சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

மகா பெரியவா…

ஒரு நாள் காலை மகாலட்சுமி (பெரியவாளின் தாயார்) கண் விழித்தபோது, பக்கத்தில் சுவாமிநாதனைக் காணவில்லை. வீடெல்லாம் தேடியாகிவிட்டது. ஊர் மூலைகளெல்லாம் துழாவி வந்தாகிவிட்டது காணோம். ‘‘ஒருவேளை சிநேகிதன் கிருஷ்ணஸ்வாமி வீட்டுக்குப் படிக்க சென்று விட்டானோ?’’ என்றுபோய்ப் பார்த்தால், முதலுக்கே மோசம், நண்பனையும் காணோம்!

மடத்தில் இருக்கா!

இரண்டு குழந்தைகளையும் தேடி ஊரே அல்லோலகல்லோலப் பட்டது. அந்த சமயத்தில் மடத்திலிருந்து ஒரு ஆள் வந்து, ‘‘குழந்தைகள் மடத்துக்கு வந்தார்கல் பத்திரமாக இருக்கிறார்கள். சுவாமிகள் உங்களிடம் சொல்லிவிட்டு வரச் சொன்னார். நாலு நாட்கள் வைத்திருந்து அப்புறம் குழந்தைகளை அனுப்புவதாகச் சொன்னார்!’’ என்றார். இதைக் கேட்ட பெற்றோருக்கு எதுவும் புரியவில்லை. ‘‘எதற்காக அத்தனை பெரிய குரு இத்தனை சின்னக்குழந்தைகளை விடாமல் வைத்துக் கொள்ள வேண்டும்?’’என்பது புதிராக இருந்தது.

பரமகுருவின் ஞான திருஷ்டி!

உண்மை இதுதான். ஒரு நாள் சுவாமிநாதன், ஜகத்குருவாக மலர்ந்து காமகோடி பீடத்தை அலங்கரிக்கப் போகிறார், தன்னுடைய முடிவும் நெருங்கிவிட்டது. பின்னால் இவனுடன் சில நாட்கள் சேர்ந்திருக்க வாய்ப்பு கிடைக்கப் போவதில்லையே? அந்த ஆசையை நாலு நாளாவது வைத்துக்கொண்டு தீர்த்துக் கொள்ளலாம் என்று பரம குருவானவர், தீர்க்க திருஷ்டியுடன் முடிவு செய்திருக்க வேண்டும். சுவாமிநாதன் அவரை பெருமுக்கலில் பார்த்ததற்கு அடுத்து அவர் ஸாரம் என்ற இடத்துக்குப் போய்விட்டார்.

குழந்தை சுவாமிநாதனின் பிரியம்!

இந்தக் குழந்தைக்கோ அவரைப் பார்த்தது முதல் வீட்டில் இருப்பே கொள்ளவில்லை. உடனே, சொல்லாமல் கொள்ளாமல் துணைக்கு
சிநேகிதனையும் அழைத்துக் கொண்டு அங்கே போய் விட்டான். ஆச்சார்யரோ, ‘‘முதலில் ஆத்திலே சொல்லிட்டு வந்தாயா?’’என்று கேட்டார். ‘‘இல்லை ஸ்வாமி! உங்களைப் பாக்கணும்னு தோணித்து: உடனே கிளம்பி வந்துட்டேன்.’’ என்கிறான் குழந்தை. இதற்காக குரு சந்தோஷப்பட்டாராம்.
ஏனெனில், இப்படி வீட்டையும் வாசலையும் விட்டு வரவாதானே அவருக்கு வேணும்!

தந்தையின் கவலை!

எல்லா தகப்பனாரையும் போல் தன் பிள்ளை டாக்டராக அல்லது இன்ஜினீயராக வர வேண்டுமென்று தந்தை சுப்ரமண்ய சாஸ்திரிகள் ஆசைப்பட்டார். இத்தனை சின்ன வயசில் இப்படி மடத்தை நோக்கி ஓடினால் எந்தத் தந்தைதான் கவலைப்படமாட்டார்?
‘‘இது என்ன தேறுமா… தேறாதா? படிப்பு கிடிப்பு வருமா?’’ என்ற பயம் அவரை உலுக்கியது. உடனே சிநேகிதன் கிருஷ்ணஸ்வாமியின் அப்பா வெங்கட்ராமனைத் தேடிப் போனார். அவர் ஒரு சிறந்த ஜோதிடர். மேலும்சுப்ரமண்ய ஐயருக்கு நெருங்கிய நண்பர்.

ஜோசியரின் கணிப்பு!

‘‘வெங்கட்ராமா! சுவாமிநாதன் ஜாதகத்தைக் கொஞ்சம் பாரு. இவனுக்கு ஜாதகம் எப்படி இருக்கு?’’ என்று காட்டினார். அதைப் பார்த்ததும் ஜோசியருக்குப் பேச்சே வரவில்லை. சுவாமிநாதன் சாட்சாத் ஈஸ்வரன் என்று தெரிந்தது. ஆனால், ஆவலோடு பார்த்துக் கொண்டிருக்கும் நண்பனுக்கு ஏதாவது சொல்ல வேண்டும்.
அதனால், ‘‘சுப்ரமண்யா! நீ உன் பிள்ளையைப் பற்றிக் கவலையேபடாதே. நம்மைப் போன்றவர்கள் வீட்டில் பிறக்கும் குழந்தையாகத் தெரியவில்லை. இவன் ஜாதகத்தில் பெரிய ராஜாக்களுக்கு உண்டான யோகமெல்லாம் இருக்கு. சக்ரவர்த்தியாக உலகமே கொண்டாட வாழப் போகிறான்!’’ என்று பேசினார்.

சாட்சாத் ஈஸ்வர அவதாரம்!

வெறும் ராஜாவாகவா மாறினார்! உலகை உய்விக்க வந்த யதிராஜராக அல்லவா ஒளி வீசினார்!
அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல், கால் ரேகைகளையும் பார்க்க ஆவல் கொண்ட ஜோசியர், அங்கிருந்த சுவாமிநாதனிடம், ‘‘போ, கால் அலம்பிண்டு வா’’ என்று கட்டளையிட்டார். அலம்பிக் கொண்டு வந்தவனை, நாற்காலி ஒன்றில் அமர்த்தி அழுக்கு ஒட்டிக் கொண்டிருந்த காலில் தண்ணீர் விட்டுத் தன் கையாலேயே அலம்பினார்…. துடைத்தார். சற்று தூக்கிப் பார்த்தார். அப்படியே கெட்டியாய் பிடித்துக் கொண்டு அழுதார். காலை விடவேயில்லை.
‘‘விடுங்கோ மாமா!’’ என்ற சிறுவனின் குரலோ, ‘‘என்ன இது! குழந்தை காலை பிடிச்சுண்டு…விடு’’ என்ற சுப்ரமணிய சாஸ்திரியின் குரலோ ஜோசியர் காதில் விழவேயில்லை. அது என்ன விடக்கூடிய காலா! பின்னாலே இதனடியில் விழமக்கள் க்யூவிலே நிற்கப்போகிறார்கள் என்று நினைத்தார் போலும்.
காலில் உள்ள சங்கு சக்கர ரேகைகள், மகர ரேகை, தனுர் ரேகை, பத்ம ரேகை எத்தனை உண்டோ, அத்தனையும் ஒரு அவதார புருஷன் அவர் என்று கட்டியம் கூறிக் கொண்டு பளிச்சென்று அவர் கண்ணுக்குப்புலப்பட்டன.
முதன் முதலில் பெரியவாளுக்குப் பாத பூஜை பண்ணும் பாக்கியம் இந்த வெங்கட்ராமய்யருக்குத்தான் கிடைத்தது. நல்ல கைராசிதான்! விஷ்ணுவுக்கும் கிடைக்காத பாதத்தை இவர் பார்த்து விட்டார் என்றால், இவர் பாக்கியமே பாக்கியம்!
மஹா பெரியவா திருவடிகள் சரணம்

(Visited 10 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *