Saturday, May 30, 2020

தமிழகத்தின் ஜாலியன் வாலாபாக் தேவகோட்டையா?

தமிழகத்தின் ஜாலியன் வாலாபாக் என்ற அடைமொழிக்கு உரியது தேவகோட்டை. நகராட்சி அலுவலகத்துக்கு எதிரில் உள்ள ‘தியாகிகள் பூங்கா’, தமிழகத்தின் ஜாலியன் வாலாபாக்குக்கு இன்றளவும் சாட்சியாக உள்ளது.

அப்படி என்னதான் அங்கு நடந்தது? நிச்சயம் இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாத, தெரிந்திருக்க முடியாத போராட்டத்தின் சுவடுதான். வீரம் கொப்பளித்த, உயிரை துச்சமென மதித்த தீரர்கள் பற்றிய வரலாற்றின் தொகுப்பு இது…

Articles_3_1

வெள்ளையனே வெளியேறு!

காந்தியடிகள் தலைமையில் 1920ம் ஆண்டு இந்திய சுதந்திரப் போராட்டம் தீவிரமானது. ஆங்கிலேயர்களின் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கக் கூடாது என்று முடிவு செய்த காந்தியடிகள், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை 1942ம் ஆண்டு தொடங்கினார். இதன்படி நாடு முழுவதும் உள்ள ஆங்கிலேயர்களின் அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து வந்த இந்தியர்கள் பணிகளை புறக்கணித்தனர். போராட்டத்தில் குதித்தனர். இது ஆகஸ்ட் புரட்சியாக வெடித்தது.

 

தடை!

நாடெங்கிலும் சுதந்திர வேட்கையில் மக்கள் வெகுண்டெழுந்தனர். ஆங்கிலேயர்களே அச்சம் கொள்ளும் அளவுக்கு மக்கள் போராட்டக் களத்தில் சங்கமித்தனர். கட்டடற்ற மக்கள் திரண்டதால், ஆங்கிலேயர்கள் பல திறந்தவெளி மைதானங்களை, திறந்தவெளி சிறைச் சாலைகளாக மாற்றினார். இந்தியர்களின் எழுச்சியால் திணறிய ஆங்கிலேய அரசு, 1942ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி நாடெங்கும் 144 தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டது. ஆனால், இந்தத் தடையுத்தரவு விடுதலை வேட்கையில் இருந்த வீரர்களை கட்டுப்படுத்தவில்லை.

 

கைது!

ஆங்கிலேயர்களின் தடையை மீறி தேவகோட்டையில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் திரண்டு, அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தை தலைமையேற்று நடத்திய சின்ன அண்ணாமலை, டி.எஸ். ராமநாதன் ஆகியோரை ஆங்கிலேயர்கள் கைது செய்தனர். அப்போதைய ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்த திருவாடானை சிறையில் அடைத்தனர். சுதந்திரப் போராட்ட வீரர்கள் 2 பேரை ஆங்கிலேயர்கள் கைது செய்தது, அப்பகுதி மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து, தேவகோட்டை அருகே உள்ள திருவேகம்பத்தூர் கிராமத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் இரவோடு இரவாக ஒன்று கூடினர். சுதந்திரப் போராட்ட வீரர் பாலபாரதி தலைமையில் திட்டங்கள் வகுத்தனர்.

 
Articles_3_2

போராட்டம்!

தேவகோட்டை, திருவேகம்பத்தூர், திருவாடானை பகுதிகளில் ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை ஒழிக்க புறப்பட்டனர். 1942 ஆகஸ்ட் 15ம் தேதி நள்ளிரவில் திருவேகம்பத்தூர், திருவாடானை இரண்டு ஊர்களுக்கும் இடையே உள்ள பாலங்களை தகர்த்தெறிந்தனர். போக்குவரத்தை துண்டித்தனர். 17ம்தேதி காலை அபிராமம் முத்தையா, திருவேகம்பத்தூர் ஜெயராம அய்யர் ஆகியோர் சைக்கிளில் தொண்டி சென்று தொலை தொடர்பு இணைப்புகளை துண்டித்தனர். செல்லத்துரை போராட்ட வீரர்களை ஒருங்கிணைத்தார்.

 

தேவகோட்டையை நோக்கி...

திருவாடானை சிறைச்சாலையை சுதந்திர போராட்ட வீரர்கள் தகர்த்தெறிந்தனர். ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த சின்னஅண்ணாமலை, டி.எஸ்.ராமநாதன் ஆகியோர் உட்பட 30க்கும் அதிகமான சுதந்திரப் போராட்ட வீரர்களை மீட்டனர். சிறை கஜானாவை சூறையாடினர். தாலுகா அலுவலகம், போலீஸ்நிலையம் துணைப் பதிவாளர் அலுவலகம் ஆகியவை சூறையாடப்பட்டது. இதைத் தொடர்ந்து, சுதந்திரப் போராட்ட வீரர்களின் படை தேவகோட்டையை நோக்கி நகரத் தொடங்கியது.

 

எச்சரிக்கை!

ஆனால், தேவகோட்டை எல்லைக்குள் நுழைந்தால் சுதந்திரப்போராட்ட வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்படும் என்று ஆங்கிலேய ராணுவ அதிகாரிகள் எச்சரித்தனர். ஆனால், எதற்கும் தயார் என துணிந்து நெஞ்சை நிமிர்த்தி, உண்மையான அஞ்சா நெஞ்சர்களாக தேவகோட்டையை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தனர். இப்போதுள்ள தேவகோட்டை நகராட்சிக்கு அருகில் ஆங்கிலேயர்கள் துப்பாக்கிகளில் தோட்டாக்களை நிரப்பி, சுந்திரப் போராட்ட வீரர்கள் வருகைக்காக காத்திருந்தனர்.

 

அச்சமில்லை!

Articles_3_3

நெஞ்சுக்கு நேராக துப்பாக்கிகள் நீட்டிக் கொண்டிருந்தபோதும், அஞ்சவில்லை. முன்னேறிய சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு முட்டுக்கட்டை போடுவதற்காக வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை வலுப்படுத்துவதற்காக தேவகோட்டையில் நடந்த இந்த ரத்த சரித்திரம், இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றின் பக்கங்களில் சரியான முறையில் இடம்பெறவில்லை முத்திருளப்பனை சுட்டு வீழ்த்தியது வெள்ளையர் படை. இதனால், கோபமடைந்த சுதந்திர போராட்ட வீரர்கள், தேவகோட்டை கோர்ட்டுக்குள் நுழைந்து சூறையாடி, ஆவணங்களுக்குத் தீ வைத்தனர். வெள்ளையர்கள் நடத்திய சிம்சன் கம்பெனி பஸ்களை தீயிட்டு கொளுத்தினர்.

துப்பாக்கி சூடு!

தங்கள் கண்முன் சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஆவேசமாக போராடுவதைக் கண்டு ஆங்கிலேய ராணுவ அதிகாரிகள் ஆத்திரம் அடைந்தனர். இதனால், அடுத்தடுத்து சுந்திரப்போராட்ட வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. குருவிக் கூட்டத்தை சுட்டு வீழ்த்துவது போல், 75 பேரை சுட்டுக் கொன்றனர் ஆங்கிலேய ராணுவத்தினர். நூற்றுக் கணக்கானோர் காயமடைந்தனர்.

 

75 வீரர்கள் பலி!

ராஜன்இன்ஸ்டிடியூட் நடத்தி வந்த தர்மராஜன்அய்யர், மணிவண்ணன், நடேசன், கிருஷ்ணன், சாவல்கட்டு மணியன், சிவனாண்டி செட்டியாரின் தாயார் உட்பட 75 பேர் இந்தத் துப்பாக்கி சூட்டில் நாட்டுக்காக தங்கள் இன்னுயிரை ஈந்தனர்.

 

இழிவு

ஆர்.எம்.அண்ணாமலை என்பவரை போலீசார் துன்புறுத்தி, அவரது வாயில் சிறுநீர் கழித்தனர். கைது செய்யப்பட்ட போராட்ட வீரர்களையும் சுட்டு வீழ்த்தி, பிணமான அத்தனை வீரர்களையும் ஒரே வண்டியில் கொண்டு சென்றனர். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை வலுப்படுத்துவதற்காக தேவகோட்டையில் நடந்த இந்த ரத்த சரித்திரம், இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றின் பக்கங்களில் சரியான முறையில் இடம்பெறவில்லை என்பது, இன்றளவும் உள்ள தியாகிகளின் வேதனையாகும். இதை தமிழகத்தின் ஜாலியன் வாலாபாக் சம்பவம் என்கினறனர் தியாகிகள்.

 

தியாகிகள் பூங்கா!

தேவகோட்டையில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் 75 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதன் நினைவாக, நாடு சுதந்திரம் அடைந்த நாளில், தியாகிகள் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் அவர்களுக்காக ஒரு நினைவுப் பூங்கா (தியாகிகள் பூங்கா) உருவாக்கப்பட்டது.

நினைவுத் தூண்

அந்த இடத்தில் நினைவுத் தூண் எழுப்பப்பட்டது. தேவகோட்டை நகராட்சி அலுவலகம் எதிரில் இப்போது கம்பீரத் தோற்றத்துடன் காட்சியளிக்கும் தியாகிகள் நினைவுத்தூண், இன்றைய தலைமுறைக்கு இந்த மண்ணின் வீரதீரத்தை உரைத்துக் கொண்டிருக்கிறது.

 
Articles_3_4

தியாகிகள் ரோடு!

சுதந்திரப் போராட்ட வீரர்களால் கொளுத்தப்பட்ட கோர்ட் ரோடு, இப்போது தியாகிகள் ரோடு என்று அழைக்கப்படுகிறது. இன்றைக்கு இந்தியா முழுவதும் உள்ள மக்கள் சுதந்திரக் காற்றை நிம்மதியாக சுவாசிப்பதற்கு காந்திஜி போராடினார், சுபாஷ் சந்திரபோஸ் போராடினார் என்பதெல்லாம் இருந்தாலும், ஆங்கிலேயர்களை அச்சுறுத்தும் வகையிலும், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டத் தலைவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையிலும், தமது இன்னுயிரை துணிந்து கொடுத்த வீரர்கள் வாழ்ந்த தமிழகத்தில், நாம் வாழ்வதில் பெருமைதான்.