சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

நீதித்துறையின் சர்வாதிகாரமா கொலிஜியம்?

‘தேசத்தின் நலனுக்காக உருவாக்கப்பட்ட எந்த ஒரு அதிகாரம் கொண்ட அமைப்பிலும் நேர்மை அவசியம். இதில் சந்தேகம் ஏற்படும்போது, அந்த அதிகாரம் கொண்ட அமைப்பை மறு கட்டமைப்பு செய்ய வேண்டியது அவசியம்’ என்பது ஜனநாயகத்தின் ஆணிவேறாகும்.
அதனால்தான், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தி, அதிகாரம் அளிக்கப்பட்ட அரசு கட்டமைப்பை மக்கள் சீர்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். தவறுகள் இருப்பது உறுதியானால், அரசுகள் தூக்கி எறியப்படுகின்றன. புதிய நிர்வாகங்கள் தங்களை நேர்மையாக்கிக் கொள்ளப் போராடுகின்றன. இதெல்லாம், மக்கள் மன்றத்தின் மாபெரும் சாதனைகள் எனலாம்.

நீதித்துறையும் கொலீஜியமும்

எந்த ஒரு மக்களாட்சியாக இருந்தபோதும் நீதித்துறையின் மீதான கட்டமைப்பு மட்டும், ஒரு குறுகிய வட்டத்துக்குள் இருந்து விடுகிறது. ஆட்சிகள், காட்சிகள் மாறினாலும், நீதித்துறையில் மாற்றங்கள் இருக்காது. நீதித்துறையில் ஒவ்வொரு நிலையிலும், நீதிபதிகளே அடுத்தடுத்து தங்கள் பதவிக்கு வரக்கூடிய தகுதியான நபர்கள் யார் என்று அரசுக்கு பரிந்துரை செய்கின்றனர். ஓய்வுபெறவுள்ள நீதிபதிகள் பரிந்துரை செய்யும் நீதிபதிகளே அடுத்த தலைமை நீதிபதிகளாக பதவியை அலங்கரிக்கி்னறனர்.

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிகள் மட்டுமே இந்த நிலையில் வருகின்றனர். மற்றபடி, ஐகோர்ட்களின் தலைமை நீதிபதிகள், சுப்ரீம் கோர்ட் கொலீஜியத்தால் முடிவு செய்யப்படுகின்றனர். இதுதவிர, கொலீஜியம் பரிந்துரை செய்யும் ஐகோர்ட் வக்கீல்கள், மாவட்ட தலைமை நீதிபதிகள் ஐகோர்ட் நீதிபதிகளாகின்றனர். சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் பரிந்துறை செய்யும் ஐகோர்ட் நீதிபதிகள் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாகின்றனர்.

ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்

இந்த வகையில், சுப்ரீம்கோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்த ஒருவரின் தாயார் உடல் நலக்குறைவால், சென்னையில் பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அங்கு தலைமை நீதிபதியின் தாயாரை உடன் இருந்து கவனிப்பது ஐகோர்ட் வக்கீல் ஒருவர். ஏதோ ஒரு வகையில் பாசம். அவ்வளவுதான். இந்தப் பாசத்துக்கு கைமாறாக என்ன வேண்டும் என்று தலைமை நீதிபதி கேட்கிறார். ஐகோர்ட் வக்கீல், தன் ஜட்ஜ் கனவு பற்றி கூறிட, ‘அதுக்கென்ன செஞ்சுட்டாப் போச்சு’ என்கிறார்.
சொன்ன சொல் தவறாத அந்த நீதிபதி, ஐகோர்ட் கொலீஜியத்தின் நீதிபதிகள் குழுவிடம் பேசுகிறார். ‘அவர் என்னோட ஆள். நீங்கள் கட்டாயம் அவரது பெயரை சேர்த்துக் கொள்ள வேண்டும்’ என்று வாய்மொழி உத்தரவிடப்படுகிறது. வாதத்திறமையே இல்லாத வக்கீல், நீதிபதியாக ஐகோர்ட்டுக்குள் நுழைய, கொலீஜியத்தின் மீது முதல் சலசலப்பு ஏற்படுகிறது. இதற்கு ஏற்றார்போல், மேலிட பரிந்துரையால் வந்த நீதிபதி, தான்தோன்றித் தனமாக வழக்குகள் பதிவு செய்து, சுப்ரீம்கோர்ட் வரை தன் அதிகாரத்தைப் பாய்ச்சப்பார்த்து, கடைசியில் பட்ட அவஸ்தை கொஞ்சநஞ்சம் அல்ல.

இது சமீபத்திய கொலீஜிய சிக்கல்

சமீபத்தில் நடைபெற்ற ஐகோர்ட் நீதிபதிகள் நியமனத்திலும், முன்னாள் முதல்வர் வழக்கில் ஆஜரான ஒரே காரணத்துக்காக வக்கீல் ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது சர்ச்சையாகிவிட்டது. அதேபோல், சுப்ரீம் கோர்ட்டின் இப்போதைய நீதிபதி ஒருவரை, தீபக் மிஸ்ரா தலைமையிலான கொலீஜியம் பரிந்துரை செய்தபோது, அதை மத்திய அரசு மறுத்தது. இப்போது சுப்ரீம் கோர்ட்டில் நுழைந்துவிட்ட அந்த நீதிபதி, மத்திய அரசுக்கு எதிரான வழக்கில் தானே சம்மன் அனுப்பி சாட்சியங்களை வரவழைக்கிறார். விசாரிக்கிறார். வழக்கைத் தாக்கல் செய்தவர்கள் சாட்சியங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், சம்பந்தப்பட்ட நீதிபதியே அனைத்துப் பணிகளையும் இழுத்துப்போட்டுச் செய்வது வியப்பான விஷயமாக வலைத்தளங்களில் விவாதிக்கப்படுகிறது.

சரி, கொலீஜியம் அவ்வளவு சக்தி வாய்ந்ததா? அதன் வடிவம்தான் என்ன?

இந்தியா ஒரு குடியரசு நாடாக 1950ம் ஆண்டு, ஜனவரி 26ம் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், அதே ஜனவரி மாதத்தின் 28ம் தேதியில் சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசனத்தின் அதிகாரத்தைப் பெறுகிறது. சுப்ரீம்கோர்ட்டின் அடிப்படை வடிவம் 1935ம் ஆண்டு இந்திய சட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. அரசியல் சாசனத்தின் பிரிவு 124 முதல் 147 வரையிலான 5ம் பகுதியில் இதுகுறித்து விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சுப்ரீம் கோர்ட் என்பது அதிகபட்சமாக ஒரு தலைமை நீதிபதி உட்பட 31 நீதிபதிகள் கொண்டதாக இருக்க வேண்டும் என்று வரையறை செய்யப்பட்டதாகும்.
இந்த 31 நீதிபதிகளில், தலைமை நீதிபதி தவிர, 4 சீனியர் நீதிபதிகள் கொண்டதுதான் கொலீஜியம்

கொலீஜியத்தில் சர்ச்சை ஏன்?

ஜனநாயக நாடான இந்தியாவில், ஜனாதிபதி முதல் பஞ்சாயத்து உறுப்பினர் வரை தேர்தல் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்போது, நீதிபதிகள்தான் நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்ற நெருக்கடியை ஏற்படுத்துகிறது.

இந்தியா முழுவதும் உள்ள ஐகோர்ட்களில் லட்சக் கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றை விசாரிக்கும் வகையில் போதிய நீதிபதிகளை கொலீஜியத்தால் நியமனம் செய்ய முடிவது இல்லை.

நீதிபதிகள் நியனம் தொடர்பாக அரசியல் அமைப்புச் சட்டம் எந்த ஒரு பிரிவும், நிரந்தர தீர்வு கொடுக்காத நிலையில், கொலீஜியம் முறை தன்னை அரசியல் அமைப்பின் உச்ச அதிகாரம் பெற்ற நியமன அமைப்பாக கருதுகிறது.

கொலீஜியத்தின் மூலமாக நீதிபதிகள் நியமனத் தில் சுய விருப்பு வெறுப்புகள் அதிகம் உள்ளதாக 2009ம் ஆண்டு சட்டக் கமிஷன் அதிருப்தி தெரிவித்திருந்தது.

ஒருவரின் தனிப்பட்ட திறமைகளைப் பற்றிய மதிப்பீடு இல்லாமல், தங்களுக்கு விருப்பமானவர்களை நியமிக்க வேண்டும் என்று கொலீஜியம் நெருக்கடி கொடுக்கிறது.

வக்கீல் மகன் வக்கீல், நீதிபதியின் மகன் நீதிபதி, மல்யுத்த வீரனின் மகன் மல்யுத்த வீரன் என்ற கொள்கை அடிப்படையிலான சர்ச்சைக்கே கொலீஜியம் அதிகம் விதைபோடுகிறது.

எனவே, இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளில் எல்லாம் மக்கள் ஆட்சியின் வசம் இருக்கும்போது, நீதித்துறை மட்டும் ஏதோ ஒரு குழுவின் ஆட்சிமையின் கீழ் இருப்பது சரியான தீர்வாக இருக்காது என்பது நீதித்துறை வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.

என்ற நீதிபதிகள் நியமன அமைப்பாகும். இந்த நீதிபதிகள்தான் சுப்ரீம் கோர்ட்டின் திறமையான சீனியர் வக்கீல்கள், மாநில ஐகோர்ட்களின் நீதிபதிகளை, சுப்ரீம்கோர்ட்டில் காலியாக உள்ள நீதிபதிகளின் இடங்களுக்கு நியமிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு (சட்ட அமைச்சகத்துக்கு) பரிந்துரை செய்வார்கள். இந்த பரிந்துரைகளை முதல்முறை வேண்டுமானால் மத்திய அரசு தடுக்கலாம். ஆனால், 2ம் முறை பரிந்துரைகளை சுப்ரீம் கோர்ட்டின் கொலீஜியம் அனுப்பினால், அதை மத்திய அரசு அங்கீகாரம் செய்தாக வேண்டும் என்பது எழுதப்படாத நிபந்தனை.

தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம்!

கொலீஜியத்தின் நடைமுறைகள், ஜனநாயகத்தின் விதிகளுக்கு ஒவ்வாத வகையில் உள்ளதாக தேசிய சட்ட ஆணையம் 20 ஆண்டுகளாக கருதி வருகிறது. இதற்கு மாற்றுத் தீர்வு காணும் முயற்சியில் 2000ம் ஆண்டில் ஆட்சியில் இருந்த மத்திய அரசு ஈடுபட்டது. ஆனால், அதற்குத் தடை போடப்பட்டது. பின்னர் 2009ம் ஆண்டு சட்ட அமைச்சகம் நீதிபதிகள் நியனம் தொடர்பான நடைமுறையில் மாற்றம் செய்ய முயன்றது.
இதன் உருவாக்கமே தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம். நீதித்துறை நியமனத்தில் திறமையும், தகுதியும் இருக்க வேண்டும். சுய விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு நீதிபதிகள் நியமனம் நடைபெற வேண்டும் என்ற நோக்கில், தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு பாராளுமன்றத்தின் லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகியவற்றில் உள்ள எம்பிக்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியாக இருந்த பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலும் பெறப்பட்டது.

முரண்டு பிடித்த சுப்ரீம்கோர்ட்

மக்களால் தேர்ந்ததெடுக்கப்பட்ட நேரடி பிரதிநிதிகளும், மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் ஏக மனதாக ஓட்டளித்து, உருவாக்கிய ஒரு சட்ட ஆணையத்தை சுப்ரீம் கோர்ட் ஏற்க மறுத்தது. தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் என்பது, தன் அதிகாரத்தில் குறுக்கீடு செய்வதாக கூறி, அந்த அமைப்பை அங்கீகரிக்க மறுத்துவிட்டது. அங்கீகரிக்க மறுத்தால் பரவாயில்லை, இந்த ஆணையம் சட்ட விரோதம் என்றும் கூறிவிட்டது. இப்படி ஒரு ஆணையத்தை நிராகரிக்கும் முன்னர் அதை பரீசிலிக்க வேண்டும், ஆனால் சட்ட விரோதம் என்று அறிவித்தது, 130 கோடி மக்களின் ஜனநாயக உரிமையை சுப்ரீம் கோர்ட் அங்கீகரிக்க மறுத்துவிட்டதற்கு சமமான ஒரு செயல் என்றால் அது மிகையானது அல்ல.

தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம்

கொலீஜியத்தின் பாரம்பரிய, அனுபவ பாத்தியதை உரிமைக்கு மாறாக நீதிபதிகள் நியமனம் செய்வதை இந்த ஆணையம் உறுதிப்படுத்தும். அதாவது, சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் கொலீஜியத்தில் உள்ள நீதிபதிகள் நியமன அதிகாரத்தை வரைமுறைப்படுத்தும். அதற்கு பதிலாக தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளை நியமிக்கும். இந்த ஆணையத்தில் மத்திய அரசின் சட்ட அமைச்சர், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மற்றும் சமூகத்தின் பிரதான அந்தஸ்தில் உள்ள 2 பிரபலங்கள் இருப்பார்கள். மொத்தம் ஆறு பேர். இவர்களில் 3 பேர் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உட்பட 2 சீனியர் நீதிபதிகள். விஷயம் அவ்வளவுதான். அதாவது, கொலீஜியத்தில் 5 நீதிபதிகள்! நீதிபதிகள் நியமன ஆணையத்தில் 6 பேர். 3 நீதிபதிகள் தவிர, மத்திய அரசின் சட்ட அமைச்சர் இதில் இருப்பார். இதைத்தான் கொலீஜியத்தால் ஜீரணிக்க முடியவில்லை.
இதனால், தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் தொடர்பான வழக்கில், நீதிபதி கேகர் தலைமையிலான 5 சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கொண்ட, அரசியல் சாசன அமர்வு, விசாரித்து, நீதித்துறையில் அரசின் தலையீடு கூடாது என்று தீர்ப்பளித்தது.

என்னதான் தீர்வு?

கொலீஜியம் என்பது சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகள், தாங்கள் விரும்பும் நபர்களை நீதிபதியாக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பாக உள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இப்போதைய நீதிபதிகளில் ஒருவரான ஜோசப் நியமனத்தில், கொலீஜியம் மற்றும் மத்திய அரசு இடையே நடைபெற்ற மோதல் பிரசித்தம். இப்போது ஜோசப் தன் அதிகாரத்தை சுப்ரீம் கோர்ட்டில் நிருபித்து வருகிறார். ரபேல் வழக்கில் பிரசாந்த் பூஷண் தாக்கல் செய்த வழக்கில், விமானப்படை தளபதிகளை அழைத்து விசாரிப்பது என்று அதிரடிப்பது ஒருபுறம் சிறப்பாக இருந்தாலும், மற்றொருபுறம் இதே நீதித்துறையில் நடைபெறும் பாராமுகம் கவனிக்கத்தக்கது.

சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவி சோனியா, இப்போதைய தலைவர் ராகுல் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளது என்று கூறிய கோர்ட், அவர்களுக்கு ஜாமீன் வழங்கி சிறப்பித்துள்ளது. இப்போது ஆயிரம் நாட்களுக்கு அப்பாலும் ஜாமீன் நீட்டிப்பு கிடைத்துள்ளது.

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க தொடர் தடை, கைதுக்குத் தடை என்று நீதித்துறையின் இன்னொரு முகம் மெல்ல வெளிப்படுகிறது. ‘முக மதிப்பு’ (பேஸ் வேல்யூ) என்பது கொலீஜியத்துக்கும் பொருந்தும் என்ற நிலையில், இதை சீர் படுத்தப்போவது யார்? ஜனநாயகத்தின் காவலர்களான மக்கள்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

(Visited 16 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *