சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

வெற்றி கூட்டணி

‘அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை’ என்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பிரபலமான ஒரு பழமொழி. காரணம், எதிரும், புதிருமாக இருந்த கட்சிகள் பல, அரசியல் சதுரங்கத்தில் தங்கள் இடங்களைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, இடம், பலம் பார்த்து கை கோர்த்துக் கொள்ளத் தொடங்கியுள்ளன.

 

வரும் ஏப்ரல் & மே மாதங்களில் நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலை மையமாக வைத்து, உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தேர்தல் கூட்டணிக் கணக்குகள், மற்றக் கட்சிகளைவிட, ஆளும் கட்சியான பாஜகவுக்கு கூடுதல் சாதகங்களை கொடுத்துள்ளது பட்டவர்த்தமான உண்மை.

 

பிரதமர் மோடியின் துணிச்சல்!

இந்தியாவில் இதுவரை நடைபெற்ற லோக்சபா தேர்தல்களில், தேர்தலுக்குப் பின்னர் அதிக இடங்களைப் பிடித்த தனிப்பெரும் கட்சியாக பாஜக கடந்த 2014ம் ஆண்டு லோக்சபாவுக்குள் நுழைந்தது. குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்தபோது, தனக்குக் கிடைத்த நிர்வாக அனுபவங்களை, அப்படியே இந்தியாவுக்குப் பொறுத்திப் பார்த்த பிரதமர் நரேந்திர தாமோதர்தாஸ் மோடி, நாட்டின் வளர்ச்சிக்காக பல ரிஸ்க்கான நடவடிக்கைகளை துணிந்து மேற் கொண்டார்.

காரணம், லோக்சபா தேர்தலில் அவருக்குக் கிடைத்த தனிப் பெரும்பான்மை காரணமாக, கடும் விமர்சனங்களைப் பொருட்படுத்தாது, பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற மாற்றங்களைக் கொண்டு வந்தார். இதனால், நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையான நிதி திரண்டது. ஆனால், 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கை கோர்த்த பல கட்சிகளுக்கு அவரது செயல், அதிர்ச்சியைக் கொடுத்தது. பாரபட்சம் இல்லாத நிர்வாகம் காரணமாக கையைச் சுட்டுக் கொண்ட, சந்திரபாபு நாயுடு உட்பட சிலர், அவரது கூட்டணியில் இருந்து வெளியேறினர். மஹாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனாவும் பாஜகவுக்கு எதிராக கொடி பிடிக்கத் தொடங்கியது. ஆஹா, மோடிக்கு எதிரான அலை தொடங்கியுள்ளது. இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எதிர்கட்சிகள் துடித்தன.

வாசல் திறந்த பாஜக!

ஆனால், பாஜகவின் கணக்கு வேறு மாதிரியாக இருந்தது. பீகார் மாநிலத்தில் ராஷ்ட்ரிய ஜனதா கட்சிக்கு எதிரான கட்சியாக செயல்படும் ஐக்கிய ஜனதாதளம் மோடியுடன் கை கோர்க்க முடிவு செய்தது. தமிழகத்தில் திமுக + காங்கிரஸ் கூட்டணி அமையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிரடியாக அதிமுக + பாமக + பாஜக கூட்டணி உருவானது. இந்தக் கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணையும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதுமட்டுமல்லாமல், எந்த மஹாராஷ்ட்ராவில் சிவசேனா கட்சி குடைச்சல் கொடுக்கிறதோ, அதேக் கட்சியை தன் லோக்சபா தேர்தல் பார்ட்டனராக சேர்த்துக் கொண்டது பாஜக. தமிழகத்தில் 5 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. பாமக 7 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூடுதலாக இணையும் சில கட்சிகள் பிற தொகுதிகளில், அதிமுகவுடன் இணைந்து போட்டியிடும். எத்தனை தொகுதிகளில் போட்டி என்பதைவிட, வெற்றிக் கூட்டணி அமைப்பது என்பது பாஜகவின் கணக்காக உள்ளது.

இந்தக் கணக்கு எடுபடுமா?

இந்தியாவில் பாஜகவுக்கு அதிகளவு லோக்சபா தொகுதிகளை அள்ளிக் கொடுக்கும் மாநிலங்கள் மஹாராஷ்டிரா மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் ஆகும். மஹாராஷ்டிராவில் உள்ள மொத்தம் 48 தொகுதிகளில், இப்போதைய நிலையில், பாஜக தனித்துப் போட்டியிட்டால் 20+ தொகுதிகளில் வெற்றிபெற்றுவிட முடியும். ஆனால், இதில் இன்னொரு சிக்கலும் உள்ளது.

அதாவது, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மஹாராஷ்டிராவில் இணைந்து லோக்சபா தேர்தலை சந்திக்கும்போது, அவர்களுக்கு 28 சீட்கள் கிடைக்கலாம். அதேநேரத்தில், சிவசேனாவுக்கு 4 அல்லது 5 தொகுதிகள் கிடைக்கலாம். இதெல்லாம், பாஜக, சிவசேனா தனித்துப் போட்டியிட்டால்தான். அதேநேரத்தில், இந்தக் கட்சிகள் இணைந்து அதாவது பாஜக+ சிவசேனா இணைந்து தேர்தல் களம் கண்டால், 40க்கும் அதிகமான தொகுதிகளில் நிச்சய வெற்றி என்பது அரசியல் கணக்கு.

இதனால், பாஜக 25 மற்றும் சிவசேனா 23 தொகுதிகளில் போட்டியிட முடிவாகியுள்ளது. சிவசேனாவின் ராஜ்யசபா எம்பிக்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள், கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு நெருக்கடி கொடுத்து, இந்த முடிவுக்கு சம்மதிக்க வைத்துள்ளனர். இந்த இரு துருவங்களையும் ஒரே நேர்கோட்டில் இணைத்தது, இந்துத்துவா என்ற கொள்கை மட்டுமே.

பீகாரில் தனிக்கணக்கு!

மாட்டுத் தீவன வழக்கில், லாலுவுக்கு சிறை தண்டனை கிடைத்தது, அவர் செய்த பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழலுக்கு என்பதை மறந்துவிட்டு, மோடியின் நிலைப்பாடுதான் காரணம் என்று லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் முடிவு செய்துள்ளது. இதனால், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து, தேர்தலை சந்திக்கிறது. அதேநேரத்தில், முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாஜகவுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலை எதிர் கொள்கிறது. இதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், கடந்தத் தேர்தலில் பீகாரில் 22 தொகுதிகளில் தனித்து வெற்றிபெற்ற பாஜக, இந்தமுறை 15 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதேநேரத்தில், கடந்தத் தேர்தலில் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்ற ஐக்கிய ஜனதாதள கட்சிக்கு 17 தொகுதிகளை வழங்கியுள்ளது. ராம்விலாஸ் பஸ்வானின் லோக்ஜனசக்தி உட்பட பிற கட்சிகள் மற்ற தொகுதிகளில் பாஜ கூட்டணியுடன் போட்டியிடுகின்றன. என்னடா இது, ஆளும் கட்சியான பாஜக குறைந்தத் தொகுதிகளில் போட்டியிடுவது என்பது எங்கேயோ இடிக்கிறதே என்று கணக்குப் போடுகிறீர்களா?

அதிகமான தொகுதிகள் கேட்டு சண்டைப்போட்டு, கூட்டணியில் மனக்கசப்பு ஏற்பதைவிட, கூட்டணிக்கு விட்டுக் கொடுத்து, பெற்ற தொகுதிகளில் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும் என்பதே பாஜகவின் சிம்பிள் கணக்கு.

தமிழகத்தின் நிலவரம் இதுதான்…

உங்கள் குழப்பம் சரியானதுதான். தமிழகத்திலும் கூட பாஜக, அதிமுக, பாமக கூட்டணியுடன் கை கோர்த்துக் களம் இறங்குகிறது. மற்ற மாநிலங்களில் பரவாயில்லை, தமிழகத்தில் 5 தொகுதிகளில் களம் இறங்குகிறது. ஏற்கனவே மஹாராஷ்டிரா, பீகார் மாநிலங்களைப் போலவே தமிழகத்தில் ஏன் குறைந்தத் தொகுதிகள் பாஜகவுக்கு என்ற கேள்வி தொடர்வது இயல்பான விஷயம்தான். ஆனால், அதிகமான தொகுதிகள் கேட்டு சண்டைப்போட்டு, கூட்டணியில் மனக்கசப்பு ஏற்பதைவிட, கூட்டணிக்கு விட்டுக் கொடுத்து, பெற்ற தொகுதிகளில் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும் என்பதே பாஜகவின் சிம்பிள் கணக்கு.

சரி, இறுதியாக எப்படித்தான் புரிந்து கொள்வது?

ரொம்ப சிம்பிள். மஹாராஷ்டிராவில் ஆட்சியைப் பறிகொடுத்த கோபத்தில் இருந்த சிவசேனா, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பாஜகவை காலை வாரிவிடத்தவறவில்லை. இதை காங்கிரஸ் தூர நின்று, ரசித்துக் கொண்டே இருந்தது. கூடவே, தேசிய வாத காங்கிரஸ் கட்சியும். லோக்சபா தேர்தலில் பாஜக, சிவசேனா தனித்துப் போட்டியிட்டால், அது பாஜகவுக்கு 23 முதல் 25 சீட்களில் வெற்றியைக் கொடுக்கும். ஆனால், காங்கிரஸ் + தேசியவாத கூட்டணிக்கு இதே அளவு சீட்களைக் கொடுத்தால், அது பாஜகவுக்கு சிக்கலை ஏற்படுத்திவிடும். எனவே, எதிராளி வெற்றிபெற்று குடைச்சல் கொடுப்பதைவிட, பங்காளிக்கு 10சீட் கூட கொடுத்தால் தப்பில்லை என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. இதன் மூலம் பாஜகவின் கை வலுப்படும், காங்கிரஸ் பலம்பெறுவது தடுக்கப்படும்.

ஒரே ஃபார்முலா…

இதே பார்முலா அப்படியே பீகார் மாநிலத்திலும் இந்த பார்முலாவை கையாண்டுள்ளது பாஜக. லோக் ஜனசக்தி, பாஜக, ஐக்கிய ஜனதாதளம் கூட்டணிக்குள் நீடித்த சீட் இழுபறியை முடிவுக்குக் கொண்டு வந்து, அங்கேயும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணியின் வெற்றிக்கு கேட் போட்டுள்ளது பாஜக. இதன்மூலம் பீகாரில் காங்கிரஸ் வலுப்பெறுவதை நொறுக்கியுள்ளது.

வெற்றி நிச்சயம்!

தமிழகத்தில் 10 தொகுதிகளில் போட்டியிடுவதைவிட, செல்வாக்குள்ள 5 தொகுதிகளில் போட்டியிட்டு, வெற்றி பெறுவதை பாஜக உறுதிப்படுத்தியுள்ளது. இந்தக் கூட்டணியில் உள்ள பாமக, அதிமுக உட்பட பிற கட்சிகளுக்கு பெரிய அளவில் நெருக்கடி கொடுக்காமல், அவர்களை வெற்றிபெறச் செய்து, அந்தக் கட்சிகளை கூட்டணியில் இணைத்துக் கொள்ளும் கணக்கை பாஜக கையில் எடுத்துள்ளது.

3 மாநிலங்களில் என்ன நடக்கும்?

மஹாராஸ்டிராவில் 48, பீகாரில் 40, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சேர்த்து 40 தொகுதிகள். 3 மாநிலங்களிலும் சேர்த்து மொத்தம் 128 தொகுதிகள். 3 மாநிலங்களிலும் பாஜகவுக்கு மஹாராஷ்டிராவில் 22, பீகாரில் 15 மற்றும் தமிழகத்தில் 3 அல்லது 4 இடங்கள் என்று கணக்கில் வைத்துக் கொண்டாலும், மொத்தம் 40 அல்லது 41 தொகுதிகள் உறுதியாக கிடைக்கும். இதுதவிர, ஒட்டு மொத்தமாக கணக்கிட்டால் கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து 100 லோக்சபா தொகுதிகள் பாஜகவுக்கு உறுதி.

இதுதவிர, நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்திரப்பிரதேசத்தில் 55, மேற்கு வங்கத்தில் 15, ஒடிசா 10, குஜராத் 22, ராஜஸ்தான் 20, மத்தியப்பிரதேசம் 22, கர்நாடகா 15, அரியானா 7, சட்டீஸ்கர் 6, ஜார்கண்ட் 6, உத்தரகாண்ட் 4, டெல்லி 4, இமாச்சல் 3, கோவா 2, காஷ்மீர் 3, அஸ்ஸாம் 6, திரிபுரா 2 மற்றும் அருணாசலப்பிரதேசம் 2 என்று ஒட்டு மொத்தமாக 250க்கும் லோக்சபா தொகுதிகளில் பாஜகவுக்கு வெற்றி உறுதி.

அண்ணாவின் ஆசீர்வாதம்!

இவையெல்லாம் குறைந்தபட்ச கணிப்புகள்தான். தேர்தல் நெருங்க நெருங்க எதிர்கட்சிகளுக்கு இடையே ஏற்படும் குழப்பம், பாஜகவுக்கு மேலும் வலுசேர்க்கும். எனவே, மீண்டும் பாஜகவுக்கு தேவையான பெரும்பான்மை கிடைக்கும் என்பது உறுதி. இறுதியாக, ‘‘உங்கள் தம்பி மோடி, மீண்டும் பிரதமராக வருவாரா?’’ என்று நரேந்திர தாமோதர்தாஸ் மோடியின் சகோதரர், பிரகலாத் மோடியிடம் நிருபர்கள் கேள்வி கேட்டுள்ளனர்.

‘‘என் தம்பி மோடி நேர்மையான நிர்வாகத்தை வழங்கியுள்ளார். அப்பழுக்கற்ற அவருக்கு மீண்டும் பிரதமர் வாய்ப்பு கொடுப்பதில் எந்தத் தவறும் இல்லை. இந்த முறை அவர் 300 தொகுதிகளுக்கும் அதிகமாக வெற்றிபெற்று, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பார். அவருக்கு எங்கள் குடும்பத்தின் ஆசியும், பிரார்த்தனையும் உண்டு’’ என்று பிரகலாத் மோடி கூறியுள்ளார்.

இந்த வகையில் மோடியின் நிர்வாகத்தின் நேர்மையை விரும்பும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும், நன்றிக்கடன் பட்டுள்ளனர். வரும் தேர்தலில் அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கி இந்தக் கூட்டணியை வெற்றிக் கூட்டணியாக ஆக்குவது, ஒவ்வொரு தமிழரின் கடமையாகும்.

 

(Visited 38 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *