சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

ஹலோ ஒரு நிமிடம்…

ஆழ்கடல் தாண்டி அரண் சூழ வாழ்ந்தாலும்…
ஊழ் வந்து முற்றும் வினை
என்பது சான்றோர் கூற்று…
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்க்கு தான் எவ்வளவு பொருந்தியுள்ளது.
30 வருடங்களாக தமிழகத்தின் அரசியல் வானில் ஒரு ஜொலிக்கும் சூரியனாகவே திகழ்ந்தார் என்பதை மறுக்க இயலாது.
மக்களுக்காகவே நான்… மக்களால் நான் என்று அந்த வெண்கல குரலில் உணர்ச்சி பொங்க கூறி, இரட்டை இலையை குறிக்கும் விதமாக இருவிரல்களை காட்டி உப்பரிகையில் நிற்க கோடிக்கணக்கான தொண்டர்கள் தங்கள் ஜென்மம் சாபல்யம் அடைந்ததாகவே கருதினர்.
திருமணம் செய்யாத இந்த செல்வியை தங்கள் தாயாகவே மதித்து, அம்மா என்றே அழைத்தனர். ஆனால் இங்கு தான் ஊழ் வந்து விளையாடியது போலும்.
30 வருடங்களில் சிங்கப்பூரை உலக நாடுகளில் ஒரு முக்கிய புள்ளியாக உருவாக்கிய தலைமகன் லீ குவான் யூவைப் போல, ஒளிர வேண்டிய ஜெயலலிதா, இன்று கல்லறையில் கூட ஊழல் வழக்கில் சிக்கி, கறைகளோடு தான் உறங்குகிறார்.
விரும்பி துரத்தும் விதி வந்து சேர்ந்தால், எறும்பும் உனக்கு எமன் என்ற கூற்றையும் ஜெயலலிதா நிருபித்து விட்டார்.
பல லட்சம் கோடிகள் ஊழல், வழக்குகளில் தப்பிவிட்ட ஜெயலலிதா வெறும் 66 கோடி சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றது தான் வினை யின் வலிமையோ??
அம்மா என்று நம்பிய கோடானு கோடி தொண்டர்களின் நல்வாழ்வை நாடாமல், அடாவடி அரசியல் நடத்த ஏன் மனம் துணிந்தார் ஜெயலலிதா என்பதை உளவியல் நிபுணர்கள் ஆராயலாம்.
தோழி சசிகலாவும் அவரது குடும்பமுமே காரணம் என்று சொல்பவர்களிடம் 33 வருடங்களாகவா ஒருவர் தன் விருப்பத்திற்கு எதிராகவே நடப்பார் என்பதே என் கேள்வி!!
பதவி, பணம், அதிகாரம், சமூக அந்தஸ்து என இதையெல்லாம் விட, அனைத்தையும் துச்சமென சட்டென உதறி தள்ளும் மனோபாவம்… என்ன இல்லை ஜெயலலிதாவிடம்!!! ஏன் மக்கள் நலனை துறந்து அதர்மத்துடன் கைகோர்த்தார் என்பதே ஒரு புதிர்?? எதனை அவர் தேடிச் சென்றார்!!!
திராவிட கட்சிகளால் கடந்த 50 ஆண்டுகளாக நாம் கண்டது தான் என்ன??
அரசே நமது வயல்களை கூறு போட்டு விற்கிறது. அரசே நமது மணலை கொள்ளை அடிக்கிறது. அரசே நமது தாது மணலை திருடி அந்நியருக்கு விற்கிறது.
அரசே நமது குடிநீரை அந்நியருக்கு விற்கிறது. அரசே நமக்கு மதுவை குடிக்க ஏற்பாடு செய்கிறது. தரமான சாலைகளை பார்த்ததுண்டா? நல்ல கல்வியை கற்றதுண்டா?? மருத்துவம், வேலை வாய்ப்பு என்று கேட்டதுண்டா??
இலவசம் என்று சொல்லி தன்மான தமிழனை இன்று பிச்சைக்காரர்களாக்கியது தான் திராவிட கட்சிகளின் ஒரே சாதனை.
போதும்!! இன்று தமிழ் நாடே ஒரு கையேந்தி பவனாக மாறியுள்ளதும் ஊழ் வினையோ!!
திராவிடம் பேசி, தமிழ்மொழி என்று கூறிய இந்த அரசியல் வியாபாரிகளை இனிமேல் உற்று கவனியுங்கள்!! அலங்கார சொற்கள் இனிபோதும் நமக்கு… நமது தலைவர்களை தயை கூர்ந்து, எழுதிய வசனத்தை பேசும் பிழைப்பு தேடும் நடிகர்களிடம் தேடாதீர்கள்! அந்த தலைமை பண்புகளை கொண்டவர்களை தேர்ந்தெடுக்க கவனம் செலுத்துங்கள்.
திராவிடம் என்பது இனமல்ல… அது ஒரு மொழி என்பதை அறிந்து, தெளிந்து கொள்வது தான் தமிழ் நாட்டை வளமாக்கும்…
அச்சமாக இருக்கிறது என் அப்பாவி தமிழர்களே!! தமிழா என்று எழுதினாலும், தமிலா என்று தானே படிக்க போகிறீர்கள் என்பதையும் எண்ணி வருந்து கிறேன். இது தான் திராவிட கட்சிகள் தமிழ் மொழியை காப்பாற்றிய லட்சணம்!!!

பிரியமுடன்
பத்மினி ரவிச்சந்திரன்

(Visited 19 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *