கன்னத்தின் மேல் ஒரு அறை அறைந்தான்.

‘‘இதுக்கெல்லாம் நீ நல்லா அனுபவிப்பே…’’ என்று பதிலுக்கு வெடித்தாள்.

‘‘ஒடுகாலி நாயே… சாபமா கொடுக்கறே?… ஏறுடி மேல… நீ இங்க என் பேச்சைக் கேட்கலே அங்க உன் குழந்தைக்கு உசுர் போயிடும். இப்ப மணி மூணு… மூணறைக்கு நான் வீட்டுக்கு திரும்பாட்டி உன் குழந்தைக்கு கள்ளிப்பாலை கொடுத்துடுவா தாதி. இப்ப என்ன சொல்றே?’’

‘‘ஐயோ… என் குழந்தையை கொடுத்துடு… இந்த சொத்தெல்லாமும் வேண்டாம்! வேண்டாம். எங்களவிட்று – நாங்க எங்கையாவது போய் பொழச்சுக்கறோம்..’’

‘‘அதுக்கு தானே உனக்கும் விதியில்லை – எங்களுக்கும் விதியில்லை… உன் அப்பன் அவ்வளவு சொத்தையும் அந்த குழந்தை பேருக்குல்ல எழுதிவெச்சிருக்கான். ஒரு கால்காணி நிலத்தை எங்களுக்கு விட்டு வைக்கலியே. இதுக்கா எங்கக்கா உன் அப்பனுக்கு இரண்டாம் தாரமா வாக்கப்பட்டா?..’’

‘‘எங்கப்பா உங்கக்காவை தொட்ட தப்பை பண்ணிட்டாலும் சொத்தை காப்பாத்திட்டார்.. அதை நினைச்சு நான் சந்தோஷப்பட்றேன். என் குழந்தையை கொன்னுட்டா நீங்களும் நடுத்தெருவுல நிக்கணும். அதனால என் குழந்தையை நீங்க கொல்லமாட்டீங்க.. நான் இப்பவே போலீசுக்கு போறேன், எல்லாத்தையும் சொல்றேன்… நீ என்ன செய்யறேன்னு பாக்கறேன்…’’

– என்று அப்படியே அவனுக்கு எதிராக திரும்பியவளைப் பார்த்து ஒரு குரூர சிரிப்பு சிரித்தான். ஜீவா எங்கிருந்தோ வந்த இரண்டுபேர் அவளை அப்படியே வளைத்துப் பிடித்து தூக்கினர். மலை ஏறவும் செய்தனர். அமுதன் நடப்பதை எல்லாம் ஒரு பச்சைக் குழந்தை போல் பார்த்தபடி இருக்க அவனை மலைமேல் அழைத்துச் செல்வது ஒன்றும் சிரமமானதாக இல்லை.

மலைமேல் யாரும் இல்லை! மனிதர்கள் நடமாடக்கூடிய இடமாகவும் அது இல்லை. ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருவரையும் ஒன்று சேர்த்து நிறுத்தினான் ஜம்பு. தேவி கதறினாள்.

‘‘வேண்டாம் ஜம்பு.. எங்களவிட்று – நாங்க எங்கையாவது போயிட்றோம்…’’

‘‘எங்கையாவது எதுக்கு போறே… மேலபோ…! எங்கையாவது போனா இவனை குணப்படுத்தி, திரும்ப வந்து என் குழந்தை என் சொத்துன்னு நீ எங்கள நடுத்தெருவுல நிறுத்திடுவே… மேலபோ…!

‘‘வேண்டாம் ஜம்பு… இது பெரிய பாவம்… எங்க பாவம் உன்னை சும்மா விடாது…’’

‘‘இதை விட பெரிய பாவத்தையே பண்ணிட்டோம். இது என்னடி?’’

‘‘என் வரைல அப்படி நினைக்காதே… நான் இப்ப ஒரு தாய்…’’

‘‘தாய் தானே… என்னமோ பேய்ங்கற மாதிரி பயமுறுத்தறே… அப்படியே பேயா வந்தாலும் நம்பூரி இருக்காரு பிடிச்சு குடுவைல அடைச்சிடுவோம்..’’

‘‘ஜம்பு… எங்களவிட்று நான் திரும்பி எல்லாம் வரமாட்டேன். சத்யம் செய்துதரேன்…’’

‘‘உன் சத்யத்தை உடப்புல போடு… இப்ப மேலபோ…’’ – என்றபடி அவளை நெருங்க, அவளும் அமுதனோடு சில அடிகள் பின்செல்ல அங்கே ஒருவன் எண்ணையைக் கொட்டியிருந்தான். அதில் இருவர் கால்களும் பட்ட நிலையில் வழுக்க ஆரம்பித்தது. அப்படியே தடுமாறி ஒருவர்மேல் ஒருவர் விழுந்து பின்பக்க சரிவில் அலறலோடு விழ ஆரம்பித்தனர். சற்று தூரத்தில் ஒரு பாறை சரிவில் தியானத்தில் இருந்த அருணாசல சித்தர் காதுகளில் அலறல் சப்தம் விழவும் கண் விழித்துப் பார்த்தார்!

அமுதனும் தேவியும் விழுந்து முடித்து சிதறிப் போயிருந்தனர். கையை தட்டிக் கொண்டு ஜீவாவும் அவன் சகாக்களும் திரும்பியபடி இருந்தனர். அருணாசல சித்தர் அவர்கள் ஒருவர் பார்வையிலும் படவில்லை.

எந்த உணர்வுக்கும் இடம் கொடுக்கக்கூடாத சித்தரின் விழிகளிலும் கண்ணீரின் திரட்சி. அது கன்னத்தில் உருளும்போது அவர் அண்ணாந்து மேலே பார்த்தார்.

‘இறைவா…’ இவர்கள் விதியை இப்பிறப்பில் இப்படி முடித்துவிட்டாய்… அடுத்த பிறப்பாவது இவர்கள் வாழும் பிறப்பாக இருக்கட்டும்! கர்ம வினைகளுக்கும் – அதன் காரணமான மறுஜென்மப் பிறப்புக்கும் இவர்கள் வாழ்வே கூட ஒரு சாட்சியாகட்டும் மேலான சாட்சியாக நானே இருப்பேன்.. அதன் பிறகாவது இந்த ஆசாபாசமுள்ள மாயவாழ்வில் இருந்து எனக்கு விடுதலை கிடைக்கட்டும்… நமச்சிவாயம்!

– என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டார். அவரது யோக உடம்புக்கு அமுதனின் ஆத்மாவும், தேவியின் ஆத்மாவும் சுவேத உடம்போடு விண்ணில் செல்வதும் தெரிந்தது. துடிதுடித்த இறப்பு… தவித்த எண்ணங்கள்… என்று எல்லாம் கலந்த அந்த ஆத்மாக்களின் போக்கை வரும் காலத்தில் நாம் தெரிந்து கொள்ள நேருமோ?

இன்று

அருணாசல சித்தர் கிரீடம் குறித்து கேட்கவும் வாயைப் பிளந்தவனை அருகில் அழைத்தவர் .

‘‘தம்பி… நான் இப்ப உன் துரிய சக்தியை தூண்டப்போறேன். அதுக்கு என் ஆத்ம சக்தியை பயன்படுத்தப் போறேன். எனக்கு 99 வயசாகுது! என் 23வது வயசுல நான் வீட்டைவிட்டு வெளியேறி சதுரகிரி மலைக்கு போய் அங்க இருக்கற ஒரு சித்தர் கிட்ட சிஷ்யனா சேர்ந்து காலத்தால என்னையும் ஒரு சித்தனா ஆக்கிகிட்டேன். 1988வது வருஷம் என் 69வது வயசுல உன் முற்பிறப்பை சந்திச்சேன். 30 வருஷம் கழிஞ்சு 99வது வயசுல உன் இப்போதைய பிறப்பையும் சந்திக்கிறேன். சுருக்கமா சொன்னா நான் 66 வருஷமா சன்யாசியா உப்பு புளிகாரம்னு எதையும் சாப்பிடாம பால் பழம் தயிர் அன்னம்னு சாப்பிட்டு உடம்புல உயிரை நிறுத்தி வெச்சுருக்கேன்.

உப்பு புளி காரம் வழியாதான் ஒரு மனுஷனை கிரகங்கள் ஆட்டி படைக்குது. அதை தவிர்த்துட்டா கிரகங்கள் செயலிழந்துடும். ஆத்மசக்தியால் பல அதிசயங்களை செய்ய முடியும். தண்ணி மேல நடக்கலாம், காத்துல மிதக்கலாம் இப்படி பல அதிசயங்களை செய்ய முடியும். நான் அதை செய்து என் சக்தியை விரயப்படுத்தாம உன் துரியத்தை தூண்டப்போறேன். இது உனக்கு பூர்வஜென்ம ஞாபகங்களை உருவாக்கும். அதுல மிக முக்கியமானது பாளையக்கார குடும்பத்தோட ரத்னக்கல் பதிக்கப்பட்ட கிரீடம்! அது புராதனமானது – விலைமதிப்பில்லாதது. .. மியூசியத்துல வெச்சு பாதுகாக்கப்பட வேண்டியது. அந்த ஞாபகத்துக்கு ஆளான பிறகு நீ பேசு..’’ – என்று அவன் நெற்றியின் நடுவில் கண் கட்டை விரலை வைத்தார். அவன் உடல் ஒரு வினாடி மின் தாக்குதலுக்கு ஆளானது போல துடித்தது. கண்கள் செருகிக் கொண்டன். அவனுக்குள் பூர்வஜென்ம நினைவுகள் அணி வகுக்கத் தொடங்கின…!

பாளையக்கார அரண்மனை வீட்டில் ஒரு பாதாள அறை. அந்த அறை ஒரு தண்ணீர் தொட்டிக்குள் இருந்தது தான் ஒரு ஆச்சரியம். வீட்டுத் தேவைக்கான தண்ணீர் தொட்டி அரண்மனை ஈசான்ய பாகத்தில் பூமிக்கு கீழே இருந்தது, அதற்குள் இறங்கி தரைப்பரப்பை உற்றுப் பார்த்தால் அங்கே ஒரு சதுரக்கல் பலகை உள்ளே தண்ணீர் புக இடமில்லா தபடி அமைக்கப்பட்டிருந்தது. தொட்டி தண்ணீரை வெளியேற்றி விட்டு அதில் இறங்கி சென்று பார்த்த போது தான் அந்த சதுரக்கல் பலகையே தெரிந்தது. அதைத்தொட்டு தூக்கவும் உள்ளே இறங்கிச் செல்ல ஏணி அமைக்கப்பட்டிருந்தது.

அமுதேஷ்வர் அதில் இறங்கினான்! அவ்வளவு சொத்துக்களுக்கும் வாரிசான மாதங்கியும் கணக்குப்பிள்ளை மாணிக்கமும் மேலே காத்திருந்தனர். உள்ளே பெரிய மரப்பெட்டி – அதன் சாவி அங்கேயே பக்கமாய் மாடப்பிறைக்குள் இருந்தது. அதை சற்று நெற்றி சுருங்க யோசித்த நிலையில் தான் எடுத்தான் அமுதேஷ்வர். சாவியை எடுத்து பெட்டியை திறக்கவும் உள்ளே காட்சி தந்தது அந்த கீரீடம் அதைப் பார்த்த நொடி அதை தலையில் அணிந்து கொண்டு ஒரு மாப்பிள்ளையாக அவன் நடந்து வந்ததெல்லாம் மெல்ல நினைவுக்கு வரத் தொடங்கியது.
அமுதேஷ்வர் அந்த நினைவுகளுடன் மேலே ஏறத்தயாரானான். மேலே வந்தவன் அதை மாணிக்கம் வசம் தரவும் அதை அவர் அவன் தலையில் அணிவித்தார். அடுத்த நொடியே அவனுக்குள் தேவியோடு அன்று நடந்த திருமணச் சம்பவங்கள் அவ்வளவும் நினைவில் ஒடத்தொடங்கியது.

அப்படியே கிரீடத்தோடு மாதங்கியைப் பார்த்தவனுக்குள் பாசம் ஊற்றெடுக்கத் தொடங்கியது. அவளிடமும் பெரும்மாற்றங்கள்! அப்போது காரில் இருந்து ஸ்ரீதேவியும் அவள் குடும்பத்தவர்களும் கூட இறங்கி வந்தனர்.

ஸ்ரீதேவி மாதங்கியைக்காணவும் பூர்வ நினைவுகள் தூண்டப்பட்டவளாய் ஒடிவந்து அவளைக் கட்டிக் கொண்டாள். மாதங்கிக்கும் அந்த அணைப்பு மிக இதமாக இருந்தது! அப்படியே விலகியவள் அமுதேஷ்வரைப் பார்த்தாள். அவன் கண்களில் கண்ணீர். அதை வேகமாக துடைத்த ஸ்ரீதேவி திரும்பி தன் தாயையும் அண்ணனையும் பார்த்தாள்
அவர்கள் பிரமிப்பில் இருந்தனர். குறிப்பாக அம்மா பூரணியும், அண்ணன் மோகன் குமாரும் ஸ்ரீதேவியை நெருங்கினர்.

‘‘உன் பிறப்புலேயே நீ ஒரு விசேஷமான பிறப்புன்னு நாங்க நினைச்சது சரியா போச்சு. ஒரு தாய் தன் மகளை மறு பிறப்புல சந்திக்கறதுங்கறது உலக அதிசயங்கள்ள ஒண்ணு தான். அந்த அதிசயம் என் தங்கைன்னும் போது சிலிர்ப்பா இருக்குது’’ என்றான் அண்ணன் மோகன் குமார்.

அப்போது வக்கீலும் வந்து சேர்ந்தார். அவரோடு இன்னும் சில முக்கிய புள்ளிகள்! வக்கீல் மாதங்கியிடம் உயிலைக் கொடுத்தவராய் ‘‘அம்மாடி… இன்னிக்கெல்லாம் 500 கோடிக்கு குறையாது இந்த பாளையக்கார குடும்ப சொத்து! உன் தாத்தா விருப்பப்படி நீ தான் வாரிசு. நீ எப்பவோ மேஜர் ஆயிட்டே. ஆனாலும் அப்ப ஒப்படைக்க முடியாத நிலை, இப்ப ஒப்படைக்கறதுல எனக்கும்
சந்தோஷம்’’என்றார்.

வாங்கிக் கொண்ட மாதங்கி அதை ஸ்ரீதேவியிடம் கொடுக்க ஸ்ரீதேவி அமுதேஷ்வரிடம் கொடுக்க, அமுதேஷ்வர் அதை திரும்ப மாதங்கியிடமே கொடுத்தவனாக ‘‘மாதங்கி… நீ எங்களை உன் தாய் தந்தையா ஏத்துகிட்டதே போதும். இது உன்கிட்டயே இருக்கட்டும். இதை கொண்டு எவ்வளவு நல்லது செய்ய முடியுமோ அவ்வளவு நல்லது செய் – உனக்கு மாணிக்கம் துணையா இருப்பார்! நாங்களும் இருப்போம்’’ என்றான் எங்கிருந்தோ மணியும் ஒலித்தது. அப்படியே கிரீடத்தை மாதங்கிக்கு அணிவிக்க அவள் சுதந்திர தேவதையாக கலகலவென சிரிக்க தொடங்கினாள்.

மாதங்கி ஸ்ரீதேவியின் கைகளை பற்றிக் கொண்டு அமுதேஷ்வரரை பார்த்து, ‘‘எனக்கு என் தாய் தந்தையோடு, செல்ல மகளாக இருக்கவே ஆசை!! போன ஜென்மத்தில் தான் நடக்கவில்லை. கடவுள் கொடுத்துள்ள இந்த அரிய வாய்ப்பை எப்படி நான் இழக்க முடியும்.

ப்ளிஸ்!! மீண்டும் நீங்கள் எனக்காக அப்பா அம்மாவாக இணைந்து இங்கே என்னோடு வாழ வேண்டும்’’ என்று கூறும் போதே கண்ணீர் பெருக, ஸ்ரீதேவியும் அமுதேஷ்வரும் ஒரே நேரத்தில், கண்ணே, மகளே ஆழதே என பதறினர்.

‘‘ஒரு கணம் சிந்தித்த அமுதேஷ்வர் எனக்கு பரிபூரண சம்மதம். எப்போது நான் ஸ்ரீதேவியை முதல்முதலாக பார்த்தேனோ… அப்போதே என் மனதில் ஒரு பந்தம் ஏற்பட்டதை மறுக்க முடியாது. உனக்கு ‘‘ என்று ஸ்ரீதேவியை நோக்க… ஸ்ரீதேவி தெளிவாக… ‘‘இனி ஒரு கணம் என் மகளை பிரிய மாட்டேன் என்றாள்..’’ எனக்கும் அவரை பார்த்தவுடன் மனம் ஒன்றிவிட்டது… அம்மா!! அண்ணா என்று கூற அவர்களும் தங்களது சம்மதத்தை புன்னகைத்தனர்.

‘‘வாங்க அருணாசல சித்தரைப் போய் பார்ப்போம்… அவர் மட்டும் இல்லேன்னா இப்ப நாம இப்படி ஒண்ணு சேர்ந்திருக்க முடியாது’’ என்று மலைக்கு போனபோது அங்கே அமர்ந்த நிலையில் ஜீவ சமாதி நிலையை அடைந்திருந்தார் அருணாசல சித்தர்!

கண்ணீரோடு அவ்வளவு பேரும் கைகளைக் கூப்பினர் அப்போது அங்க அரக்கபரக்க ஒடி வந்த ஒரு போலீஸ்காரர் அமுதேஷ்வரிடம் ‘‘சார்… லாக் அப் கஸ்டடில காளியம்மா தற்கொலை பண்ணிகிட்டா சார்..’’ என்றார்.

அவரவர் வினைக்கேற்ப அவரவர்க்கும் ஒரு முடிவை காலம் வழங்கியே தீரும் என்பது எத்தனை பெரிய உண்மை?

– முற்றும்…

(Visited 44 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *