சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

ரஜினி வந்துட்டார்!

45 வயதில் பதவி வந்தபோது
ஆசை படாத நான் 67 வயதில்

ஏன் வருகிறேன்?

தமிழ்நாட்டில் இப்போது ஒரு அரசியல் புரட்சி தேவைப்படுகிறது.
என் கடமையை செய்யவே வந்திருக்கிறேன். நான் இந்த முயற்சியை எடுக்காவிட்டால் என்னை குற்ற உணர்வு கொல்லும். அரசியல் கட்சி தொடங்கி 234 இடங்களிலும் நிற்போம்.

ஊழலுக்கு எதிரான போர் இது…

கடந்த 20 ஆண்டுகளாக எழுப்பப்பட்ட கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனிக்கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். இது தமிழக அரசியலில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
தான் அரசியலுக்கு வருவதை ரசிகர்கள் முன்னிலையில் உறுதிப்படுத்திய ரஜினி, ‘வரும் சட்டப்பேரவை தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நிற்க முடிவு செய்துள்ளேன். இது காலத்தின் கட்டாயம். உள்ளாட்சி தேர்தலுக்கு கால அவகாசம் இல்லாதாததால் போட்டியிடவில்லை” என்று அறிவித்திருந்தார்.
தனிக்கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துள்ள ரஜினி, அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவாரா? 50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியை வீழ்த்துவாரா? என்பது போன்ற கேள்விகளும், எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளன.
இந்த எதிர்பார்ப்புகள் நிஜமாகுமா என்பது போகப்போகத்தான் தெரியும்.
ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் வாழ்த்தும், எதிர்ப்பும்:

கர்நாடக முதல்வர் சித்தராமையா

ரஜினிகாந்த் சிறந்த மனிதர். அவர் அரசியலில் நுழைவது நல்ல விஷயம்.

கர்நாடக அமைச்சர் தினேஷ் குண்டுராவ்

ரஜினிகாந்த் அரசியலில் நுழைந்தது எதிர்பார்த்த ஒன்றுதான். அவரது வருகை கர்நாடக அரசிய லில் எந்த பாதிப்பை யும் ஏற்படுத்தாது.

தமிழக முதல்வர் கே.பழனிசாமி

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அதிமுக உயி ரோட்டமுள்ள கட்சி. அதனை யாராலும் அழிக்க முடியாது. அதிமுகவை அழிக்க இதுவரை யாரும் பிறக்கவில்லை, இனி பிறக்கப் போவதும் இல்லை.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அரசியலுக்கு வருவதற்கு ரஜினி உட்பட அனைவருக்கும் உரிமை உண்டு. தனிக்கட்சி ஆரம்பிப்பதோ, தேர்தலில் போட்டியிடுவதோ அவரவரின் தனிப்பட்ட உரிமை. ரஜினியை ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாததும் மக்களின் விருப்பம்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

ரஜினி ரசிகர்கள் அனைத்து கட்சிகளிலும் உள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகள் உள்ளன. திமுக, அதிமுக போன்ற திராவிட கட்சிகள் உள்ளன. அதையும் தாண்டி வாக்குகளை அவர் பெற முடியுமா என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள். மக்கள் தான் இறுதி எஜமானர்கள்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி

வாழ்கையின் விதியே மாற்றம் என்பதுதான். ரஜினியின் அரசியல் பிரவேசம் என்பது தமிழக அரசியல் சூழ்நிலையைப் பொறுத்தவரை வரவேற்புக்குரிய ஒன்று.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்

ரஜினிகாந்த் தனது ரசிகர்களுடைய நீண்ட கால எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அதற்காக, எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளை யும் தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுகவைப் பொறுத்தவரையில், சாதக, பாதகங்கள் பற்றி என்றைக்கும் கவலைப்பட்டது கிடையாது. ஏற்றுக் கொண்டுள்ள கொள்கைகளின் வழியில் நின்று, தன்னுடைய வெற்றிப்பாதையை திமுக நிச்சயம் அடையும்.

தமிழக காங்கிரஸ் தலைவர்  சு.திருநாவுக்கரசர்

தனிக்கட்சி தொடங்கப்போவதாக ரஜினி அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். ஜாதி, மதமற்ற ஆன்மிக அரசியலே தனது நோக்கம் என ரஜினி கூறி யிருக்கிறார். பாஜகவை அவர் ஆதரிக்க வாய்ப்பில்லை. நான் அறிந்த வரை ரஜினியை யாரும் கட்டாயப்படுத்த முடியாது.

எந்த முடிவையும் சுயமாக எடுக்கக் கூடிய திறமையும், அறிவும் அவருக்கு உண்டு. எனவே, அவரது அரசியல் வருகையின் பின்னணியில் பாஜக இருப்பதாக நான் நினைக்கவில்லை.

பாஜக மாநில தலைவர்  தமிழிசை சவுந்தரராஜன்

துணுச்சலுடன் அரசியல்களத்துக்கு வருகி றேன் என அறிவித்திருக்கும் சகோதரர் ரஜினிக்கு வாழ்த்துகள். வருங்கால திட்டங்களை அவர் எவ்வாறு தீட்டுகிறார் என்பதை, பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வுக்கு ஆதரவாகத்தான் ரஜினி முடிவெடுப்பார் என்று நான் கருதுகிறேன்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி

எந்த ஓர் அமைப்பும், யாரும் அரசியலுக்கு வரலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை.

ஆனால், அதே நேரத்தில், அவர்கள் அரசியலுக்கு வந்து கட்சியைத் தொடங்கும்போது, அந்தக் கட்சிக்கு என்ன கொள்கை? என்ன செயல் முறை? எதை நோக்கி அவர் பயணம் செய்கிறார்? என்பதைப் பொறுத்துத்தான் அந்தக் கட்சிக்கு மக்களுடைய வரவேற்போ, எதிர்ப்போ இருக்கும். ரஜினியின் ஆன்மிக அரசியல் என்ற அறிவிப்பு அவரது குழப்பத்தைத்தான் காட்டுகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்

ரஜினியின் அரசியல் வருகையை வரவேற்கிறேன். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஆளும் அதிமுக அரசு மத்திய அரசின் பினாமியாக மாறி இருக்கிறது. மாநில மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு என்பது தொடர்பாக ரஜினி தனது கொள்கையை அறிவிக்க வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்  இரா.முத்தரசன்

ஆன்மிக அரசியல் என்று ரஜினி கூறியிருக்கிறார். ஆன்மிகம் வேறு. அரசியல் வேறு. இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது அல்ல. அரசியலில் ஆன்மிகம் தலையிடக்கூடாது. ஆன்மிகத்தில் அரசியல் தலையிடக்கூடாது. ஆன்மிக அரசியலை அரசியலில் புகுத்த முடியாது. புகுத்தவும் கூடாது.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்

ரஜினியின் ஆன்மீக அரசியல் மதவாதத்தி லிருந்து வேறுபட்டது, விலகி நிற்கக்கூடியது என் பதை எதிர்காலத்தில் அவருடைய செயல்பாடுகள் தான் உறுதிப்படுத்த வேண்டும்.
சாதி மத சார்பற்ற என்னும் அரசியல் நிலைப் பாட்டிலிருந்து தனக்கு பின்னால் சாதியவாதிகளோ, மதவாதிகளோ இல்லை என்பதை அவர் உறுதிப் படுத்துகிறார். அவரது நிலைப்பாடுகளை வரவேற்கவும் வாழ்த்தவும் கடமைப்பட்டிருக்கிறோம்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்

மக்கள் பணியை அவர்களின் எண்ணங்களுக்கு ஏற்றார்போல் செய்தால், பொதுவாழ்வில் மக்களின் அங்கீகாரம் கிடைக்கும். ரஜினி பல நேரங்களில் அரசியல் வியூகங்களில் வெற்றி கண்டவர். ரஜினிக்கு அரசியல் ஆழம் தெரியும். அவரை யாரும் இயக்க முடியாது.

டிடிவி. தினகரன்

அரசியல் துறைக்கு ரஜினி வந்தி ருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மக்கள் ஏற்றுக்கொண்டால்தான் எந்த இயக்கமும் தொடர்ந்து செயல்பட முடியும். அரசியலில் வெற்றி என்பது மக்கள் மனதில்தான் உள்ளது.

திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன்

தனது முதல் அம்பை இந்த ஆட்சியின் மீது எறிந்துவிட்டுத்தான் ரஜினி வருகிறார். அவருடைய கனவு, லட்சியத்தைத் தேடுகிறது என்று தெரிகிறது. ரஜினியின் அரசியல் வருகையை வரவேற்கிறோம்.

நடிகர் கமல்ஹாசன்

சகோதரர் ரஜினியின் சமூக உணர் வுக்கும், அரசியல் வருகைக்கும் வாழ்த்துகள்.

நடிகர் விவேக்

அதிர்ச்சி. ஆனால் ஆனந்த அதிர்ச்சி அளித்து விட்டார் ரஜினி. இனி அவர் பின் வாங்கக் கூடாது.

சீமான்

ரஜினிகாந்த் நடிகராக படங்களில் நடிப்பதில் பிரச்சினை இல்லை. அவர் தலைவராகி ஆள்வதில்தான் சிக்கல் இருக்கிறது. இந்த மண் சார்ந்த மகன்தான் இந்த மண்ணை ஆள வேண்டும். அவரது வருகை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. அவரை கடுமையாக எதிர்த்து நாங்கள் அரசியல் செய்வோம்.

இந்திய ஜனநாயக கட்சியின்  நிறுவனத் தலைவர் பாரிவேந்தர்

தேசப்பற்றும், நேர்மறையான சிந்தனையும், நல்ல உள்ளமும் கொண்ட அரசியல் தலைவர்களுக் கான பஞ்சம் தமிழகத்தில் நிலவுகிறது. இந்நேரத்தில் ரஜினிகாந்தின் அரசியல் நுழைவு ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.

பச்சை தமிழகம் கட்சித் தலைவர் சுப.உதயகுமார்

எந்த அரசியல் கொள்கையும் இல்லாதவர் ரஜினி. தனது திட்டங்கள், கொள்கைகள் குறித்து அவர் சொல்ல வில்லை. வேற்று மாநில நடிகர் எங்களுக்குத் தேவையில்லை. அவரை நாங்கள் வரவேற்கவில்லை. கடுமையாக எதிர்ப்போம்.

மு.க. அழகிரி

ரஜினிகாந்தின் அரசியல் வருகை யால் தமிழகத்தில் மாற்றம் ஏற்படும். அவரின் எண்ணங்கள், திட்டங்கள் வெற்றி பெற வாழ்த்துகள்.

பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி

‘‘ரஜினிக்கு தமிழகத்தைப் பற்றிய எந்த விவரமும் தெரியாது. தமிழக மக்கள் புத்திசாலிகள். ரஜினியை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். அவர் வந்தாலும் வராவிட்டாலும் தமிழக அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படாது. ரஜினியுடன் கூட்டணி வைக்க பாஜக முயன்றால் கட்சியிலிருந்து விலகுவேன்.

எஸ்.வி.சேகர்

பேரும் புகழும் ரஜினிக்கு தேவை இல்லை,அதிகாரத்தையும் துஸ்பிரயோகம் செய்ய வாய்ப்பு இல்லை…

கருணாநிதி 90 வயது வரை முதலமைச்சராக தான் இருந்தார். அப்படி இருக்கும்போது ஏன் ரஜினிகாந்த 67 வயதில் ஆக முடியாது? அவருக்கு அரசியல் தெரியும். அவர் வரட்டும் வரவேற்கிறேன்.

(Visited 33 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *