சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

ஸ்டாலின் வாரிசு… அரசியலின் அரிச்சுவடி!

திமுகவின் அடிப்படை கொள்கை…

இந்து மத எதிர்ப்பு, பிராமணர்களை தூற்றுவது என்பது திமுகவின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று. மற்ற நேரங்களைவிட, தேர்தல் நேரங்களில் இன்னும் இது அதிகமாக இருக்கும். பிற சிறுபான்மை மதத்தவர்களிடம் ஓட்டு வாங்க வேண்டும் என்பதற்காக, இந்து என்றால் திருடன், இதை நான் சொல்லவில்லை, ஒரு நூலில் சொல்லியுள்ளனர் என்று விளக்கம் கொடுப்பது திமுக தலைவராக இருந்த கருணாநிதிக்கு கை வந்த கலை.
அவரது வழிவந்த மகன் ஸ்டாலின் மட்டும் லேசுப்பட்ட ஆளா என்ன? கடந்த மாதம் ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்றிருந்தபோது, பட்டர்கள் நெற்றியில் இட்ட திருமண்ணை அழித்து, தன் கடவுள் மறுப்புக் கொள்கையை அங்கேயும் நிரூபித்தவர் ஆயிற்றே. அப்பனுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்தவர் என்பதை நிரூபித்துள்ளார்.
காலம் சென்ற திமுக தலைவருக்கு, சங்கர மடத்தின் வாரிசு நியமனம் என்பது பற்றித் தெரியாது. சங்கர மடத்தின் பீடாதிபதியாக வருபவர்கள் யாரும் ரத்த உறவுகளில் வருவது இல்லை. அதற்கென, வேத உபநிஷசங்களை கற்றுத் தேர்ந்தவர்களாக இருப்பினும், கடவுளின் கருணை இருந்தால் மட்டுமே அந்த உயர்ந்த பதவியை தொட்டுப் பார்க்க பிராப்தம் உண்டு என்பது அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அதனால், தெரியாத்தனமாக வாரிசு அரசியல் பற்றிய கேள்விக்கு சங்கர மடத்தை வம்புக்கு இழுத்தார். ஆனாலும், அதில் கருணாநிதி வெற்றி பெற்றாரா? நிச்சயம் இல்லை. திமுக சங்கர மடம் இல்லை, இங்கு வாரிசு அரசியல் செய்வதற்கு என்றவரின் வாரிசு, இன்று திமுகவின் 2வது தலைவர்.

கருணாநிதி இல்லாத திமுக!!

தமிழக அரசியல் வரலாற்றில் 2016ல் ஒரு வெற்றிடம், முதல்வராக இருக்கும்போதே மறைந்த ஜெயலலிதாவால் ஏற்பட்டது. அதேபோல், இப்போதும் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. திமுகவுக்கு கருணாநிதி 50 ஆண்டு காலம் தலைவராக இருந்துள்ளார். ஒவ்வொரு முறையும் தன் நா வன்மையாலும், அரசியல் சாணக்யத்தனத்தாலும் வெற்றிகளை பெற்றுள்ளார். சில தேர்தல்களில் வெற்றிகளை வாங்கியுள்ளார். அதெல்லாம் அரசியல் விளையாட்டுகள். 13 முறை சட்டமன்றத் தேர்தல்களில் தோல்விகளை சந்திக்காதவர் என்று வரலாற்றில் எழுதப்பட்டு இருந்தாலும், அந்த வெற்றிக்குப் பின்னர் இருக்கும் சூட்சுமங்கள் அதிகம்.
பேசி பேசியே கட்சியை வளர்த்தவர், கட்டிக் காத்தத் தலைவர் பதவியை இப்போது அக்கட்சியின் நிர்வாகிகள் சரியான நபரிடம் ஒப்படைத்துள்ளார்களா? இது யோசிக்க வேண்டிய விஷயம். நா வன்மையால் பல நல்ல விஷயங்கள் செய்திருந்தாலும், பெரும்பாலும் மற்றவர்களை புண்படுத்திய தருணங்கள் அதிகம். இப்போது, கருணாநிதிக்கு நிகராக பேசக் கூடியத் தலைவர்கள் திமுகவில் இல்லை. பொருளாளர் பொறுப்பு வகிக்கும் துரைமுருகனுக்கு, அவரது சிறந்த மிமிக்ரி மற்றும் நடிப்புத் திறனுக்காகவே அந்தப் பதவி கொடுக்கப்பட்டுள்ளதாக நினைக்க வேண்டியுள்ளது.

ஸ்டாலினின் நிர்வாகம் துல்லியமாக இருக்குமா?

திமுகவின் தலைவராக தன்னை முன்நிறுத்திக் கொள்வதற்காக, ஸ்டாலின் எவ்வளவு தூரம் களமாடியிருப்பார் என்பதை சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. பல நூறு கோடி ரூபாய் சொத்துக்களைக் கொண்ட திமுக அறக்கட்டளையின் நிர்வாகியும், திமுக தலைவர் பதவியும் இணைந்தே ஸ்டாலின் கைக்குவரும்போது, அதற்கான முழு நிர்வாகத் திறன் இருக்க வேண்டாமா?
ஸ்டாலினின் திட்டங்கள் துல்லியமாக இருக்குமா? இந்தக் கேள்விக்கு விடை தேடிச் சென்றால், 2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். திமுகவின் தலைவராக உள்ள ஸ்டாலின், 2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்காக, 2015ம் ஆண்டில் நமக்கு நாமே தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டங்களாக சுற்றுப் பயணம் செய்து மக்களை சந்தித்தார்.
ஆனால், அவரது திட்டங்கள் எல்லாம் சொதப்பலில் முடிந்தது.
பல நூறு கோடி ரூபாய்களை செலவிட்டு, வாழைத் தோப்புக்குள் கான்கிரீட் பாதை அமைத்து மக்களிடம் குறைகேட்டு அசத்தியவர் இப்போதைய திமுக தலைவர் ஸ்டாலின். உலோக சிற்பத்தை உளி கொண்டு செதுக்கியது போன்ற படம் வெளியானது போது, ஸ்டாலினே கூட சிரித்திருப்பார்.
உண்மையை சொல்லப்போனால், நமக்கு நாமே திட்டம் திமுகவுக்கானது அல்ல. முழுக்க முழுக்க திமுக பொருளாளர் பதவியில் இருந்த ஸ்டாலினக்கானது. திமுகவின் அடுத்தத் தலைவர் என்ற பிம்பத்தை தமிழக மக்களிடம் கட்டமைத்துக் கொள்வதற்காக ஸ்டாலின் பல ஆண்டுகளுக்கு முன்பே, திட்டமிட்டு அரங்கேற்றியதுதான் நமக்கு நாமே திட்டம். இதில் ஒரே கல்லில் 3 மாங்காய் அடித்தார்.
சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம், திமுகவின் அடுத்தத் தலைவர் என்ற நிழல், 3வது கட்சியில் தனக்கு ஒரே போட்டியாக இருந்த அண்ணன் அழகிரிக்கு செக் வைத்தது என்று ஸ்டாலின் அடித்த மாங்காய்கள் 3.

காத்திருக்கின்றன சவால்கள்?

திமுக என்ற இயக்கம் பேச்சால் மட்டுமல்ல, ஊழல்களாலும் வளர்ந்த ஒரு இயக்கம் என்பது தமிழர்களின் மனதில் ஆழப்பதிந்து போன ஒரு விஷயம். ‘கோபப் படுங்கள்’ என்ற வீடியோவை ஸ்டாலின் வெளியிட்டபோது, அதையே வைத்து மீம்ஸ்கள் தயாரித்து அவரை உண்டு இல்லையென்றாக்கி விட்டனர். 2006 முதல் 2011ம் ஆண்டு வரையில் திமுகவின் ஆட்சிக் காலத்தில் வட்டச் செயலாளர் வண்டு முருகன்கள் முதல் தலைமைச் செயலகம் வரை திமுக நிர்வாகிகள் செய்த அட்டகாசம் அத்துப்படி. நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு என்று ஒரு புதிய துறையை தமிழக போலீஸ் துறையில் உருவாக்கும் நெருக்கடியை ஏற்படுத்திய பெருமை திமுகவை சாரும். இதனால்தான் 2011 மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தலில்களில் திமுக தோற்றது.
இப்போதுள்ள அதிமுக ஓடும் வரை ஓடட்டும் என்று காத்திருக்கிறதா அல்லது தானே கவிழும் என்று காத்திருக்கிறதா என்பது திமுகவுக்கே வெளிச்சம். 2006ம் ஆண்டில் மைனாரிட்டி ஆட்சியாக இருந்து கொண்டு, 5 ஆண்டு பதவிக் காலத்தை ஓட்டிய திமுகவால், இப்போது அசுர பலம் கொண்ட எதிர் கட்சியாக இருந்தும், அதிமுகவை ஆட்டிப் படைக்க முடியாத நிலையில் உள்ளது. பலவீனமான நிர்வாகம், தேசம் அறிந்த அரசியல்வாதியின் மகனாக இருந்தும், உண்மையான அரசியல் தெரியாதது, கருணாநிதி இல்லாத தைரியத்தில் குறுநில மன்னர்களாக மீண்டும் கொடிகட்டும் மாவட்டச் செயலாளர்களை கட்டுப்படுத்துவது, திமுக மீது படிந்து ஊழல் கரையை அகற்றுவது என்று ஸ்டாலினுக்கு நிறைய சவால்கள் காத்திருக்கின்றன.

சொல்லாடல் அவசியம் தலைவரே…

மேடைப் பேச்சு என்றால் அது திமுக மட்டுமே என்ற சரித்திரம் மலையேறிவிட்டது. அண்ணாவும், கருணாநிதியும் பேசி வளர்த்த திமுக, இப்போது இணைய வழியாக மட்டுமே அரசியல் செய்து கொண்டிருக்கிறது. காரணம், சுதந்திர தினத்தையும், குடியரசு தினத்தையும் குழப்படித்து விளாசும் வீரமிகு பேச்சாளராக இப்போதைய தலைவரான ஸ்டாலின் உள்ளார். நீட் தேர்வில் மர்மமான முறையில் இறந்த மாணவி அனிதாவின் மரணத்தைப் பற்றிய முழுமையான தகவல் இல்லாமல் மேடையில் பேசுவதும், சிறு குழந்தைகள்கூட கூறும் பழமொழிகளை மாற்றிச் சொல்வதும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கைவந்த கலையாகிவிட்டது. இதனால், அவரது மேடைப் பேச்சுக்களை இளைஞர்கள் ரசிக்கத் தொடங்கிவிட்டனர்.

மீண்டும் உருவாகும் வாரிசுகள்…

திமுக தலைவர் கருணாநிதி, மறைமுகமாக தன் மகனை திமுகவின் 2வது அதிகார மையமாக வளர்த்துவிட்டதுபோல், இப்போது ஸ்டாலின் மகன் உதயநிதி உருவாகிக் கொண்டிருக்கிறார். திமுகவின் இளைஞர் அணியினர் இப்போது உதயநிதியை மையப்படுத்தி காய் நகர்த்தி வருகின்றனர். திமுகவில் தந்தைக்கு அடுத்த இடத்தைப் பிடிப்பது குறித்து உதயநிதியும் சில நேரங்களில் தன் நெருங்கிய நண்பர்களிடம் பேசியுள்ளார். இதன்வெளிப்பாடுதான், சினிமாவில் பிரபலமாகிக் கொண்டே, திமுக நடத்தும் போராட்டங்களில் பங்கேற்று, மீடியா வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருப்பது. எனவே, திமுகவில் இப்போதே அடுத்தக்கட்ட வாரிசுகள் உருவாகிக் கொண்டிருக்கின்றனர்.

உண்மையை சொல்லப்போனால், நாமக்கு நாமே திட்டம் திமுகவுக்கானது அல்ல. முழுக்க முழுக்க திமுக பொருளாளர் பதவியில் இருந்த ஸ்டாலினக்கானது. திமுகவின் அடுத்தத் தலைவர் என்ற பிம்பத்தை தமிழக மக்களிடம் கட்டமைத்துக் கொள்வதற்காக ஸ்டாலின் பல ஆண்டுகளுக்கு முன்பே, திட்டமிட்டு அரங்கேற்றியதுதான் நமக்கு நாமே திட்டம்.

எடுபடுமா தேசிய அரசியல்?

திமுக தலைவராக இருந்த கருணாநிதி, தனக்கு எந்த நேரத்தில் பதவி தேவையோ, அப்போது எல்லாம் கூட்டணி மாறுவார். அல்லது புதிய கூட்டணியை உருவாக்கிக் கொள்வார். இந்திராவை வசைபாடிய அதே நாக்கு, நேரு மகளே வருக, நிலையான ஆட்சி தருக என்றது. பாஜகவை பண்டார கட்சி என்று விமர்சித்த அதே கைகள், அடல்பிகாரி வாஜ்பாய் தோளை அணைத்தது. 2004ல் பாஜ கூட்டணியை உடைத்துக் கொண்டு வந்த திமுக, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணைந்து 10 ஆண்டு அரசு, அதிகாரம் சுகத்தைக் கண்டது. இது மக்கள் மனதில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியதை திமுக வசதியாக மறந்துவிட்டது.
அதேநேரத்தில், கருணாநிதிக்கு தேசிய அரசியலில் இருந்த பார்வை (பிரதமர் பதவி மூப்பனாருக்கு வந்தபோது, அதை தைரியமாக கவிழ்த்து விட்டது) உட்பட, ஸ்டாலினுக்கு இருக்குமா? என்பது சந்தேகம்தான். இப்போது, ஸ்டாலின் கூட்டணி அமைக்க ஆர்வம் காண்பிக்கும் ராகுல், மம்தா உட்பட பலரும் பல்வேறு சிக்கல்களில் உள்ளனர். இந்நிலையில், பாஜ அரசுக்கு பாடம் புகட்டுவோம் என்று தலைவரான கையுடன் குரல் கொடுத்துள்ளார் ஸ்டாலின். தமிழகத்தின் எல்லையைத் தாண்டினால், இந்தி, ஆங்கிலம் அவசியம் என்ற நிலையில், ஸ்டாலினின் தமிழ் புலமையே தள்ளாடிக் கொண்டிருக்கிறது. தேசிய அரசியலுக்கு சொல்லாடல் மட்டுமல்ல, கருத்துக்களை துணிச்சலாக முன் வைக்கும் மன தைரியமும் அவசியம்.

 

 

குடும்பத்தில் குஸ்தி

என்னதான் தலைவர் பதவியில் ஸ்டாலின் இருந்தாலும், மனதளவில் தன் அண்ணன் அழகிரி மீது இன்னமும் ஓரளவு பயம் இருக்கத்தான் செய்கிறது. தன் பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக, ராஜாத்தியம்மாள் மகள் கனிமொழி, தன் அண்ணன் ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் என்பதே உண்மை. அதேநேரத்தில், கருணாநிதி குடும்பத்துக்கு சொந்தமான சொத்துக்களை பிரிப்பதில் ஏற்கனவே பஞ்சாயத்துக்கள் வெடித்த நிலையில், இப்போது தலைவர் பதவியை ஸ்டாலின் தந்திரமாக கைப்பற்றியதும், புதிய பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.

(Visited 47 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *