சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

மாயமாகும் கோயில் சொத்துக்கள்!

தமிழில் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் என்ற படம் 1955ம் ஆண்டு வெளிவந்தது. இதில், கொள்ளையர்களின் குகைக்குள் செல்வது பெரிய திரில்லிங்கான அனுபவமாக காண்பித்து இருப்பார்கள். ‘அண்டாகா கசம்… அபூகா ஹூசும்… திறந்திடு தீசேம்’ என்ற வசனம் ரொம்பவும் பிரசித்தம். அலிபாபா உள்ளே போய் பார்க்கும்போது, கொள்ளையடிக்கப்பட்ட தங்கம், வைரம், நவரத்தினங்கள், வெள்ளி என்று குவியல் குவியலாக சேர்த்து வைக்கப்பட்டிருக்கும்.

இந்து அறநிலைய துறை!

ஏறக்குறைய இந்தப் படத்தில் கொள்ளையர்களின் செயல்களுக்கு கொஞ்சமும் குறைவில்லாத வகையில், இன்றைக்கு இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் உள்ளது. ஒரே ஒரு சின்ன வித்தியாசம். அலிபாபா படத்தில் பிற இடங்களில் இருந்து கொள்ளையடித்த பொருட்களை, குகைக்குள் கொள்ளையர்கள் சேர்த்து வைத்தனர். ஆனால், கோயில்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட அறநிலையத்துறை, கொள்ளையர்களின் குகையில் உள்ளதைவிட மிகப் பெரிய அளவில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இதுவரை நிகழ்த்தியுள்ள கொள்ளையின் மதிப்பு என்ன என்பதே மதிப்பிட முடியாததாக உள்ளதுதான் வேதனை.

கணக்கு என்ன?

சர்வ வல்லமை பொருந்திய அரசுத்துறையின் கட்டுப்பாட்டில் 37 ஆயிரம் கோயில்கள் உள்ள நிலையில் அவற்றை எப்படி எல்லாம் பாதுகாத்து பராமரிக்க வேண்டும். இவற்றின் சொத்துக்கள் நில புலன்களாக 4 லட்சத்து 78 ஆயிரத்து 347 ஏக்கர் உள்ளதாக அறநிலையத்துறை கூறுகிறது. நல்லா ஞாபகம் வெச்சுக்கோங்க, இந்த சொத்துக்களில் இருந்து ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வருமானம் வருகிறதாம். ஆனால், கண்ணுக்கு முன்னால் பல ஆயிரம் கோடி ரூபாயை அறநிலையத்துறை அதிகாரிகள், தனியாருடன் சேர்ந்து கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றனர்.

சிலை கடத்தல்!

சரி, சம்பளம் கிடைக்கவில்லை. ஊழல் செய்கின்றனர் என்று நீங்கள் ஆறுதல் சொல்லலாம். ஆனால், அரசுத் துறையில் உள்ள அறநிலையத்துறை ஊழியர்களுக்கு மாதம் 1ம் தேதிக்குளுள் சம்பளம் கிடைத்துவிடுகிறது. படியளந்த கடவுளுக்கு விசுவாசமாக இருக்க வேண்டாமோ இந்த ஊழியர்கள். மாறாக, படியளக்கும் கடவுளையே விற்று, கல்லா கட்டும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பது எவ்வளவு கேவலமான விஷயம். ஆனாலும், இதைச் செய்வதில் அவர்கள் கேவலம் பற்றி வெட்கப்படுவது இல்லை. மாறாக, கிறிப்டோ கிறிஸ்தவர்கள் உதவியுடன் மிகவும் தத்ரூபமாக இந்த சிலை கடத்தல்களை செய்து கொண்டிருக்கின்றனர்.

வெட்ககேடு!

இந்த சிலைக்கடத்தல்காரர்கள் கோயிலின் நிர்வாகிகளாக இருப்பது இன்னமும் வேதனையான, வெட்கக்கேடான ஒரு விஷயம். இப்படிப்பட்ட திருடர்களைப் பாதுகாப்பதில் அரசு காண்பிக்கும் அக்கறை, மூன்றாம் தரமான செயல்பாடு என்று சொல்ல வேண்டும். இந்த வகையில், சிலைக்கடத்தல் வழக்கில் அறநிலையத்துறை அதிகாரிகளான கவிதாவும், திருமகளும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு, ஜாமீனில் உள்ளனர்.

சிக்கிய கவிதா!

இவர் பரம்பரை கோடீஸ்வரரும் இல்லை. பெரும் பணக்காரரும் இல்லை. ஆனால், இவரது மகன் மித்ரன் இரும்புத்திரை என்ற படத்தைத் தயாரித்தார். சிலைக் கடத்தல் வழக்கில் கைதானபோது கவிதா அறநிலையத்துறையின் கூடுதல் கமிஷனராக இருந்தார். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமஸ்கந்தர் சிலை செய்ததில் கவிதாவின் ஊழல் அபாரமானது.
சோமஸ்கந்தர் சிலை சேதமாகிவிட்டதாக கூறி, 50 கிலோ எடையில் 2 கோடியே 12 லட்சம் செலவில் சிலை உருவாக்கப்பட்டது. ஐம்பொன் சிலை என்றாலும், துளிகூட பொன் இல்லாமல் உருவாக்கப்பட்டதை, சிலைக்கடத்தல் வழக்கை விசாரித்து வரும் ஐஜி பொன் மாணிக்கவேல் கண்டு பிடித்தார். கிட்டத்தட்ட 5.75 கிலோ தங்கத்தை கவிதா தலைமையிலான குழுவினர் ஸ்வாகா செய்துள்ளனர். அண்ணாமலை என்ற பக்தர் தொடர்ந்த வழக்கில், பொன் மாணிக்க வேலுக்கு ஐகோர்ட் உத்தரவிட, கவிதா சிக்கிக் கொண்டார்.

வழக்கு!

கவிதாவுடன் சேர்ந்து ஸ்தபதி முத்தையா, கோயிலின் செயல் அதிகாரி மற்றும் 9 பேர் மீது வழக்குப் பாய்ந்துள்ளது. இதுதான் கவிதாவைப் பற்றிய முதல் செய்தி. ஆனால், காஞ்சிபுரத்தில் அறநிலையத்துறைக்குச் சொந்தமான இரட்டைத் திருமாளிகை சேதமடைய, சீரமைக்க 80 லட்சம் ரூபாயை அறநிலையத்துறை ஒதுக்கியது. மாளியைகயின் கீழ் பகுதியை கட்டமைக்க கூடுதலாக 65 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. திருப்பணிகளின்போது, இங்கிருந்த கலைநயம் மிக்கத் தூண்களை கவிதா, திட்டமிட்டே விற்று காசு பார்த்ததாக அறநிலையத்துறையில் உள்ள உண்மையான இந்துக்கள் மனம் குமுறுகின்றனர்.

மகன் மித்ரனின் சினிமா கனவு!

இதுஒருபுறம் இருக்க, அறநிலையத்துறை முறைகேட்டில் கவிதாவின் செயல்பாடுகள் எல்லாம் திரைமறைவுக்குள் நடப்பவை என்றும், இதனால், ஈட்டிய பெரும் பொருளைக் கொண்டுதான் தன் மகன் மித்ரனிடம் சினிமாத் தயாரிப்பில் முதலீடு செய்ததாகவும் காதைக் கடிக்கின்றனர். இதற்கு இதுவரை எந்த பதிலும் இல்லை. கவிதாவின் கைது அறநிலையத்துறையில் ஊழலில் மிதந்த அதிகாரிகளுக்கும், ஆளும் கட்சிகளாக இருந்த கட்சிகளுக்கு எடுபிடிகளாக இருந்த அதிகாரிகளுக்கும் கலக்கத்தை ஏற்படுத்த, அடுத்தக்கட்ட நடவடிக்கை தங்கள் மீதுதான் என்பதை புரிந்து கொண்டனர்.

திருமகள்!

இதில் வாண்டடாக வந்து வண்டியில் ஏறியவர் திருமகள். அறநிலையத்துறையின் கூடுதல் கமிஷனராக இருந்த திருமகளுக்கு, சக அதிகாரியான கவிதாவின் கைது கலவரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, துறையில் உள்ள ஊழியர்களை தூண்டிவிட்டு போராட்டத்துக்கு வழி செய்தார். கவிதாவை கைது செய்த ஐஜி பொன் மாணிக்க வேலை சகட்டு மேனிக்குத் திட்டித் தீர்த்தார். பேருக்குத்தான் அவர் இந்து. ஆனால், திருமகள் என்ற பெயரில் இந்து மதத்துக்கு புறம்பான வேலைகளை செய்து, காசு பார்ப்பதில் திருமகள் கில்லாடி.

காணாமல் போன புன்னைவன மயில்!

நின்று கொல்லும் தெய்வம், தன் அடுத்த ரவுண்ட் ஆட்டத்தில் திருமகளை சிக்க வைத்தது. சென்னையின் பிரபலமான மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் 2004ம் ஆண்டு திருப்பணிகள் நடைபெற்றது. அப்போது பழமையான புன்னைவன நாதர் சன்னதியில் மயில் சிலை வாயில் பூவுடன் காட்சியளிக்கும். இதுதவிர அங்கிருந்த ராகு, கேது சிலைகளும் மிகவும் பழமையானவை. ஏறக்குறைய அவை மரகத கற்களால் உருவாக்கப்பட்டவை என்ற செய்தியும் உண்டு.
2004ம் ஆண்டு திருப்பணிகளின்போது, புன்னைவனநாதர் சன்னதியில் இருந்த பழமையான மயில் சிலையை அகற்றிவிட்டு, புதிய சிலை, வைக்கப்பட்டது மயிலின் அலகில் பாம்பு இருப்பது போன்ற சிலை அமைக்கப்பட்டது. பழமையான சிலைகள் அகற்றப்பட்டால், அவை ஆகம விதிகள் படி புதைக்கப்பட வேண்டும். ஆனால், அவ்வாறு செய்ததற்கான ஆதாரங்கள் இல்லை.

தலைமறைவு!

இந்நிலையில், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன், ஐகோர்ட்டில் இதுகுறித்து முறையிட, சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு கோயிலுக்குள் நுழைந்தது. இந்தப் பிரச்னையில் திருமகள் வலுவாக சிக்கிக் கொள்ள ஒரு முக்கியக் காரணம், அறநிலையத்துறையில் 3 இணைக் கமிஷனர்கள் திருமகளுக்கு எதிராக தங்கள் வாக்குமூலத்தை வலுவாக கொடுத்துள்ளனர். இதையறிந்த திருமகள் ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் என்று தன் முன் ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்ய, அனைத்தும் ரத்தாகிவிட்டது. இதனால் தலைமறைவானார்.

எனக்கு ஒன்றுமே தெரியாது!

மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை என்று தமிழில் பழமொழி உண்டு. திருமகள் நேர்மையான அதிகாரியாக இருந்திருந்தால், வழக்கை நேர்மையாக எதிர் கொண்டிருப்பார். ஆனால், போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கிக் கொண்டதால், தலைமறைவானார். இதற்கு முக்கியக் காரணம், 2004 கபாலீஸ்வரர் கோயில் திருப்பணிகள் விசாரணையின்போது, திருமகள் சிலைக்கடத்தல் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், ‘‘அப்படியா? கபாலீஸ்வரர் கோயிலில் புன்னைவனநாதர் சன்னதியில் எந்த ஒரு திருப்பணியும் நடக்கவில்லை. அப்படியிருக்கும்போது எப்படி சிலைகள் மாற்றப்பட்டிருக்கும்? எப்படி சிலைகள் மாற்றப்பட்டு இருக்கும்?’

கடவுளின் திருவிளையாடல்!

திகைத்து நின்ற போலீசாருக்கு, பக்தர் ஒருவர் 2004ம் ஆண்டு திருப்பணிகள் நடைபெற்ற வீடியோவைக் கொடுக்க, திருமகளுக்கு கெட்ட நேரம் தொடங்கியது. அந்த வீடியோவில் புன்னைவனநாதர் சன்னதியில் திருப்பணி நடைபெற்றதும், அந்தப் பணியில் அப்போது அங்கு பணியில் இருந்த திருமகள் கலந்து கொண்டதும் வெட்ட வெளிச்சமானது. இதனால், தப்பிக்க வழியின்றி தவித்துக் கொண்டிருந்தார். தலைமறைவானார். போலீசாரிடம் இருக்கும் ஆவணங்கள் பொய் என்பவரின் வாய், நித்தமும் பொய்யில் உழல்வதாக அறநிலையத்துறையில் கூறுகின்றனர்.

பரஸ்பர உதவி!

அறநிலையத்துறையில் உள்ள பல உதவி கமிஷனர்கள், இணை கமிஷனர்களை மிரட்டி தனக்கு சாதகமாக காரியம் சாதித்துக் கொள்வதில் கவிதாவுக்கு முன்னோடியாக திருமகள் வலம் வந்துள்ளார். ஆனால், இதில் அவர்களுக்குள் ஒரு நல்ல புரிந்துணர்வு என்னவென்றால், ஊழல் விஷயத்தில் ஒருவரை ஒருவர் போடுக் கொடுக்காமல், தங்கள் நிர்வாகத்தில் உள்ளவர்களை காப்பாற்றிக் கொண்டு வந்தனர் என்பதுதான்.

தப்புவாரா பொன் மாணிக்கவேல் ஐயா!

இப்போது ஐஜி பொன் மாணிக்கவேலின் நடவடிக்கைகள் ஆளும் கட்சியினர் மட்டும் இன்றி எதிர் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் பெரிய கருப்பண் வரை பாயும் என்ற நிலையில், பொன் மாணிக்கவேலை முடக்குவதற்கு சாம, பேத, தண்ட வழி முறைகளை போலீசாரே இப்போது கையில் எடுத்துள்ளனர். ஐயா காவலர்களே… நீங்கள் மட்டுமல்ல, உங்களை இயக்கும் அரசுக்கும் சம்பளம் கொடுப்பது 85 சதவீத இந்துக்கள்தான். உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பார்க்காதீர்கள்.

(Visited 23 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *