சுதேசி இரு பெரும் விழாக்கள் விருதுகள் 2018

ஹலோ ஒரு நிமிடம்…

நாம் ஜெயிப்போமா…? தோற்போமா..?

தேர்தல் 2019

இது நமக்கான பரீட்சை. நமது பாரத தேசத்திற்கான தேர்வு. பிரதமர் மோடிக்கு இல்லை. அவர் கர்ம யோகி.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு வந்த வங்கச் சிங்கம் நரேந்திரனுக்குப் பிறகு குஜராத்திலிருந்து வந்திருக்கும் இந்தச்சிங்கம் … எதிரணியினரின் கூடாரத்தில் ஏற்கனவே பலத்த சல, சலப்பை தந்திருப்பது என்னவோ உண்மைதான்…

அந்த பயத்தில்தான் எல்லோரும் கூட்டமாக உட்கார்ந்து கொண்டு வீரம் பேசுகிறார்கள்.
நமது அரசியல் தலைவர்களின் பேச்சை கவனித்து இருக்கிறீர்களா..?

ஒரு மணி நேரம் பேசினால், அதில் 59 நிமிடம் எதிர்கட்சியினரை விமர்சிப்பதில், எதிரணி தலைவர்களை கேவலப்படுத்துவதில் தான் இருக்கும்…

ஒரு நிமிடமாவது தங்களுடைய திட்டங்களை, நோக்கத்தை தெளிவுபடுத்தினால் பேரதிசயம்.. ஏகதேசம் யாரும் விதிவிலக்கல்ல.. இதற்கு.

மோதியின் பேச்சில் அப்படியே தலைகீழ்…59 நிமிடங்கள்…தான் இதுவரை செய்தது… செய்ய இருப்பது… கடைசி சில நொடிகளில் போனால் போகிறதென்று எதிரணியினரைப் பற்றிய கௌரவமான விமர்சனம்… அதுவும் கூட பாஸிடிவ்வாக… அவர்களின் தவறான புரிதல் குறித்து கவலை கொள்பவராக… மட்டுமே.

மோதியின் மிகச் சிறந்த வலிமையாக நான் கருதுவது… அந்த பாஸிடிவ்னஸ்… நம்பிக்கை தரும் அந்த நேர்மறைச் சிந்தனைகள்…

இன்றைய பாரதத்தின் தேவையும் அது தான்… நம்பிக்கைகளை படகுகளில் அல்ல , கப்பல்களில் கொண்டு வந்து கொட்டுபவர்களே இன்றைய தேவை… ஆயிரம் ஆண்டு கால அடிமை மனோபாவத்தை அசைத்து , அடித்து, துவைத்து, அழுக்கை நீக்கி, அவலத்தைப் போக்கி, துணிவைத் தர வேண்டுமென்றால்… முதலில் தன்னையே நம்பும் நம்பிக்கையைத் தான் தர வேண்டும்… அதுதான் துவக்கம்.

அதிர்ஷ்டவசமாய்… பாரதத்திற்கு இன்னொரு வாய்ப்பு.. இது போல…

எளிமையிலிருந்து வலிமை பெற்ற மோடி

சரளமாய் வருகிறது… ஹிந்தியும்… ஆங்கிலமும்… சற்றும் பயமின்றி உலகின் போலிஸ்காரரான ‘‘ட்ரம்ப்போடு’’ கை குலுக்குகிறார்.. நூற்றுக்கணக்கான உலகப் பெரும் தலைவர்களுக்கு மத்தியில் ஒரு நொடியும் தயங்காமல் ‘‘எங்கள் நாட்டு தயாரிப்புகள் நம்பகமானவை’’ என்கிறார். உலகின் பெரும் அச்சுறுத்தலான சீனாவின் கால்களை கட்டிப்போடுகிறார்… தன் இராணுவ நடவடிக்கைகளால்… முந்தின நாள் அட்லாண்டாவில் ‘‘ஹலோ பிரண்ட்ஸ்’’ என்று பேசுகிறார்… அடுத்த நாள் ஆண்டிப்பட்டியில் ‘‘வணக்கம்’’ போடுகிறார்.. ஆச்சர்யம்.

எல்லாப் புறங்களிலும் , எல்லாத் துறைகளிலும் நிறைய, நிறைய பணிகள் நடந்து வருகின்றன… அல்லது நடக்க துவங்கி இருக்கின்றன… அதில் இரயில்வே துறை, இராணுவம், உள்நாட்டு சாலை மேம்பாட்டுத்துறை, மின்சாரத் துறை, சட்டத்துறை, வெளி உறவுத்துறை, மனித வள மேம்பாட்டுத்துறை… இவையெல்லாம் மின்னல் வேகம். பிற துறைகள்… மிதமான வேகம்.

ஒழுங்குபடுத்துதல், சீர் செய்தல், வேண்டாததை கழித்தல், வேண்டியதை சேர்த்தல்… என ஒவ்வொன்றாக, துறை வாரியாக கணக்குப் பார்த்து சீர் செய்யும் திறமை.

ஒரு நல்ல தேசத்தின் முதல் அடையாளம் என்ன…? சண்டையில்லாமல் இருப்பது தானே…? அமைதி தானே..? எத்தனை மதப் பூசல்கள், சாதிச் சண்டைகள் நடந்தன..? எத்தனை பேர் கலவரத்தால் இறந்து போயிருக்கிறார்கள்..? ஒன்றுமே இல்லையே…?

ஆக… இதை விட என்ன பெரிய மாற்றத்தைத் தந்து விடப் போகிறார்கள் எதிரணியினர் ஆட்சிக்கு வந்தால்..? மிஞ்சிப் போனால் இலவச அரிசியைத் தொடர்ந்து இலவச சர்க்கரை என்பார்கள்… பொங்கலுக்கு இலவச காட்டன் வேஷ்டி, புடவைக்குப் பதில் பேண்ட்டும் (சர்ட்டும் கூட சேர வாய்ப்புண்டு… ஏதாவது அமைச்சரின் பினாமி அதற்குள்ளாக தொழிற்சாலையை தொடங்கி விட்டால்), பாலியஸ்டர் புடவையும் இலவசமாக தருவார்கள்… (போனால் போகிறதென்று பொங்கல் செலவுக்கு என்று இலவச டாஸ்மாக் கூப்பன்கள் தந்தாலும் ஆச்சரியமில்லை)

ஆக.. இலவசங்களை தாண்டி இவர்களது சிந்தனை வளராததால் , அரசை எதிர்பார்த்து காத்திருக்கும் சாமான்யர்களுக்கும், கூட்டத்திற்கும் கையேந்திப் பிழைப்பதைத் தாண்டி கை நோக உழைக்கும் சிந்தனை வரவோ, வளரவோ வாய்ப்பேயில்லை…

மாற்றம் ஒன்றே மாறாதது…

கடந்த 5 ஆண்டுகளில் நிகழ்ந்த எல்லா வளர்ச்சித் திட்டங்களும் இனி ‘‘ஜெட்’’ வேகத்தில் பயணிக்க வேண்டிய பொன்னான தருணம்…

தப்பித்தவறி மாறி விட்டால் … இந்த வளர்ச்சிப் பயணம் தடைப்பட்டு விட்டால் …இன்னுமொரு யுகம் கூட ஆகலாம்… நாம் மீண்டு வர..

கூட்டமாய்ச் சேர்ந்து மோதியை, அவரது இலட்சியப் பயணத்தை எதிர்க்கத் துணிந்திருக்கும் இவர்களிடம் மெல்லக் கேட்டுப் பாருங்கள்…’’ மோதியைத் தோற்கடிப்பதைத் தவிர வேறு என்ன உங்கள் கொள்கை என்று…? “

அட்சரம் பிசகாமல், அடித்தொண்டையில் ஒரே மாதிரி கூக்குரலிடுவார்கள் ‘‘மோதியைத் தோற்கடிப்பதைத் தவிர வேறு என்ன கொள்கை வேண்டும் ..?’’ என்று.

ஆக… இந்த 2019 தேர்தல்… மோதி ஆதரவா..? எதிர்ப்பா…? என்பதல்ல… நமக்கு நாமே ஆதரவா..? எதிர்ப்பா..? என்பதே..

ஏனென்றால்… இது வழக்கம் போல எப்போதும் நடக்கும் ‘‘யாரோ’’ தேர்தல் அல்ல… ’’நமக்கே நமக்கான நம்ம தேர்தல்..’’

நாம் ஜெயிப்போமா..? தோற்போமா..? யோசியுங்கள்.

 

பத்மினி ரவிச்சந்திரன்

(Visited 19 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *